கொல்கத்தா

குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியின் மகள் சனா கங்குலி தெரிவித்துள்ள கருத்துக்குத் தொடர்ந்து எதிர்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

சவுரவ் கங்குலியுடன் சனா

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராகவும், ஜமியா மிலியா மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு எதிராகவும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். பாலிவுட் திரையுலகம் மற்றும் தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களுடைய எதிர்ப்பை பதிவிட்டு வருகின்றனர்.

ஆயினும் சச்சின் டெண்டுல்கர் , சவுரவ் கங்குலி, ஷாருக்கான், ஆமிர்கான், சல்மான் கான் உள்ளிட்ட மிகவும் பிரபலமானவர்கள் இந்த விவகாரங்களில் இதுவரையில் எந்த கருத்துகளையும் இதுவரை வெளிப்படுத்தவில்லை.

பி.சி.சி.ஐ தலைவரும் இந்திய அணியின் முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலியின் மகள் சனா கங்குலி இந்த விவகாரத்தில் கடுமையான முறையில் தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். சனாவின் இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

தனது இன்ஸ்டாகிராம் பதிவில், ‘அனைத்து பாசிச ஆட்சிகளுக்கும் குழுக்கள் மற்றும் இனங்கள் தேவைப்படுகின்றன. இவற்றின் மூலம் அரக்கத்தனத்தை விழிப்படையச் செய்ய முடியும். இந்த செயல் ஒரு குழு அல்லது இரண்டு குழுக்களிலிருந்து தொடங்குமே தவிர ஒருபோதும் முடிவடையாது.  ஒரு இயக்கம் வெறுப்பின் மீது கட்டமைக்கப்படும்போது அது தொடர்ச்சியாக அச்சத்தையும் கலவரத்தையும் உருவாக்குவதன் மூலமே தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது.

நாம் எல்லோரும் இந்த முட்டாள்களின் சொர்க்கத்தில் இஸ்லாமியர்களாகவும், கிறிஸ்துவர்களாகவும் இல்லாததன் காரணமாகப் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறோம். ஏற்கெனவே இடதுசாரி வரலாற்றாசிரியர்களையும், மேற்கத்திய இளைஞர்களையும் சங்பரிவாரங்கள் குறி வைத்துள்ளனர்.

அந்த வெறுப்பு பெண்கள் ஸ்கர்ட் அணிவதன் மீதும், மாமிசங்களை உண்பவர்கள் மீதும், மது அருந்துபவர்கள் மீதும், வெளிநாட்டுத் திரைப்படங்களைப் பார்ப்பவர்கள் மீதும், பற்பசை பயன்பாட்டின் மீதும் நாளை திரும்பக் கூடும். அவர்களது ஜெய்ஸ்ரீராம் முழக்கத்தை  பதிலுக்கு எழுப்புவதற்குப் பதிலாக முத்தம் அல்லது கைக் குலுக்குபவர்கள் யாருக்கும் இங்கே பாதுகாப்பு இல்லை.

நாம் இந்தியா உயிர்ப்புடன் இருக்கும் என நம்பினால் இதனை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்’ என்று எழுத்தாளர் குஷ்வந்த் சிங் எழுதிய ‘இந்தியாவின் முடிவுரை’(The End of India) என்ற புத்தகத்திலுள்ளவற்றை பதிவிட்டுள்ளார்.

இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.  இதையொட்டி சனாவின் தந்தை சவுரவ் கங்குலி, தனது டிவிட்டரில், “இந்த விவகாரத்தில் இருந்து சனாவை தள்ளி வையுங்கள்.   அவருடைய பதிவு உண்மையானது அல்ல.  அவர் மிகவும் இளையவர் என்பதால் அவருக்கு அரசியலைப் பற்றி எதுவும் தெரியாது” எனப் பதிந்துள்ளார்.  சனாவின் பதிவு தற்போது அகற்றப்பட்டுள்ளது.