6ந்தேதிக்கு பிறகு புயல் உருவாக வாய்ப்பு: மீனவர்களுக்கு சென்னை வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை:

ரும் 6ந்தேதிக்கு பிறகு தென்கிழக்கு அரப்பிக்கடலில்  புயல் உருவாக வாய்ப்பு இருப்பதால், கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் 5ந்தேதிக்குள் கரை திரும்பும்படி சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடலில் அக்டோபர் 6ஆம் தேதிக்கு பிறகு புயல் உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன்,  தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. திருவாரூர், நெல்லை, தூத்துக்குடி, நாகை, கரூர், மதுரை, அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.

இதனால் வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். சென்னையிலும் நேற்று பகல் நேரத்தில் வெயில் கொளுத்திய நிலையில் காலையில் பல இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.

அக்டோபர் 6ஆம் தேதிக்கு பிறகு தென்கிழக்கு அரபிக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளது. இதனால் ஆழ் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றவர்கள் அக்டோபர் 5ஆம் தேதியே கரைக்கு திரும்பவும் அறிவுறுத்தப்படுகின்றனர். குமரிக்கடல், அரபிக்கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தற்போது தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கைக்கு அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவருவதாகவும்,  இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3 நாட்களுக்கு பரவலாக மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறினார்.

மேலும்,  கடந்த 24 மணி நேரத்தில் மணல்மேல்குடி, தக்கலையில் அதிகளவாக 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.