சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஒருவர் பலி, பலர் படுகாயம், மீட்புப்படையினர் விரைவு

பெய்ஜிங்: சீனாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.

அந்நாட்டின் ஜிங்ஸி நகரத்தில் 5.2 என்ற ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவானது. குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சி பிராந்தியத்தில் காலை 9:18 மணியளவில், 10 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டது.

நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த சில மணி நேரங்களில், டாக்சின் பகுதியில் அதிர்வுகள் உணரப்பட்டதாக வானிலை மையம் அறிவித்திருக்கிறது. நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள், வீடுகளை விட்டு வெளியேறினர்.

பல இடங்களில் வீடுகளில் விரிசல்கள் விழுந்தன. கட்டிடங்கள் குலுங்கியதால் அனைவரும் பீதி அடைந்தனர். பலர் பீதி விலகாமல் சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். சில இடங்களில் பாறைகளும் உருண்டு விழுந்திருக்கின்றன.

கட்டிட இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர். நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு படையினர் விரைந்திருக்கின்றனர்.