தூத்துக்குடி :

ன்று தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

ஆரம்பத்தில் ஒருவர் மட்டுமே இறந்ததாக கூறப்பட்ட நிலையில், மதிய நேரத்தில் 3 பேர் உயிரிழந்தாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில்,  துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது.

பொதுமக்களின் போராட்டத்தை ஒடுக்க  முயன்ற காவல்துறையினர், 3 முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர். முதல் முறை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். அடுத்தடுத்து நடத்திய துப்பாக்கி சூட்டில்  மேலும் பலர் உயிரிழந்தனர். இதன் காரணமாக உயிரிந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

போலீசாரின் துப்பாக்கி சூட்டில்,  மேட்டுப்பட்டி கிளாஸ்டன், தூத்துக்குடி கந்தையா, குறுக்குச்சாலை கிராமம் தமிழரசன், ஆசிரியர் காலனி சண்முகம் மற்றும் தூத்துக்குடி தாமோதர் நகர் மணிராஜீம்  ஆகிய 5 பேர்  அடையாளம் காணப்பட்டுள்ளனர். மற்ற 3 பேர் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் பலர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், இதன் காரணமாக பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது. போலீசாரும் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி கூட்டத்தை கலைக்க முன்வராமல், போராட்டக்காரர்கள் மீது நேரடியாக துப்பாக்கி சூடு நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.