டில்லி,

நாட்டிலேயே மாணவர்கள் தற்கொலையில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளதாக மத்திய உள்துறை தெரிவித்து உள்ளது.

பாராளுமன்றத்தில் நடைபெற்று வரும் விவாதத்தின்போது, இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலத்தில்  மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் இடையே உள்ள இடைவெளி, எந்த சூழ்நிலையையும் சமாளித்து வாழ்ந்து காட்டலாம் என்ற மனநிலையை உருவாக்காத  பெற்றோர்கள்,    தோல்வியையே வெற்றியாக மாற்றும் மனநிலையை கொடுக்க வேண்டிய ஆசிரியர்கள் போன்றோர் தங்களது பணிகளை ஒழுங்காக செய்யாத காரணத்தால், மாணவர்களின் தற்கொலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மாணவர்களின் விருப்பத்தைப் பற்றிக் கவலைப்படாத பெற்றோர்கள் தங்களது கனவுகளை மாணவர்கள் மீது திணிக்கின்றனர். மேலும்,  வணிக ரீதியிலான கல்வி போன்றவற்றால்  மாணவர்கள் பிரச்னைகளையும், தோல்விகளையும் எதிர் கொள்ளும்போது அதைச் சந்திக்கத் துணிவில்லாமல் துவண்டுவிடுகின்றனர். இதன் காரணமாக அவர்கள் தற்கொலை முடிவை நாடுகின்றனர்.

சமீபத்தில்கூட அதிக மார்க் எடுத்தும், தனது கனவு படிப்பான மருத்துவம் கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் தற்கொலை நாடு முழுவதும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில், பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்திற்கு பதில் அளித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், தமிழகத்தில் மாணவர்களின் தற்கொலை நாட்டிலேயே 3வது இடத்தில் உள்ளதாக கூறி உள்ளது.

 

முதல் இரண்டு இடங்களில் மகாராஷ்டிரா, மேற்குவங்கம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.