குஜராத் மாதிரி மகப்பேற்றுக்கு கடும் எதிர்ப்பு

திருவனந்தபுரம்

குஜராத்தில் செயல்படுவதுபோல் மகப்பேறு நடத்த மத்திய அரசு அளித்த ஆலோசனைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

உலகெங்கும் மகப்பேறு மரணங்கள் அதிகரித்து வருகின்றன.  இதற்கு முக்கிய காரணம் மகப்பேறு நேரத்தில் தாய்க்கு அதிக அளவில் இரத்த இழப்பு ஏற்படுவதே ஆகும் என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.   குறிப்பாக மகப்பேறு சமயத்தில் சாதாரண மகப்பேற்றுக்காக அதிக நேரம் காத்திருக்கும் போது அதிக அளவில் இரத்த இழப்பு ஏற்படுவதால் சாதாரண மகப்பேறு தாமதம் ஆகும் போது வேறு முறைகளைக் கையாள மையம் ஆலோசனை அளித்துள்ளது.

ஆனால் குஜராத் மாநிலத்தில் மகப்பேறு நேரத்தில் எவ்வித இடையூறும் செய்யக் கூடாது என்னும் வரைமுறை உள்ளது.    அதாவது எவ்வளவு நேரம் ஆனாலும் காத்திருந்து மகப்பேற்றை நடத்த வேண்டும் எனவும் வேறு முறைகள் எதையும் கையாளக் கூடாது எனவும் வலியுறுத்தப்படுகிறது.   மத்திய அரசு மகப்பேறு காலத்தில் குஜராத் வழிமுறையைப் பின்பற்ற ஆலோசனை அளித்துள்ளது.

பொதுவாக மகப்பேற்றின் மூன்றாம் கட்டத்தில் கர்ப்பப்பையில் இருந்து குழந்தை வெளி வர அது விரிவடைய வேண்டி உள்ளது.  இதற்கு சுமார் 6 நிமிடங்களில் இருந்து 30 நிமிடங்கள் வரை ஆகும்.  இந்த நேரத்தில் பெண்களுக்கு  மகப்பேறு நேரத்தைக் குறைப்பதன் மூலம் இரத்த போக்கை நிறுத்த முடியும் என்பதால் செய்யப்படும் முயற்சிகளை குஜராத் வரைமுறை தடுக்கிறது.    இதன் மூலம் இரத்த சேதம் அதிகம் ஆகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த குஜராத் முறைக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.  அத்துடன் மகப்பேறு மரணங்கள் மிகவும் குறைவாக உள்ள கேரள மாநில மருத்துவர்கள் இதைக் கடுமையாக எதிர்க்கின்றனர்.  அவர்கள்  கூற்றுப்படி குழந்தை வெளிவரத் தொடங்கியதும் அது முழுமையாக வெளி வர உதவி உடனடியாக தொப்புள் கொடியை வெட்டுவதன் மூலம் இரத்தப்போக்கு நின்று விடும் என்பதாகும்.

ஆனால் மத்திய அரசு கூடிய வரை மகப்பேறு இயற்கையாகத் தானாகவே முடிவது நல்லது எனத் தெரிவித்துள்ளது.   ஒரு மகப்பேறு என்பது ஒரு தாய்க்கு இயற்கையான அனுபவமாக அமைவது நல்லது என  அமைச்சகம் தெரிவித்துள்ளது.