வங்க கடலில் புயல் சின்னம்? சென்னை வானிலை மையம்

சென்னை.

ங்க கடலில் மேலடுக்கு சுழற்சியால் ஆந்திரா-ஒடிசா இடையே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது அடுத்த 24 மணிநேரத்தில் புயலாக மாற வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை  வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை காரணமாக சராசரியான அளவு மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் வங்க கடலில் மேலடுக்கு சுழற்சி காரணமாக காற்றத்தழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது புயலாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது,  வடமேற்கு வங்க கடல் பகுதியில் தென்மேற்கு பருவமழை காலம் முடிந்துவிட்டது. இதேபோல் அரபிக்கடல் பகுதியிலும் தென்மேற்கு பருவமழை முடிவடைந்தது. படிப்படியாக மற்ற இடங்களிலும் தென்மேற்கு பருவமழை  முடிவுக்கு வந்துள்ளது.

இதையடுத்து இன்று ஒருசில நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்ட மேலடுக்கு சுழற்சியால் ஆந்திரா-ஒடிசா கடல் பகுதியில் நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.  அது மேலும் தீவிரம் அடைந்து அடுத்த 24 மணிநேரத்தில் புயல் சின்னமாக மாறும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயல் சின்னமானது வடக்கு ஆந்திரா-தெற்கு ஒடிசா நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் அடுத்த 48 மணி நேரத்திற்கு வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரை பகுதியில் பலத்த மழை பெய்யும்.

புயல் சின்னம் ஒடிசா நோக்கிச் செல்வதால் தமிழகத்துக்கு புயல் பாதிப்பு இருக்காது. அதேசமயம் கடல் சீற்றம் காணப்படும். அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுவையில் பல இடங்களில் பலத்தமழை பெய்யும். 19-ந்தேதி காலை 8.30 மணிவரை பலத்த மழை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.