பக்தரைத் தேர்ந்தெடுத்த பாபா! ஓர் அருளாடல்

பக்தரைத் தேர்ந்தெடுத்த பாபா! ஓர் அருளாடல்

பாபா எப்போது, யாரை தன் பக்தராக ஏற்க விரும்புகிறாரோ, அப்போதே அந்தப் பக்தர் எவ்வளவு தொலைவில் இருந்தாலும், சாயிநாதர் பாபாவின் பாதத்தில் தஞ்சம் அடைந்துவிடுவார்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மாவட்டத் துணை அதிகாரியாக இருந்த ஒருவரை எப்படித் தன்னிடம் அழைத்துக்கொண்டார் என்பதைப் பின்வரும் கதை நமக்கு விவரிக்கிறது.

`நானா சந்தோர்க்கர்’ என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர், நாராயண கோவிந்த சந்தோர்க்கர். இவர் குடும்பம் பழைமையும் பெருமையும் வாய்ந்தது. வைதீகக் குடும்பத்தில் பிறந்த இவர், கல்வி கற்றிருந்தாலும், தன் வைதீக மரபிலிருந்து மாறாமல் இருந்தார். இவர் குடும்பம், அனைவரும் போற்றும்படி கல்வியும் செல்வமும் நிறைந்து விளங்கியது.

இவர் மாவட்ட துணை அதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருந்தபோது, குல்கர்ணி என்ற பாபாவின் பக்தர் இவருக்குக் கீழே வேலை பார்த்தார்.

குல்கர்ணி ஒருமுறை பாபாவைத் தரிசிக்க வந்திருந்தபோது பாபா அவரிடம், “நானாவை நான் பார்க்க விரும்புவதாகக் கூறி, அவரை இங்கே அழைத்து வா!” என்று கூறினார். இதைக் கேட்டதும் குல்கர்ணி ஒரு நிமிடம் அதிர்ச்சியடைந்தார். அவர் தன்னுள் ‘இவரோ சாதாரண பக்கிரி. ஆனால் நானாவோ மாவட்ட துணை அதிகாரி. இவரைக் காண நானா எப்படி வருவார்?’ என்று நினைத்தார். ஆனாலும், பாபாவிடம் தான் கொண்டிருந்த பக்தியின் காரணமாக குல்கர்ணி பாபாவின் விருப்பத்தை நானாவிடம் கூறினார்.

இதைக் கேட்ட நானா முதலில் கோபம்கொண்டார். `வைதீக பிராமணரான தன்னை, ஒரு முஸ்லிம் பக்கிரி ஏன் காண விரும்ப வேண்டும்?’ என்று எண்ணினார். அவர் குல்கர்ணியிடம் `என்னால் உனக்கு ஏதோ வேலை ஆகவேண்டியிருக்கிறது. அதனால் என்னை நீ ஷீரடிக்கு அழைக்கிறாய்’ என்று கடிந்துகொண்டார்.

ஆனால், குல்கர்ணி மீண்டும் மீண்டும் வற்புறுத்தவே, நானா ஷீரடிக்கு வரச் சம்மதித்தார். சாமிநாதரைத் தரிசித்த மாத்திரத்திலேயே அவர் பாபாவால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். எனினும், அதை வெளிக்காட்டாத நானா, பாபா தம்மை அழைத்த காரணத்தைக் கேட்டார்.

பாபா, “நானா… பல்வேறு பெரிய அதிகாரிகள் இருக்கும்போது நான் எதற்குக் குறிப்பாக உன்னை மட்டும் அழைக்க வேண்டும்? உனக்கும் எனக்கும் இதற்கு முன்னர் நான்கு ஜன்மங்களாகத் தொடர்பு இருக்கிறது. அதை இந்த ஜன்மத்திலும் தொடர வேண்டும் என்பதற்காகவே நான் உன்னை அழைத்தேன்” என்று கூறினார்.

மேலும், நானா தம்மை அடிக்கடி நினைவுகொள்ள வேண்டும் என்றும், தம்மை அடிக்கடி வந்து பார்க்க வேண்டும் என்றும் கூறினார்.

இப்படி பாபா, நானாவைத் தன் பக்தராக ஏற்றுக்கொண்டார்.

