அக்னி நட்சத்திரம் பிறந்த கதை
மே 4-ந் தேதி தொடங்கி 29-ந் தேதி வரை நீடிக்கிறது. வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
முன்னொரு காலத்தில் 12 வருடங்கள் இடைவிடாமல் நெய்யூற்றி சுவேதகி யாகம் செய்தார்கள்.
தொடர்ந்து நெய் உண்டதால் அக்னி தேவனுக்கு மந்த நோய் ஏற்பட்டது.
அவன் உடம்பில் சேர்ந்த கொழுப்பைக் குறைக்க, ஒரு காட்டை அழித்து அந்த நெருப்பைத் தின்றால்தான் தீரும்.
எனவே அக்னி பகவான் காண்டவ வனத்தைத் தேர்ந்தெடுத்தான்.
அவ்வனத்தில் உள்ள அரக்கர்களும் கொடிய விலங்குகளும் தாவரங்களும் சாந்தமான விலங்குகளும் தங்களை அக்னி தேவனின் அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என வருணதேவனிடம் முறையிட்டன.
“அக்னி உங்களை ஒன்றும் செய்யாமல் நான் காக்கிறேன்’ என வருணன் கூறினான்.
இதையறிந்த அக்னி கிருஷ்ணரிடம் ஓடி, “நான் காண்டவ வனத்தை அழிக்க முடியாமல் வருணன் கனமழை பெய்விக்கிறான். என்னைக் காப்பாற்றுங்கள்’ என முறையிட்டான்.
கிருஷ்ணன் அர்ச்சுனனைப் பார்த்தார். அர்ச்சுனன் அம்புகளைச் சரமாரியாக எய்து வானை மறைத்து சரக்கூடு கட்டினான்.
அப்போது அக்னி தேவன் தன் ஏழு நாக்குகளால் வனத்தை எரிக்க முற்பட்டான்.
அப்போது கிருஷ்ணர், “21 நாட்கள்தான் உனக்கு அவகாசம். அதற்குள் உன் பசியைத் தீர்த்துக் கொள்’ என்றார்.
அதன்படி அக்னி காண்டவ வனத்தை அழித்து விழுங்கி, தன் பசி தணிந்த அந்த 21 நாட்கள்தான் அக்னி நட்சத்திர தினம் என்றும் கத்திரி வெயில் என்றும் கூறுகின்றனர்.
அக்னி நட்சத்திர நாளில் முருகனையும், மீனாட்சி அம்மையையும் வழிபடுவது நல்லது.
பரணிக்குரிய துர்க்கையையும், ரோகிணிக்குரிய பிரம்மனையும் வழிபடுவதுடன், கிருத்திகைக்குரிய தேவதை அக்னியையும் வழிபட்டால் நற்பலன் கிடைக்கும்.
அகமும் புறமும் குளிரும் வண்ணம் தருமம் செய்து இறைவனை வணங்கி வழிபாடு செய்து, கத்திரி வெயிலில் கடவுள் அருள் பெறலாமே.