திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பரவலை தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து காணப்பட்டாலும், கேரளாவில் மட்டும் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. அங்கு இதுவரை 9 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் மறுஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது:

கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் மறு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கவும், கொரோனா நெறிமுறைகளை பின்பற்றுவதை கண்காணிக்க காவல்துறையினரை நியமிக்கலாம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு மண்டலங்களில் மிகவும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். பிப்ரவரி 15க்குள் நோய் பரவலை குறைக்க அரசு செயல்பட்டு வருவதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.