பெங்களூரு: 3 மாதங்களுக்கும் மேலாக ஜெர்மனியில் சிக்கி இருக்கும் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் இந்தியா திரும்புகிறார்.
செஸ் போட்டிகளில் கலந்து கொள்ள ஆனந்த் விஸ்வநாதன் கடந்த பிப்ரவரி மாதம் ஜெர்மனி சென்றிருந்தார். கொரோனா காரணமாக அந்த போட்டிகளும் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.
எனினும் உலகளாவிய ஊரடங்கு காரணமாக அனைத்து விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால், 3 மாதங்களுக்கும் மேலாக ஜெர்மனியிலேயே முடங்கிக் கிடந்தார்.
அங்கு அவர் தாமாகவே தன்னை தனிமைப் படுத்திக் கொண்டார். தற்போது விமான போக்குவரத்து ஓரளவு சீரடைந்துள்ள நிலையில், நாடு திரும்புகிறார்.
அவர் இன்று பெங்களூரில் தரையிறங்குவார். கர்நாடக அரசு வெளியிட்ட தனிமைப்படுத்தப்பட்ட கொள்கையை அவர் பின்பற்றுவார் என்று அவரது  மனைவி அருணா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
கர்நாடக அரசு விதித்துள்ள விதிகளின்படி பராமரிப்பு மையத்தில் 14 நாட்கள் அவர் தனிமைப்படுத்தப்படுவார்.  2 வார தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிந்த பின்னர் அவருக்கு பரிசோதனைகள் நடக்கும். அதன் பிறகு கொரோனா தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டால் வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்.