குவஹாத்தி: குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் ஜகன்னாதர் கோயிலில் நடைபெறும் வருடாந்திர ரத யாத்திரை திருவிழாவிற்காக, அஸ்ஸாமிலிருந்து 4 யானைகளை, கொடுமையான வெயிலில் ரயில் மூலம் கொண்டு செல்லும் முடிவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

அஸ்ஸாம் மாநில அரசின் இந்த முடிவை எதிர்த்து, அம்மாநில மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த வனவிலங்கு நல ஆர்வலர்கள், உச்சநீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளனர்.

வடமாநிலங்களில் தற்போது வெயிலின் அளவு 40 டிகிரி செல்சியஸை தொடும் வேளையில், வெப்பத்தை தாங்காத வன உயிரியான யானைகளை, துன்பந்தரும் ரயில் பயணத்தில் சுமார் 3100 கி.மீ. தூரம் கொண்டு செல்வது மிகவும் கொடுமையானது என்று கண்டனங்கள் எழுந்துள்ளன.

இந்த உத்தரவானது, முதன்மை வனவிலங்கு வார்டன் மற்றும் முதன்மை வனப் பாதுகாப்பாளர் ஆகியோரால் கையெழுத்திடப்பட்டுள்ளது.

இந்த யானைகளைக் கொண்டு செல்வதற்காக, தனியான சிறப்பு ரயில் பெட்டியை எதிர்பார்ப்பதாக, வடகிழக்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், யானைகளை ரயிலில் பாதுகாப்பாக ஏற்றுவது மட்டுமே ரயில்வேயின் பொறுப்பு என்றும், பயணம் தொடங்கியதிலிருந்து, இலக்கை சென்றடைந்து யானைகளை ரயிலிலிருந்து இறக்கும்வரை, அவைகளை முறையாக கவனித்துக் கொள்வது வனத்துறையின் பொறுப்புதான் எனவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.