தஞ்சாவூர்:

காவிரி வாரியம் அமைக்கக்கோரி தஞ்சையில் பாயும் கல்லணை கால்வாயில் இறங்கி  போராட்டம் நடத்திய மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

காவிரி பிரச்சினையில் மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு வகையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தஞ்சாவூரில் கல்லூரி மாணவர்களும்  போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இன்று காலை காவிரிப் பாசன மாவட்ட மாணவர் கூட்டமைப்பினர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தித் தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் இருந்து ஆற்றுப்பாலம் நோக்கிப் பேரணியாகச் சென்றனர்.

இந்த போராட்டத்தில் வெவ்வேறு கல்லூரிகளில் இருந்து வந்த மாணவர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தி வந்தனர். அதைத்தொடர்ந்த பேரணியினர்  கல்லணைக் கால்வாய் ஓரத்தில் உள்ள நடைபாதையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்த முயற்சித்தனர்.

அவர்களை தடுத்த காவல் துறையினர், அவர்களை  அப்புறப்படுத்த முயற்சி மேற்கொண்டனர். ஆனால், மாணவர்கள் அங்கிருந்து நகர மறுத்து, ஒருவருக்கொருவர் சங்கிலி போல கைகோர்த்து இருந்தனர்.

இதன் காரணமாக காவல்துறையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதையடுத்து, மாணவர்கள்  சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில்  போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட இருநூற்றுக்கு மேற்பட்ட மாணவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.