ஹைதராபாத்: வேலைநிறுத்தம் தொடர்ந்தால், போக்குவரத்து கழகத்தை மூடுவதை தவிர வேறு வழியில்லை என்று தெலுங்கானா முதலமைச்சர் சந்திர சேகர் ராவ் கூறியிருக்கிறார்.

தெலுங்கானாவில், அரசு போக்குவரத்து கழகத்தை அரசு துறையாக மாற்ற வேண்டும், தனியார் மயமாக்க கூடாது என்பன உள்ளிட்ட 26 கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் நீடித்து வருகிறது.

போராட்டத்தில் இறங்கியிருக்கும் ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் கெடு விதித்திருந்தார். பணிக்கு திரும்பாத 48 ஆயிரம் ஊழியர்களை நீக்கி அதிரடி காட்டினார். 2 போக்குவரத்து ஊழியர்கள் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து போராட்டம் தீவிரமடைந்தது.

இந் நிலையில், போராட்டம் தொடர்ந்தால், போக்குவரத்து துறையை மூடுவதை தவிர வேறு வழியில்லை என்று முதலமைச்சர் சந்திர சேகர் ராவ் கூறி இருக்கிறார். அவர் மேலும் தெரிவித்து இருப்பதாவது:

இனி பழைய போக்குவரத்து கழகம் என்பது கிடையாது. கூடிய விரைவில் 7,000 தனியார் பேருந்துகள் மக்களின் போக்குவரத்து வசதிக்காக இயக்கப்படும். குறைந்த கட்டணத்தில் பேருந்துகள் இயங்கும்.

போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தை எதிர்க்கட்சிகள் தூண்டி வருகின்றன. போக்குவரத்து கழக யூனியன் தலைவர்கள், தேர்தலில் ஓட்டு பெற இவ்வாறு செயல்படுகிறார்கள் என்றார்.