புயல்!:  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகம் மற்றும் புதுச்சேரி கடல் பகுதிகளில் புயல் காற்று வீசக்கூடும் என்றும் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி கடல் பகுதிகளில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்ததாவது:

வடகிழக்கு வங்கக்கடலில் ஒடிசாவை ஒட்டி உள்ள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. இது வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. ஆனாலும், தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்துக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.

வலுவான தென்மேற்கு பருவக்காற்றானது தென்மேற்கு திசையில் இருந்து மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகம் வரை வீசும். இந்த காற்றின் வேகம் 60 கிலோ மீட்டர் வரை அதிகரிக்கக்கூடும். ஆகவே, தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.

காற்றின் வேகம் காரணமாக அலைகளின் உயரம் அதிகரிக்கும். குறிப்பாக குளச்சல் முதல் தனுஷ்கோடி வரையிலான கடல் பகுதிகளில் அலைகளின் உயரம் 11 அடி முதல் 15 அடி உயரம் வரை அதிகரிக்கக் கூடும். தமிழகத்தின் கடலோர பகுதிகள் மற்றும் வங்கக்கடலின் ஆழமான பகுதிகளில் கடல் கொந்தளிப்பு அதிகமாக இருக்கும்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான தேனி, திண்டுக்கல், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்” என்று அவர் தெரிவித்தார்.