புதுக் கல்லூரி மாணவர்கள் மோதலில் 4 பேருக்கு கத்திக் குத்து.

சென்னை

ராயப்பேட்டையில் அமைந்துள்ள புதுக் கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 4 மாணவர்களுக்கு கத்திக் குத்து ஏற்பட்டு உள்ளது.

சென்னை நக்ரில் ராயப்பேட்டை பகுதியில் புதுக் கல்லூரி அமைந்துள்ளது.  இந்தக் கல்லூரியில் இன்று மாணவர் பேரவை தேர்தல் நடைபெற்றது.   அதில் இரு அணி மாணவர்கள் போட்டி போட்டு உள்ளனர்.  இன்று மாலை தேர்தல் முடிந்ததும் மாணவர்கள் கல்லூரியில் இருந்து வெளியே சென்றுக் கொண்டு இருந்தனர்.

அப்போது கல்லூரி அருகில் உள்ள ராயப்பேட்டை ஒய் எம் சி மைதானம் அருகே சதாம் உசைன், இர்பான், அகமது யாசிர் மற்றும் உசைன் ஆகிய மாணவர்கள் சென்றுக் கொண்டிருந்துள்ளனர்.   அப்போது அவர்களுக்கு எதிர் கோஷ்டியை சேர்ந்த 30 மாணவர்கள் இந்த நால்வரையும் கத்தியால் தாக்கி உள்ளனர்.   இதில் நால்வருக்கும் படுகாயம் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த மாணவர்களை காவல்துறையினர் ராயப்பேட்டை மருத்துவ மனையில் அனுமதித்துள்ளனர்.    இது தொடர்பாக ஆசிஃப் முகமது என்னும் மாணவரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.  கத்தியால் தாக்கிய கும்பல் விரைவில் கைது செய்யப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கல்லூரி நிர்வாகத்தினர் இச்சம்பவம் குறித்து அண்ணாசாலை காவல் நிலையத்தில் அதிகாரிகளுடன் பேசி வருகின்றனர்.    கல்லூரி வளாகத்துக்கு வெளியே பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.   ராயப்பேட்டை பகுதியில் இந்த கத்திக்குத்து சம்பவம் கடும் பதட்டத்தை உள்ளாக்கி இருக்கிறது.