யுடியூப் சேனலில், ஆபாசமாக பேட்டிகளை ஒளிபரப்பினால் கடும் நடவடிக்கை: சென்னை போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை

சென்னை: யுடியூப் சேனலில், ஆபாசமாக பேட்டிகளை ஒளிபரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

சென்னை பெசன்ட் நகர் கடற்கரைக்கு சென்ற பெண்களிடம், ஆபாச கேள்வி கேட்டு அதை ஒளிபரப்பிய, யூடியூப் சேனல் உரிமையாளர் தினேஷ்குமார், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அஜய்பாபு, கேமரா மேன் அசேன்பாஷா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந் நிலையில், யுடியூப் சேனல்களுக்கு சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: வரும் நாட்களில், யுடியூப் சேனலில், ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேட்டிகளை ஒளிபரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆபாசமான வீடியோக்களை உடனடியாக நீக்க வேண்டும். யுடியூப் சேனல்களையும், அவற்றின் வீடியோக்களையும் போலீசார் கண்காணிக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.