பாபாவால் அழைக்கப்பட்டு, பாபாவின் பக்தராகவே மாறிவிட்ட நானாவின் வாழ்வில் மற்றோர் அற்புதம் பாபாவின் அருளால் நிகழ்ந்தது. அதன் மூலம் நானாவின் மீது பாபா எத்தனை கருணை கொண்டிருந்தார் என்பது விளங்கும்…

நானாவுக்கு மலையின் மீதிருக்கும் கடவுளரை வணங்குவதில் விருப்பம் அதிகம். ஒருமுறை அவர் ஷீரடியிலிருந்து சுமார் நாற்பது மைல் தொலைவிலிருக்கும் அரிச்சந்திர மலைக்குச் சென்றார். அந்த மலையிலிருக்கும் தேவியை வணங்க வேண்டும் என்பது அவரது நீண்ட நாள் ஆசை.

ஒருநாள் அவர் தனக்குக் கீழ் பணிபுரியும் ஓர் அதிகாரியை அழைத்துக்கொண்டு அந்தக் கோயிலுக்குச் சென்றார்.

அவர்கள் மலையில் கிட்டத்தட்டப் பாதித் தொலைவைக் கடந்தநிலையில் இருவருக்கும் மிகுந்த தாகம் ஏற்பட்டது. நானாவும், உடன் வந்த அதிகாரியும் நீர் அருந்தாமல் ஓர் அடியும் எடுத்துவைக்க முடியாது என்று அங்கேயே ஒரு பாறையின் மீது அமர்ந்துவிட்டனர். அது கோடைக்காலம் என்பதால், அந்த மலைப்பகுதியில் குடிநீர் கிடைப்பது மிகவும் கடினமானதாக இருந்தது.

அப்போது நானா, தன்னுடன் வந்த அதிகாரியிடம், “நான் புறப்படுவதற்கு முன்னர் பாபாவிடம் விடைபெறாமல் வந்ததால் தான் எனக்கு இந்த நிலை வந்தது’’ என்று கூறி வருந்தினார். ஆனால், உடன் வந்த அதிகாரி இதைக் கேட்டு நகைத்தார். மேலும், “பாபாவிடம் விடைபெற்று வந்திருந்தால், இந்தக் கோடைக்காலத்தில் மழை பொழியுமா அல்லது இந்த மலையில் நீரூற்றுதான் உருவாகுமா?’’ என்று கூறினார். இதைச் சிறிதும் பொருட்படுத்தாத நானா, தன் மனதுக்குள் பாபாவைப் பிரார்த்தித்தார்.

அப்போது ஷீரடி துவாரகாமாயியில் இருந்த பாபா அங்கிருந்தவர்களிடம், “நானா, அரிச்சந்திர மலையில் தண்ணீரின்றி தவிக்கிறான்…’’ என்று கூறி, பின்னர் தன் வழக்கமான உரையாடலைத் தொடர்ந்தார்.

அங்கிருந்தவர்களுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. எனினும், அவர்கள் எதைப் பற்றியும் பாபாவிடம் கேட்கவில்லை.

அதே நேரத்தில் அரிச்சந்திர மலையில் இருந்த நானாவிடம் ஒரு வேடன் வந்தான். அவனை எதிர்பார்க்காத நானா, “இங்கு அருகில் ஏதாவது நீரூற்று இருக்குமா?’’ என்று கேட்டார். இதைக் கேட்ட வேடன், “நீங்கள் அமர்ந்திருக்கும் பாறையின் அடியில் சுத்தமான, சுவையான நீர் இருக்கிறது’’ என்றான். உடனே, நானாவும் அதிகாரியும் சேர்ந்து அந்தப் பாறையை நகர்த்தினர். அங்கே, தூய்மையான தண்ணீர் இருந்தது. இருவரும் தாகம் தணியும்வரை தண்ணீர் அருந்திவிட்டுத் திரும்பியபோது, அங்கு அந்த வேடன் இல்லை.

தேவியைத் தரிசித்ததும் நானா, பாபாவின் தரிசனத்துக்காக ஷீரடிக்கு வந்தார். பாபா அவரிடம், “நானா உனக்குத் தாகம் ஏற்பட்டவுடன் தண்ணீர் அளித்தேனே… அருந்தினாயா?’’ என்று வினவினார். இதைக் கேட்ட நானா, மிகுந்த மகிழ்ச்சியோடு பாபாவின் பாதங்களில் விழுந்தார்.

பாபாவை நாம் முழுமையாக நம்பி, அவரைச் சரணடைந்தால் நமக்குத் தேவையானவற்றை உரிய நேரத்தில் அளிப்பார் என்பது இந்த நிகழ்ச்சியின் மூலம் விளங்குகிறது. எனவே, பாபாவைச் சரணடைந்து அவரின் அருளைப் பெறுவோமாக!