மத்தியப் பிரதேசம் : பள்ளி மாணவர்கள் வருகைப்பதிவில் ஜெய்ஹிந்த் என சொல்ல உத்தரவு

போபால்

த்தியப் பிரதேச பள்ளி மாணவர்கள் வருகைப் பதிவின் சமயத்தில் ஜெய்ஹிந்த் என கூற வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

பள்ளிகளில் வருகைப் பதிவின் போது மாணவர்களின் பெயர் கூப்பிட்டதும் ஆங்கிலத்தில் பிரசண்ட் சார் எனவோ எஸ் சார் அல்லது எஸ் மேடம் எனவோ அல்லது தமிழில் உள்ளேன் ஐயா எனச் சொல்வதோ பள்ளி மாணவர்களின் வழக்கம்.   ஆனால் அதை எப்படிச் சொல்ல வேண்டும் என மத்தியப் பிரதேச அரசு புது உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

மத்தியப் பிரதேச மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் விஜய் ஷா இன்று ஒரு விழாவில் கலந்துக் கொண்டு பேசி உள்ளார்.  அவர் தனது உரையில். “இன்று முதல் அனைத்துப் பள்ளிகளிலும் வருகைப் பதிவில் பெயர் கூப்பிடும் போது மாணவர்கள் அனைவரும் “ஜெய் ஹிந்த்” என மட்டுமே பதிலளிக்க வேண்டும்.  இந்த உத்தரவு இன்று முதல் மத்தியப் பிரதேசத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் அமுலாக்கப்படுகிறது.   தனியார் பள்ளிகளும் இதே வழக்கத்தை நடைமுறைப் படுத்த வேண்டும்” எனக் கூறினார்.

கடந்த செப்டம்பர் மாதம் அமைச்சர் விஜய் ஷா அனைத்துப் பள்ளிகளிலும் அக்டோபர் 1 முதல் வருகைப்பதிவின் போது ஜெய்ஹிந்த் எனச் சொல்வது கட்டாயம் ஆக்கப்படும் என அறிவித்திருந்தார்.  ஏற்கனவே பள்ளிகளில் தினமும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் எனவும் தேசிய கீதம் பாட வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.