ஃபரூக்காபாத்

த்தரப்பிரதேச மருத்துவமனை அறுவைச் சிகிச்சை அரங்கினுள் நுழைந்த தெரு நாய் பிறந்த குழந்தையைக் கொன்ற சம்பவம் பரபரப்பை உண்டாக்கி உள்ளது

உத்தரப்பிரதேச மாநிலம் ஃபரூக்காபாத் நகரில் ரவிக்குமார் என்னும் இளைஞர் தனது மனைவி கஞ்சன் என்பவருடன் வசித்து வருகிறார்.  நிறைமாத கர்ப்பிணி ஆன தனது மனைவியை அவர் அதே நகரில் உள்ள ஆவாஸ் விகாஸ் காலனியிலுள்ள ஆகாஷ் கங்கா மருத்துவமனைக்கு மகப்பேற்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.   கஞ்சனை பரிசோதித்த மருத்துவமனை மருத்துவர்கள் அவருக்குச் சுகப்பிரசவம் நடைபெறும் என கூறி உள்ளனர்.

ஆனால் சிறிது நேரம் கழித்து சிசேரியன் அறுவைச் சிகிச்சை நடத்த வேண்டும் எனக்கூறவே ரவிக்குமார் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.   கஞ்சன் அறுவை சிகிச்சை அரங்கினுள் அழைத்துச் செல்லப்பட்டார்.  அதன் பிறகு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தது எனக் கூறி கஞ்சனை வெளியில் அழைத்து வந்து படுக்கையில் படுக்க வைத்துள்ளனர்.   அறுவை சிகிச்சை அரங்கினுள் குழந்தை இருந்தது.

திடீரென மருத்துவமனை ஊழியர் ஒருவர் ஓடி வந்து ஒரு தெரு நாய் அறுவை சிகிச்சை அரங்கினுள் நுழைந்து விட்டதாகக் கூச்சல் போட்டுள்ளார்.    அதிர்ந்து போன ரவிக்குமார் உள்ளே ஓடிச் சென்று பார்த்தபோது அவருடைய குழந்தை நாய்க்கடி காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.  அசைவற்று கிடந்த குழந்தையைக் கடிக்க மீண்டும் நாய் அருகில் சென்றதைக் கண்டு ரவிக்குமார் கூச்சல் இட்டுள்ளார்.

அதைத்தொடர்ந்து மருத்துவமனை ஊழியர்கள் அங்கு வந்து நாயை விரட்டி விட்டு குழந்தையைச் சோதித்த போது குழந்தை இறந்தது தெரிய வந்தது.   மருத்துவமனை நிர்வாகம் ரவிக்குமாரிடம் நடந்தவற்றுக்கு வருத்தம் கூட தெரிவிக்காமல்  அவருக்கு பணம் கொடுத்து இந்த விவகாரத்தை இத்துடன் விட்டு விடுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.   மேலும் அவர் குழந்தை இறந்தே பிறந்ததாகவும் சொல்லச் சொல்லி வற்புறுத்தி உள்ளனர்.

அதை ஏற்காத ரவிக்குமார் இது குறித்து புகார் அளித்துள்ளார்.   அம்மாவட்ட நீதிபதி மன்வேந்திர சிங், “இது குறித்து நடந்த முதல் கட்ட விசாரணையில் மருத்துவமனையின் அலட்சியத்தால் நாய் அறுவை சிகிச்சை அரங்கில் நுழைந்து குழந்தையைக் கொன்றது தெரிய வந்துள்ளது.  இது குறித்து மருத்துவர்கள் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு மேலும் விசாரணை நடந்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

ஃபரூக்காபாத் காவல்துறையினர் மருத்துவமனை உரிமையாளர் விஜய் படேல் மற்றும் ஊழியர்கள் மீது வழக்கு பதிந்துள்ளனர்.   இதற்கிடையில் விசாரணையில்  இந்த மருத்துவமனை சரியான ஆவணம் இன்றி நடப்பது தெரிய வந்துள்ளது.   அதையொட்டி மருத்துவமனைக்கு மாவட்ட நீதிபதி உத்தரவின் பேரில் சீல் வைக்கப்பட்டுள்ளது.