கமதாபாத்

குஜராத் அரசு தலித் மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு அளிக்க வேண்டிய கல்விக் கட்டண  உதவித் தொகையை இதுவரை அளிக்காமல் உள்ளது.

குஜராத் மாநிலத்தில் கல்லூரியில் சேரும் தலித் மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு அவர்களுடைய கல்விக் கட்டணத்தை உதவித் தொகையாக அரசு வழங்கி வருவது வழக்கமாகும்.   இதில் தலித் மாணவர்களுக்கு 10% கல்விக் கட்டணத்தை மாநில அரசு மூலமாக மத்திய அரசு அளிக்கிறது.  பழங்குடி மாணவர்களின் கல்விக் கட்டணத்தில் மத்திய அரசு 60% மற்றும் மாநில அரசு 40% அளிக்கிறது.   இதைத் தவிர புத்தகம் வாங்க ஒரு குறிப்பிட்ட தொகை அளிக்கப்படுகிறது

பல கல்லூரிகளில் மாணவர்கள் கல்லூரியில் சேரும்போது கட்டணத் தொகையைச் செலுத்தி விட்டு பிறகு மாநில அரசு உதவித் தொகை அளித்த பிறகு அந்த தொகையைக் கல்லூரி நிர்வாகம் திரும்ப அளிக்கும்.   சென்ற கல்வியாண்டு தொடக்கமான 2019 ஆம் வருடம் சுமார் 10000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்விக் கட்டணத்தை செலுத்தி உள்ளனர்.  அவர்களுக்கு இதுவரை கல்விக் கட்டணம் மற்றும் புத்தகத்துக்கு அளிக்க வேண்டிய தொகை வரவில்லை.

இவ்வாறு உதவித் தொகை கிடைக்காத மாணவர்கள் அனைவரும் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் ஆவார்கள்.   கடன் வாங்கி கல்விக் கட்டணத்தைச் செலுத்தி உள்ள அவர்களால் தற்போது கடன் தொகையைத் திருப்பி அளிக்க முடியாத மன உளைச்சலில் சிக்கி உள்ளனர்.  இந்நிலை அரசு கல்லூரி மற்றும் சுய உதவி கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.

 

தேவன்ஷு படேல்

இது குறித்து பருல் பல்கலைக்கழக தலைவர் தேவன்ஷு படேல், “வழக்கமாக எங்களுக்கு ரூ.1.46 கோடி உதவித் தொகை அரசு அளித்து வந்தது.  சென்ற வருடம் வரை இந்த தொகை மார்ச் மாத வாக்கில் வருவது வழக்கமாகும்   ஆனால் இந்த வருடம் ரூ.62 லட்சம் மட்டுமே அரசு அளித்துள்ளது.  இந்த வருடம் ஸ்பாட் அட்மிஷன் மூலம் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களுக்கு உதவித் தொகை கிடையாது என அரசு விளக்கம் அளித்துள்ளது.

ஆனால் மாணவர் சேர்க்கை சமயத்தில் அது போல உத்தரவு அளிக்கப்படவில்லை.  எனவே ஒரு சில மாணவர்களிடம் கட்டணத்தைப் பெறாமல் உதவித் தொகையை நம்பி நாங்கள் சேர்த்துள்ளோம்.  அவர்களுக்கு உதவித் தொகை அளிக்கப்படாததால் இந்தக் கல்விக் கட்டணத்தை நாங்கள் ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.    எங்கள் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பல கல்லூரிகளில் இந்த தொகையை வைத்து ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கி வந்தோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

பல சுய உதவிக் கல்லூரிகள் மாணவர்களை ஸ்பாட் அட்மிஷன் மூலமே சேர்த்துள்ளது.   மாணவர்களுக்கு அரசு அளித்துள்ள உதவித் தொகை அட்டையை ஏற்று அவர்களிடம் கட்டணம் வாங்காமல் பல கல்லூரிகள் சேர்த்துள்ளன.   இந்த கல்லூரிகளில் தற்போது நிதி நெருக்கடி அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது.  சென்ற வருடம் வரை தலித் மற்றும் பழங்குடியின மாணவர்களின் கல்விக் கட்டணம் முழுமையாகத் திரும்ப அளிக்கப்பட்டதாக இந்தக் கல்லூரி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து பெயர் தெரிவிக்க விரும்பாத குஜராத் மாநில சமூக நலத்துறை அதிகாரி ஒருவர், “குஜராத் அரசு தற்போது மிகவும் நிதி நெருக்கடியில் உள்ளது.  இதனால் பல கல்லூரிகளுக்கு உதவித் தொகையில் ஒரு பகுதி மட்டும் வழங்கப்பட்டுள்ளது.  ஒரு சில கல்லூரிகளுக்கு முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது.   மத்திய அரசு அளிக்க வேண்டிய தொகையும் மூன்று வருடங்களாக வரவில்லை.  எனவே செலவைக் குறைக்க ஸ்பாட் அட்மிஷன் மற்றும் நிர்வாக கோட்டா மாணவர்களுக்கு உதவித் தொகை நிறுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

மனோஜ் அகர்வால்

குஜராத் மாநில சமூக நலஹ்த்டுறை தலைமை செயலர் மனோஜ் அகர்வால், “கடந்த 2018 ஆம் வருடம் இந்திய அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதலின்படி நிர்வாக கோட்ட மற்றும் ஸ்பாட் அட்மிஷன் மூலம் சேர்ந்த மாணவர்களுக்கு உதவித் தொகை அளிக்கப்பட மாட்டாது எனத் தெளிவாக உள்ளது.  அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் இது குறித்த தகவல் அப்போதே அனுப்பப்பட்டது.

பல கல்லூரிகளில் இடங்கள் காலியாக உள்ளதால் மாணவர்களை ஸ்பாட் அட்மிஷன் மூலம் சேர்த்துள்ளனர்.   அவர்களுக்கு உதவித் தொகை பெற தகுதி இல்லை.

அது  போல் சேர்ந்தவர்கள் தங்கள் கல்விக் கட்டணத்தை தாங்களே செலுத்த வேண்டும்.   இவர்களில் ஒரு சிலர் மிகவும் பண நெருக்கடியில் உள்ளதால்  நாங்கள் மத்திய அரசுக்கு இந்த ஒரு முறை உதவித் தொகை அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளோம்.  அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தால் நாங்கள் இந்த மாணவர்களுக்கான உதவித் தொகையைக் கல்லூரிகளுக்கு அளிப்போம்.” எனத் தெரிவித்துள்ளார்.