மன அழுத்தம் நீங்கியது: கனிமொழி

சென்னை,

2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் இருந்து விடுதலை பெற்றுள்ளதால் 7 ஆண்டு மன அழுத்தம் நீங்கிவிட்டது என்று தி.மு.க எம்.பி கனிமொழி மகிழ்ச்சியுடன் கூறினார்.

கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த அலைக்கற்றை ஊழல் வழக்கில்,  குற்றம் சாட்டப்பட்டி ருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க தலைவர் கருணாநிதியின் மகளும் எம்.பி.யுமான கனிமொழி உட்பட அனைவரையும் விடுதலை செய்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பளித்தார்.

இந்தத் தீர்ப்பைக் கேட்டு தமிழகம் முழுவதும் தி.மு.கவினர் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி, 7 ஆண்டு கால மன அழுத்தம் நீதி, நியாயம் வென்றதால் நீங்கி விட்டது.

பெரிய அழுத்தம் இருந்த நிலையில் தற்போது நிம்மதி கிடைத்துள்ளது. வழக்கில் எந்தவித உண்மையும் இல்லை என்பது தீர்ப்பின் மூலம் நிரூபணமாகியுள்ளது.

தீர்ப்பையடுத்து தீவிர அரசியலில் ஈடுபடுவேன். 2ஜி அலைக்கற்றை வழக்கை பொய் வழக்கு என தி.மு.க கூறி வந்ததற்கு தீர்வு கிடைத்துள்ளது.

சி.பி.ஐ மேல்முறையீடு செய்தால் அதை எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம். தளபதி மு.க.ஸ்டாலின் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

அதேபோல் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் வாழ்த்து தெரிவித்தார்” என்றார்.

2ஜி வழக்கில் மேல்முறையீடு செய்யப்படும் என்று சுப்பிரமணியன் கூறியிருக்கிறார். இதுகுறித்து உங்கள் கருத்து என்ன என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

இதற்குப் பதில் அளித்த கனிமொழி, “சந்திப்போம்” என்று ஒரு வார்த்தையில் பதில் அளித்தார்.