கொல்கத்தா: புலம்பெயர்ந்த 6 ஆயிரம் மேற்குவங்க தொழிலாளர்களை அழைத்து வர ஏற்பாடு செய்துள்ளதாக மேற்கு வங்க அரசு தெரிவித்துள்ளது.
மேற்குவங்க அரசு, புலம்பெயர் தொழிலாளர்கள் வரும் ரயில்களை சொந்த மாநிலத்திற்குள் அனுமதிக்காமல், அவர்களுக்கு அநீதி இழைப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியிருந்த நிலையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு, உள்துறை அமைச்சர் அமித்ஷா எழுதியிருந்த கடிதத்தில், “மேற்கு வங்க தொழிலாளர்களை சொந்த ஊர் அனுப்ப மத்திய அரசு சார்பில் ரயில் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களும் வீடு திரும்ப ஆர்வமாக உள்ளனர். ஆனால் மேற்குவங்க அரசிடம் இருந்து எதிர்ப்பார்த்த ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. ரயில்களை அனுமதிக்க வில்லை. இது மேற்குவங்க புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதி” என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், இக்குற்றச்சாட்டை மறுத்துள்ள மேற்குவங்க அரசு, மாநிலத்திற்கு வெளியே சிக்கித் தவிக்கும் சுமார் 6,000 புலம்பெயர் தொழிலாளர்களை திரும்ப அழைத்து வர வசதி செய்துள்ளதாகவும், ஊரடங்கினால் மேற்குவங்காளத்தில் சிக்கியுள்ள பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பாக திரும்புவதை உறுதி செய்துள்ளதாகவும் மாநில அரசு தெரிவித்துள்ளது.
மேலும், அமித்ஷா பொய் சொல்வதாக கூறியுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, கர்நாடகா, தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலுள்ள தொழிலாளர்களை மீட்க ஏற்கனவே 8 ரயில்கள் தயார் நிலையில் இருப்பதாகவும், ஐதராபாத்திலிருந்து மால்டாவிற்கு இன்று ஒரு ரயில் புறப்படுகிறது என கூறியுள்ளது.