வங்க கடல் பகுதியில் புயல்…! மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம்…வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை:

ங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாற வாய்ப்பு உள்ளதால், மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று ரெட் அலர்ட் கொடுத்து விட்டு, பின்னர் வெயில் காரணமாக அதை வாபஸ் வாங்கிய இந்திய மற்றும் தமிழக வானிலை மையம், தற்போது மீண்டும் புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன்,  வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையாக மாறியுள்ளது. இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறவும் வாய்ப்பு உள்ளது என கூறி உள்ளார்.

ஏற்கனவே மேற்கு மத்திய அரபிக் கடலில் உருவான ருபன் புயல்   மேலும் வலுப்பெற்று ஓமன், ஏமன், வளைகுடாவை நோக்கி நகர்ந்து செல்கிறது.

அதேபோல, வங்கக் கடலில் தாழ்வு மண்டலம் நிலை கொண்டிருந்தது.  இது  ஒரிசாவுக்கு தென்கிழக்கே 560 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. அது தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் புயலாகவும் மாறும் வாய்ப்பு உள்ளது. அப்படிவலுப்பெறும் பட்சத்தில் ஒரிசா மற்றும் வடக்கு ஆந்திர கரையை நோக்கி இந்த புயல் நகரும்.

இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. எனவே மத்திய மற்றும் வடக்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு வரும் 11-ஆம் தேதி வரையும், மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு இன்று முதல் வரும் 13-ஆம் தேதி வரையும் மீனவர்கள் செல்ல வேண்டாம்.

மத்திய வங்கக் கடல் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும். மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றும் வீசக்கூடும். இந்த காற்றின் வேகம் நாளை மற்றும் நாளை மறுநாள் 80 அல்லது 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீச வாய்ப்புள்ளது.