சென்னை:

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என மக்கள் நீதி மையம் தலைவர் கமல் ஹாசன் கூறிய கருத்துக்கு தமிழக மக்கள் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள இந்து மத தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  பல இந்துமத அமைப்புகளும் கமல்ஹாசனை கடுமையாக சாடியுள்ளன.

இந்த நிலையில், தனது தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு  கமல் வீட்டில் முடங்கி உள்ளார். அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்துமத அமைப்புகள் சில போராட்டம் நடத்த வாய்ப்பு உள்ள நிலையில், கமலின்  ஆழ்வார்பேட்டை வீட்டுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீத மய்யம் வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட கமல்ஹாசன், இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதியில் அவர்களின் வாக்குகளை  பெறும் நோக்கில், ” இது முஸ்லிம்கள் நிறைய பேர் இருக்கும் பகுதி என்பதால் இதை நான் சொல்லவில்லை. காந்தி சிலைக்கு முன்பாக இதைச் சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே” என்று கூறினார்.

கமலின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.இதற்கு இந்து மத அமைப்புகள் மட்டுமின்றி பொதுமக்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழக பாஜக சார்பிலும்  கமல்மீது நடவடிக்கை எடுக்க கோரி தேர்தல் ஆணையம், காவல்துறையிலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் பிரசாரத்துக்கு சென்றால் அவர்மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால், கமல் தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு வீட்டில் முடங்கி உள்ளார்.

இந்த நிலையில், அவருக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், அவரது வீட்டை சுற்றி காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.