தர்மயுத்தம் மீதே தடாலடி தாக்குதல்கள்…! ஏழுமலை வெங்கடேசன்

தர்மயுத்தம் மீதே தடாலடி தாக்குதல்கள்…!

சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன்

யாரை, எப்படி வைத்து செய்யும் என்பதை கண்டுபிடிக்கமுடியாது. அதுக்கு பேர்தான் அரசியல். அண்மையில் அதனிடம் சிக்கியிருப்பவர், ஓபிஎஸ். அதாவது அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை முதலமைச்சர் எனப்படும் ஓ.பன்னீர்செல்வம்.

கூர்ந்து கவனித்தால், ஓபிஎஸ் அரசியலில் அண்மைக்காலமாகவே நல்ல தடுமாற்றம் தெரியும். சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம் நடத்தி எடப்பாடியோடு இணைந்தவருக்கு ஏன் இந்த தடுமாற்றம்?

வெளிப்படையாக சொன்னால், எடுக்க வேண்டிய இடத்தில் எடுக்காமல் விட்டுவிட்டு இப்போது திணறுகிறார். ஒபிஎஸ்.

இந்த மூன்றெழுத்து 2017 துவக்கத்தில் முதலமைச்சராய் இருந்தபோது சக்தி வாய்ந்ததாய் திகழ்ந்தது. அதிகார ஆசையில் ஓபிஎஸ் சிடமிருந்த மகுடத்தை, ஜெயலலிதாபோலவே தன்னை நினைத்துக்கொண்டு அதே நடைஉடை பாவனையோடு, சசிகலா பறித்த விதம், ஓபிஎஸ்மேல் அனுதாபத்தை வரவழைத்தது. அதைவிட அப்பல்லோ மர்மத்தால் ஏற்பட்ட கோபம் அனைத்தும் சசிகலாவை சுற்றி சுழற்றி அடித்ததால், அவரை எதிர்த்த ஓபிஎஸ்க்கு அதுவே பலத்தை கூட்டித்தந்தது. சசிகலா எதிர்ப்பு என்ற தாரக மந்திரமே ஒபிஎஸ்சை அதிமுக தொண்டர்கள் மத்தியில் ஒரு போராளியாக காட்டியது.

சசிகலா தயவால் எடப்பாடி முதலமைச்சர் ஆன பிறகும் ஓபிஎஸ் நடத்திய வேள்விக்கு பாஜக மேலிடம் நன்றாகவே எண்ணைய் ஊற்றி வளர்த்தது. நினைத்தபோதெல்லாம் ஓபிஎஸ்சால் பிரதமர் மோடியை சந்தித்து பேச முடியும் என்கிற அளவுக்கு நிலைமை போனது.. அப்படிப்பட்ட ஓபிஎஸ்…, சசிகலா உள்ளே போகும் அளவுக்கு சூழலை மாற்றிய ஓபிஎஸ், எடப்பாடியோடு கை கோர்க்கும் நேரத்தில் கோட்டைவிட்டார்.

நீங்கள் முதலமைச்சராகவே இருந்துவிட்டுபோங்கள், எனக்கு ஆட்சியில் பங்கே வேண்டாம் என்று சொல்லிவிட்டு பொதுச்செய லாளர் பதவியை பெற்றிருக்கலாம். ஏற்கனவே முதலமைச்சர் பதவியை மூன்று முறை வகித்துவிட்டதால் அவரை கட்சியினர் தகுதியான தலைவராக ஏற்க ஆரம்பித்திருப்பார்கள். பதவி ஆசை இல்லாதவர் என்று இமேஜோடு, துணை முதலமைச்சர் என்ற லெவலுக்கு இறங்கிவர ஆசைப்படாதவர் என்ற பிம்பமும் வலிமையாக ஏற்பட்டிருக்கும்.

