வாஷிங்டன்:

மெரிக்கா பள்ளி ஒன்றில், ஆசிரியர்  மாணவர்கள் மீது கண்மூடி தனமாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். அதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த மாதம் 15ந்தேதி புளோரிடா மாகாணத்தில் உள்ள பள்ளியில் முன்னாள் மாணவன் ஒருவன் வெறித்தனமாக  துப்பாக்கியால் சுட்டதில் 17 மாணவர்கள் இறந்துள்ள நிலையில், தற்போது ஆசிரியர் ஒருவரே கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜார்ஜியா மாவட்டத்தில் உள்ள  டாட்சன் என்ற பள்ளியில், ஆசிரியர் டேவிட்சன் என்பவர் திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதன் காரணமாக மாணவர்கள் பதறியடித்து வகுப்பறையை விட்டு வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.

ஆசிரியரின் துப்பாக்கி சூட்டினால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், அவரது துப்பாக்கி குண்டுபாய்ந்து பள்ளியில் உள்ள சுவர்கள் மற்றும் கண்ணாடி தடுப்புகள் சேதமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து, ராண்டல் டேவிட்சன் என்ற துப்பாக்கி சூடு நடத்திய  ஆசிரியரை மடக்கி பிடித்ததாகவும், விசாரணையில், அந்த துப்பாக்கியில் குண்டுகள் இல்லை என்பது தெரிய வந்ததாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில்தான் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பள்ளிகளில் துப்பாக்கி சூட்டை தவிர்க்க ஆசிரியர்களுக்கு துப்பாக்கி வழங்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்த நிலையில் ஆசிரியரின் துப்பாக்கி சூடு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.