மும்பை

மும்பை ஐஐடி வளாகத்தில் சுற்றித் திரியும் மாடுகள் வகுப்பறையின் உள்ளே  புகுவது வழக்கமாகி உள்ளது.

 

நாடெங்கும் மாடுகள் ஆதரவின்றி விடப்படுவது அதிகரித்து வருகின்றது.   இந்த ஆதரவற்ற மாடுகள் பொதுவாக தங்க இடமின்றி அலைந்து கிடைத்த இடங்களில் தங்கத் தொடங்கி விடுகின்றன.     இவ்வாறு விடப்படும் கால்நடைகள் பொதுவாக பெரிய கல்வி வளாகங்களில் புகுந்து விடுகின்றன.

அவ்வகையான இடங்கள் கால்நடைகள் தங்க மற்றும் மேய்ச்சலுக்கு ஏற்ற இடமாக அமைந்து விடுவதால் பல கல்வி நிலையங்கள் ஆதரவற்ற கால்நடைகள் சரணாலயமாக அமைந்து விடுகின்றன.   அவ்வாறு மும்பை ஐஐடி வளாகம் பெரிய அளவில் அமைந்துள்ளதால் பல ஆதரவற்ற கால்நடைகள் இந்த வளாகத்தினுள் புகுந்து விடுகின்றன.

அவ்வாறு நுழைந்த கால்நடைகளில் சில வகுப்பறைக்குள் நுழைந்து விடுகின்றன.   இவ்வாறு இதுவரை இரண்டு அல்லது மூன்று முறைக்கு மேல் நிகழ்ந்துள்ளது.   கடந்த ஜூலை 11 ஆம் தேதி வகுப்பில் இருந்த கால்நடையை ஒரு கேரள மாணவர் வீடியோ எடுத்து வெளியிட்டதால் இச்செய்தி பரபரப்பை அடைந்தது.

மும்பை ஐஐடி வளாகம் எங்கும் கால்நடைகள் புகுந்துள்ளன. இவை மாணவர் விடுதி, வகுப்பறை போன்ற இடங்களில் புகுவதால் தங்கள் பாதுகாப்பு குறித்து மாணவர்கள் மிகவும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.   ஐஐடி நிர்வாக அதிகாரிகள் மும்பை மாநகராட்சியை தொடர்பு கொண்டு சில கால்நடைகளை அகற்றினாலும் தொல்லை இன்னும் தொடர்ந்து வருகிறது.

அதையொட்டி ஐஐடி நிர்வாகம் ஒரு பசு பாதுகாப்பு மையம் அமைப்பது குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.    இவ்வாறு நிகழ்ந்தால் மனிதனுக்கும் விலங்குக்கும் நடந்த போட்டியில் மிருகம் வென்றுள்ளது எனக் கூறலாம்.