சென்னை

மாணவர்கள் தங்கள் தாய்மொழியில் விஞ்ஞான பாடத்தை பயில வேண்டும் என அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் எம் கே சூரப்பா தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக் கழகத்தின் சார்பில் தமிழ் இணைய கூட்டமைப்பின் 18 ஆம் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தை சர்வதேச தமிழ் தொழில் நுட்ப தகவல் கழகத்துடன் இணைந்து பல்கலைக் கழகம் நடத்துகிறது. இந்த வருடம் செப்டம்பர் 20 முதல் 22 வரை நடைபெற உள்ள இந்நிகழ்வில் தமிழ் ரோபோடிக்ஸ் முக்கிய அங்கம் வகிக்க உள்ளது.

இந்நிகழ்வு குறித்து அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் எம் கே சூரப்பா செய்தியாளர்களிடம் நேற்று பேசினார். அப்போது அவர், “மாணவர்கள் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தை அவரவர் தாய் மொழியில் கற்க வேண்டும். அது அவர்களுக்கு மேலும் நல்ல புரிதலை உண்டாக்கும். அத்துடன் அவர்களால் எதிர்காலத்தில் பல புதிய விஞ்ஞான மற்றும் தொழில் நுட்ப தகவல்களை தமிழில் அளிக்கவும் அது உதவும்.

முக்கியமாக மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு இது குறித்து கருத்துக்களை பரிமாற்றம் செய்துக் கொள்ளவும் தொழில் நுட்ப முன்னேற்றத்துக்காகவும் தமிழில் விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்ப பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும். இதன் மூலம் அனைவரும் விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பத்தில் ஏற்படும் அன்றாட முன்னேற்றங்கள் குறித்து உடனடியாக அறிய முடியும்” என தெரிவித்துள்ளார்.