ஆனால் ஓபிஎஸ்சோ, ஆட்சியிலும் பங்கு கேட்டார், கட்சியிலும் பங்கு கேட்டார். இரண்டையும் பெற்று இரண்டாங்கெட்டான் லெவலுக்கு போனார். அன்றைக்கே தகர்ந்துபோனது ஜெயலலிதாவால் நெம்பன் ஒன் விசுவாசி என வைத்துபார்க்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் என்கிற பிம்பம்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நின்று விளையாட ஆரம்பித்ததில், முதல் பியூஸ் கேரியராக பிரதமர் மோடியிடம் இருந்து கிடைத்துவந்த முக்கியத்துவம் ஓபிஎஸ்க்கு துண்டிக்கப்பட்டது. எதுவாக இருந்தாலும் முதலமைச்சரோடு, அல்லது முதலமைச்சர் வழியாக வரவும் என்று மடையே மாற்றப்பட்டது.  ஒபிஎஸ் ஆதரவாளர்கள் யாருமே தமிழக அரசின் அங்கத்தில் முக்கியத்துவம் கொடுத்து சேர்க்கப்படவில்லை. பழைய அமைச்சர் மா.ஃபா பாண்டியராஜனுக்கு மட்டுமே அமைச்சர் பதவி.

ஜெயலலிதாவால் தொடர்ந்து ராஜ்ய சபா எம்பியாக்கப்பட்ட மைத்ரேயன் ஓபிஎஸ் ஆதரவாளார். அவரின் இன்றைய நிலைமை என்ன? இப்படி எல்லாமே ஒன்றன்பின் ஒன்றாக சரிவை கண்ட நிலையில் தன் மகனை முன்வைத்தாவது பாஜக மேலிடத்திடம் பாசத்தை காட்டிக்கொண்டே இருக்கவேண்டிய அளவுக்கு போனது ஓபிஎஸ் நிலைமை.

பாஜக எந்த மாநிலத்தில் அரசியல் ரீதியாக வெற்றிவாகை சூடினாலும், ஓடிச்சென்று வாழ்த்து சொல்வதில் முதல் அதிமுக தரப்பு ஆளாய் ஓபிஎஸ் குடும்பம். இப்படிப்பட்ட சூழலில்தான் விக்ரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுகவின் வெற்றி யாருமே எதிர்பார்க்காத நிலையில், சசிகலாவை கட்சியில் சேர்ப்பதுபற்றி கட்சிதான் முடிவு செய்யும் என்று ஒரு பிட்டை கொளுத்திப் போட்டார் ஓபிஎஸ்.

எனக்கு இல்லாவிட்டாலும் பரவாயில்லை. நீங்களும் என்னைப்போல் ஒரு நாள் கும்பலோடு கும்பலாய் இருந்தால் போதும் என்று பயம் காட்ட நினைத்தாரோ என்னவோ? எடப்பாடியே சசிகலா மேட்டரை கிளராத நிலையில், ஒபிஎஸ்சின் இந்த வெடி சலசலப்பை உண்டுபண்ணாமல் இல்லை. வழக்கம்போல ஆளாளுக்கு பதில் சொல்ல ஆரம்பித்தார்கள்.

இப்போதைக்கு கிளைமாக்ஸ்சாக நடந்துள்ள விஷயங்கள். அதிமுக பொதுக்குழு நவம்பர் 25 கூடியது.. ஓபிஎஸ்க்கு முன்னாடியே சசிகலாவுக்கு எதிராக அதிமுகவில் சாட்டையை கையில் எடுத்த முதல் நபர் மூத்த தலைவரான கே.பி முனுசாமி. ‘’அவங்க வருவாங்க எல்லாரும் அவுங்க பின்னாடி போயிடுவாங்க இவங்க வருவாங்க எல்லாரும் இவங்க பின்னாடி போயிடுவாங்க அப்படியெல்லாம் எதுவும் கிடையாது’’ என்று பொட்டில் அறைந்தாற்போல சொன்னார்.

அமைச்சர் வேலுமணியோ, அடுத்த சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளையும் வென்று முதலமைச்சர் எடப்பாடியிடம் சமர்ப்பிப்போம் என்றார். அதாவது எடப்பாடிதான் அதிமுக முதலமைச்சர் வேட்பாளர். மற்ற யாரும் கிடையாது என்பதின் தொணி அது.

