சமீபத்தில் நடைபெற்ற இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை போட்டியில், இலங்கை அணி வெற்றிபெற்றது. அப்போட்டியில் மேற்கிந்திய தீவுகள் சார்பாக 103 பந்துகளில் 118 ரன்களை அடித்தார் நிகோலஸ் பூரான்.

ஒரு வீரர் சதமடிப்பது பெரிய அதிசயமில்லைதான். ஆனால், பூரான் தொடர்பாக ஒரு சோகக் கதை இருக்கிறது.

இந்த 2019ம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில்தான், சர்வதேச ஒருநாள் போட்டிகளிலேயே அறிமுகமானார் பூரான் என்பது குறிப்பிடத்தக்கது. இவர், 9 ஒருநாள் போட்டிகளிலும், 11 டி-20 போட்டிகளிலும் ஆடியுள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டு இவருக்கு 19 வயதிருக்கையில், ஒரு கார் விபத்தில் சிக்கி, இவரின் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இவரின் கிரிக்கெட் எதிர்காலமே கேள்விக்குறியாய் மாறிப்போனது.

ஆனால், கால்களில் அறுவை சிகிச்சைகளை செய்துகொண்டு, கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு, தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியுடன் போராடி, உலகக்கோப்பை அணியில் இடம்பெற்று, முடிந்தவரை சிறப்பாக செயல்பட்டு, தற்போது, நெருக்கடியான நேரத்தில் ஒரு சிறப்பான சதத்தையும் பதிவுசெய்ததுதான் இந்த 23 வயது இளைஞரின் சிறப்பு!