போபால்:

மத்திய பிரதேச மாநில அரசு மற்றும் பாரதிய ஷிக்ஷன் மண்டல் சார்பில் உஜ்ஜைனில் நடந்த விராத் குருக்குல சம்மேளன நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகத் கலந்துகொண்டார்.

 

 

 

அப்போது அவர் பேசுகையில், ‘‘பழங்கால குருகுல நடைமுறையில் அறிவு வளர்ப்பதில் பிரிவினை இல்லை. வேதத்துக்கும் அறிவியலுக்கும் என்ன தொடர்பு? என்று சிலர் என்னிடம் கேட்கின்றனர். தெரியாதவற்றை தெரிந்து கொள்ள உதவும் உணர்வு தான் இது. அறிவியல் எங்கு முடிவடைகிறதோ? அங்கிருந்து ஆன்மீகம் தொடங்குகிறது. முந்தைய காலத்தில் இருந்த பஞ்சமுகி கல்வி முறையில் குழந்தைகள் முழுமையான வளர்ச்சியை அடைந்தனர். வேதம் படிபப்து நவீன அறிவியலுக்கு அவசியமாகும்’’ என்றார்.

மேலும், அவர் பேசுகையில், ‘‘நமது கடவுள் நம்பிக்கை அறிவியல்பூர்வமற்றது என்று சிலர் கூறுகின்றனர். சமயங்களில் சில கருத்து வேறுபாடுகளையும் கடந்து தான் முன்னோக்கி செல்ல வேண்டும். ரமண மகரிஷி மற்றும் ராமகிருஷ்ண பரமஹம்ச போன்றவர்கள் நம்மிடம் பொய் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. இந்தியாவில் செயல்பட்ட குருகுலங்கள் பாராட்டுக்களை பெற்றது. இதில் சில தற்போதும் செயல்பட்டு வருகிறது. நூற்றுக்கணக்கான வெளிநாட்டு படையெடுப்புக்கு பின்னரும் இது செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஆர்எஸ்எஸ்ஸை பொறுத்தவரை கல்வி வியாபாரம் கிடையாது. எனினும் நவீன கல்வியில் உள்ள குறைகளை மாற்றியமைக்க இந்த சமூகம் அரசை மட்டும் நம்பிக் கொண்டு இருக்கக் கூடாது. நல்லொழுக்கம் மற்றும் நமது மதிப்புகளின் முக்கியத்துவத்தை குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும். பாராம்பரிய காய்கறி விற்பனையாளர்கள் தற்போது மிளகாய் இலவசமாக கொடுக்கும் நடைமுறையை பின்பற்றுகின்றனர். அவர்கள் தற்செயலாக கூட உங்களை ஏமாற்ற விரும்பவில்லை’’ என்றார்.

இதில் மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சவுகான், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உள்பட பலர் கலந்தகொண்டனர்.