அடுத்து அதிமுக கட்சி பதவிக்கு போட்டியிடுவது பற்றிய விதிகள் திருத்தம். கட்சியில் ஐந்து வருடம் தொடர்ந்து உறுப்பினர்களாக இல்லாதவர்கள் கட்சித்தேர்தலில் போட்டியிடமுடியாது. என்பது புதிய விதி.

டிடிவி தினகரன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுவிட்டவர். சசிகலாவோ உறுப்பினர் பதவியிருந்து நீக்கப்படாதவர். ஆனால் உறுப்பினராக புதுப்பித்துக்கொள்ள தவறியவர். ஆகையால் இருவருக்குமே தலைமை பீடத்திற்கான வாயில்கள் கிடையவே கிடையாது என்பதற்கான அர்த்தம் இது. இதை நாளை வசதிக்கேற்ப மாற்றிக்கொள்ளலாம் என்பது வேறுகதை. ஆனால் இன்றைக்கு இதுதான் நிலைமை.

உள்ளாட்சி தேர்தல் நேரத்தில் ஒபிஎஸ் கை ஓங்கக்கூடாது என்று ஈபிஎஸ் நினைக்காமல் இருப்பார் என்று நம்பினால் அவர் ஒரு அப்பாவியாகவே இருக்கமுடியும்..

அதிமுக பொதுக்குழு நடந்த அதே நாளில்தான், ஓபிஎஸ்க்கு எதிரான இன்னொரு அதிரடி தாக்குதல். ஆடிட்டரும் துக்ளக் ஆசிரியரு மான குருமூர்த்தி, ஓ.பன்னீர்செல்வத்தை வம்புக்கிழுத்தார். சசிகலா முதலமைச்சராக பதவியேற்க விருந்த தருணத்தில் நடந்த ஒரு சம்பவத்தை சொல்லி, நீங்களாம் ஆம்பிளைங்களா என்று அப்போது ஓ.பன்னீர்செல்வதை பார்த்து கேட்டதாக நக்கலடித்தார். அதைவிட இன்னும் ஒருபடி மேலேபோய், சசிகலாவுக்கு எதிராக ஜெயலலிதா சமாதியில் தியானம் இருக்கச்சொல்லி வழிகாட்டியதே நான்தான் என்றும் குருமூர்த்தி சொன்னார்.

இதற்கு அதிமுகவினர் ரியாக்ட் செய்ததைவிட தினகரன், திமுக தரப்பினர்தான் அதிகமாக ஓபிஎஸ்க்கு எதிராய் களமாடினார்கள். தாறுமாறாய் விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் அள்ளிஅள்ளி கொட்டினார்கள்.

அதிமுக தரப்பில் அமைச்சர் ஜெயகுமார் மட்டுமே குருமூர்த்தியை இரு பேட்டிகளில் கடுமையாக விமர்சித்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வாயே திறக்கவில்லை.. ஓபிஎஸ்சும் வாய்பேசவில்லை.

முதலமைச்சராக இருந்தவர், சரியான முடிவை எடுக்காததால் தர்மயுத்தத்தின் இறுதியில் துணை முதலமைச்சர் என்ற லெவலுக்கு இறங்கினார், எடப்பாடிக்கு பின்வரிசையிலும் போனார்.

எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒரு பக்கம் திறமையான ஆட்சியாளர். அரசியல் கில்லாடி என்றெல்லாம் … இப்போது நடப்பதை யெல்லாம் பார்த்தால் ஓபிஎஸ்க்கு எதிராக இரண்டாவது சுற்று ஆரம்பித்திருப்பதுபோல் தோன்றுகிறது. இது எதை நோக்கி போகும் என்பதை இனிதான் பார்க்கவேண்டும்.

குறிவைத்து தாக்கப்படுகிறோம் என்பது தெரியும். ஆனால் யார் சொல்லி எதற்காக தாக்கப்படுகிறோம் என்பது மட்டும் புரியாது. அதுதான் அரசியல்.