மர உச்சிக்கு ஏறவைத்த ஆன்லைன் கிளாஸ்…

மர உச்சிக்கு ஏறவைத்த ஆன்லைன் கிளாஸ்…

படிக்கிறதுக்கு காலேஜ் போற காலம் போயி, இப்போ மரத்து மேல ஏற வேண்டியதாகிடிச்சு.  கர்நாடகாவின் மங்களூரு அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த ஸ்ரீராம் அருகேயுள்ள SDM கல்லூரியில் இரண்டாமாண்டு MSW படித்து வருகிறார்.  தற்போதைய ஊரடங்கின் காரணமாக இவரது கல்லூரி தினமும் காலை மாலை இருவேளைகளும் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது.

“எங்க ஊர்ல பிஎஸ்என்எல் நெட்ஒர்க் மட்டுந்தான் இருக்கு.  அதுலயும் போன் பேசவே சிக்னல் கிடைக்காது.  இதில நான் எப்டி ஆன்லைன் கிளாஸ் அட்டன் பண்றது.  ஒரு நாள் என்ன செய்றதுன்னு தெரியாம சிக்னலுக்காக தேடி அலைஞ்ச போது ஒரு கிலோமீட்டர் தாண்டி ஒரு மலை மேல ஏறினேன்.  அப்போ அந்த எடத்தில மட்டுந்தான் சிக்னல் நல்லா கிடைச்சது.  உடனே அங்கே இருந்த ஒரு மரத்து மேல ஏறி உக்கார்ந்து கிளாஸ் அட்டன் பண்ணினேன்.  இப்போ தினமும் எனக்கு அந்த மரம் தான் கிளாஸ் ரூம்…” என்று தனக்கு சிக்னல் கிடைத்த விதம் பற்றி விவரிக்கிறார் ஸ்ரீராம்.

சாதாரணமாகக் கல்லூரிக்குத் தினமும் ஒரு கிலோமீட்டர் வரை நடந்து தான் சென்று வருகிறாராம் இவர்.  அதனால் இது ஒன்றும் பெரிய விசயமில்லை என்கிறார்.  ஆனால், “காலைல எப்டியோ சமாளிச்சிடறேன்.  ஆமா மதிய நேர கிளாஸ் தான் ரொம்ப கொடுமை.  ஏன்னா வெயில் அந்தளவு கொடூரமா இருக்கு.  இருந்தாலும் இந்த வெயிலை பொருட்படுத்தாம  தான் தினமும் மரத்து மேல ஏறி படிச்சிட்டு தான் இருக்கேன்” என்கிறார் இவர்.

கொரோனாவின் தாக்கத்தினால் வெளியில் தெரியாத விளைவுகள் இன்னும்  என்னென்னவெல்லாம் ஏற்பட்டிருக்கிறதோ தெரியவில்லை.

– லெட்சுமி பிரியா