கோவை:

கோவை அருகே உள்ள சிறுவாணி பகுதியில் அமைந்துள்ள பிரபல கிறிஸ்தவ மத போதகரான மறைந்த டிஜிஎஸ் தினகரனின்  குடும்பத்தினர் நடத்தி வரும் காரூண்யா பல்கலைக்கழகத்தில், மாணவர்கள் போராட்டம் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் போலீசாரின் துணைகொண்டு தடியடி நடத்தியும், பல்கலைக்கழகத்து விடுமுறை அளித்தும் மாணவ மாணவிகளை விரட்டி அடித்தனர். இரவோடு இரவாக மாணவ மாணவிகளை விடுதிகளை காலி செய்யச்சொல்லி மிரட்டி அனுப்பிய பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை பகுதியில் உள்ள சிறுவானி அருகே இயற்கை சூழ்ந்த இடமான  சாலை சாடிவயல் பகுதியில், காருண்யா பல்கலைக்கழகம் உள்ளது. இது கிறிஸ்தவ மத போதகரான டிஜிஎஸ் தினகரனுக்கு சொந்த மானது. தற்போது இதை அவரது மகன் பால் தினகரன் நிர்வகித்து வருகிறார்.

இந்த பல்கலைக்கழகத்தில் ஏராளமான கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்களும், வெளிநாட்டினரும் என ஆயிரக்கணக்கான பேர்  படித்து வருகின்றனர்.

இங்கு மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், வசூலிக்கப்படும் கட்டணம் குறித்து கேள்வி எழுப்பினால் நிர்வாகத்தினர் தாக்குதல் நடத்துகின்றனர் என்றும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இதன் காரணமாக பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்கள் திடீரென திரண்டு கல்லூரிக்கு எதிராக கோஷமிட்டனர்.

இதையடுத்து நிவாகத்தினருக்கும், மாணவர்களுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடைபெற்றது. இந்நிலையில் பேராசிரியர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்மீது காரை ஏற்றிச்சென்றதாக கூறப்படுகிறது.

இதில் அந்த மாணவருக்கு காயம் ஏற்பட்டதால் மற்ற மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். பல்கலைக்கழகக் கட்டடங்கள் மற்றும் பேருந்துகள்மீது கல்வீச்சு நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, கல்லூரி நிர்வாகத்தின் வேண்டுகோள் படி கல்லூரிக்குள் வந்த  போலீஸார், மாணவர்கள் மீது  தடியடி நடத்தி மாணவர்கள் கூட்டத்தைக் கலைத்தனர்.

பின்னர், பல்கலைக்கழகத்துக்கு இரண்டு வாரம் விடுமுறை அறிவித்து, இரவோடு இரவாக மாணவர்கள் அனைவரும் பல்கலைக்கழக வளாகத்தைவிட்டு வெளியேற்றப்பட்டனர்.

இதுகுறித்து மாணவர்கள் கூறும்போது,  அரசு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட அதிகம் வசூலித்து வருவதாகவும், அதற்கான காரணம் கேட்டால் சொல்ல மறுக்கிறார்கள். இதுகுறித்து நாங்கள் பல முறை புகார் கூறியதும் பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க மறுத்து போலீசாரை கொண்டு எங்களை தாக்கி விரட்டி உள்ளனர் என்று கூறினர்.

ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்  “காருண்யா பல்கலையில் ஊழியர்களுக்கு சரிவர சம்பளம் தருவதில்லை. மேலும் உரிய விடுப்பு எடுக்கவும் அனுமதிப்பதில்லை. நிர்வாகம் மிகவும் கொடுமைப்படுத்துகிறது” என்று ஊழியர் ஒருவர் பல்கலைக்கழக கட்டிம் மீது ஏறி தற்கொலை செய்வதாக கூறியது குறிப்பிடத்தக்கது.