டில்லி:

ள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இந்தி திணிப்பு சர்ச்சைக்கு தமிழகம் உள்பட நாடு முழுவதும் எழுந்த கடுமையான எதிர்ப்பு காரணமாக, தான் அவ்வாறு கூற வில்லை என்று பின்வாங்கி உள்ளார்.

இந்தி மொழி அதிகாரப்பூர்வ மொழியாக அங்கீகரிக்கப்பட்ட நாளான கடந்த செப்டம்பர் 14-ம் தேதியன்று, டிவிட் பதிவிட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா,  இந்தியாவின் அடையாளமாக ஒருமொழிதான் இருக்க வேண்டும் என்பது முக்கியம். இன்றுள்ள நிலையில், நாட்டில் உள்ள அனைவரையும் ஒரு மொழியால் ஒருங்கிணைக்க முடியும் என்றால் அது அதிகமான மக்களால் பேசப்படும் இந்தி மொழியால் மட்டுமே முடியும் என்று தெரிவித்து இருந்தார்.

அமித்ஷாவின் கருத்துக்கு தமிழகத்தில் திமுக உள்பட அனைத்து தமிழக அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. மேலும் பாஜக ஆளும் கர்நாடகம் மற்றும் தெலுங்கானா, மேற்கு வங்கம் உள்பட பல மாநிலங்கள் கடும் எதிர்ப்பி தெரிவித்தனர். பிறமொழி பேசும் மக்கள் மீது இந்தியை திணிக்கக் கூடாது என அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இவை அனைத்துக்கும் மேலாக திமுக, நாளை தமிழகம் முழுவதும் போராட்டத்தை அறிவித்தது. பல இடங்களில் மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர். இந்த நிலையில், தான் அவ்வாறு கூறவில்லை என்று அமித்ஷா பின்வாங்கி உள்ளார்.

பாஜக அரசு பதவி ஏற்றது முதலே மக்கள் விரோத போக்கை கையில் எடுத்து அமல்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது. புதிய கல்விக்கொள்கை, நீட், வாகன அபராதம், ஜிஎஸ்டி என சமானிய மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளேயே தொடர்ந்து வருகிறது.

சமீப காலமாக இந்தி தொடர்பான கருத்துக்களையும் முன்வைத்து மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அமித்ஷாவின்  ஒரே தேசம் ஒரே மொழி; இந்தியே இந்தியாவின் பொதுமொழி என உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சு இந்தி பேசாத மாநிலங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

மக்களின் கடுமையான எதிர்ப்பு காரணமாக  தான் அப்படி பேசவில்லை, தனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டு உள்ளதாக  பல்டி அடித்துள்ளார் அமித்ஷா.

இந்த நிலையில், ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி நகரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமித்ஷா பேசுகையில் தனது கருத்தால் எழுந்துள்ள சர்ச்சை குறித்து விளக்கம் அளித்தார்.

அப்போது, இந்தி மொழியை திணிக்க வேண்டும் என்று ஒருபோதும் தான் கூறவில்லை என்றும், தனது பேச்சை நன்றாக கவனித்தால் அது தெரியும் என்றும், 2-வது மொழி ஒன்றை படிக்க விரும்பினால் இந்தி கற்கலாம் என்றுதான் கூறியதாகவும் விளக்கம் அளித்தார். மேலும், தாம் இந்தி பேசாத மாநிலத்தில் இருந்து வந்தவன்; இந்தியை திணிக்க வேண்டும் என நான் ஒருபோதும் கூறவே இல்லை என்று தெரிவித்து உள்ளார்.

நாடு முழுவதும் எழுந்த மக்களின் எதிர்ப்பு காரணமாக  முதன்முறையாக பணிந்துள்ளார் அமித்ஷா.