சென்னை: அரியர்கள் மற்றும் மறுதேர்வு தொடர்பாக கொண்டுவரப்பட்டுள்ள சமீபத்திய திருத்தங்களை எதிர்த்து, அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள பல பொறியியல் கல்லூரிகளின் மாணாக்கர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.

இதனையடுத்து, நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் சேஷாயி ஆகியோர் அடங்கிய அமர்வு, பல்கலைக்கழகத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

புதிய விதிகளின்படி, ஒரு தியரி பேப்பரில் தவறும் ஒரு மாணவர், அடுத்துவரும் செமஸ்டரில் அதை எழுதி நிவர்த்திசெய்ய முடியாமல், அடுத்தாண்டு சேரும் ரெகுலர் மாணாக்கர்களுடன் மட்டுமே சேர்ந்து எழுத முடியும். மேலும், அரியர்களின் எண்ணிக்கையும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, இந்த புதிய மாற்றங்களை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ள மாணாக்கர்கள், ஒரு கல்வியாண்டின் நடுப்பகுதியில் தேர்வுகள் தொடர்பான மாற்றங்களை மேற்கொள்ள முடியாது. மேலும், இந்த மாற்றங்கள் பாரபட்சமானவை.

ஏனெனில், சுயநிதிக் கல்லூரிகளில் படிக்கும் மாணாக்கர்களுக்கு மட்டுமே இந்த புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும் வேறு கல்லூரிகளுக்கு இந்த விதிகள் பொருந்தாது என்று தாங்கள் தாக்கல் செய்த மனுவில் அந்த மாணாக்கர்கள் குறிப்பிட்டுள்ளனர்.