தென் இந்திய சினிமாவில் இன்று நம்பர்-1 ‘ஸ்டண்ட்’ இயக்குநராக இருப்பவர் பீட்டர் ஹெயின்.

ரஜினியின் ‘எந்திரன்’, எஸ்.எஸ்.ராஜமவுலியின் ‘பாகுபலி’, மோகன்லாலின் ‘புலி முருகன்’ ஆகிய படங்களுக்கு சண்டை காட்சிகளை அமைத்தவர் இவர் தான்.

பீட்டர் ஹெயின் வியட்நாம் மொழியில் “ஸாம் ஹோய்” என்ற படத்தை இயக்கியுள்ளார்.

வியட்நாம் நாட்டு நடிகர்கள் நடித்துள்ள இந்த படத்துக்கு தமிழக இசை அமைப்பாளர் சாம் சி.எஸ். இசை அமைத்துள்ளார்.

மோகன்லால் நடித்த ஒடியன் படத்துக்கு சாம் இசை அமைத்திருந்தார். அந்த படத்தின் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியவர் பீட்டர் ஹெயின்.

அப்போது இருவருக்கும் ஏற்பட்ட அறிமுகத்தால், தான் இயக்குநராக அறிமுகம் ஆகும் வியட்நாமிய படத்தில், சாமை இசை அமைப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளார், ஹெயின்.

அடுத்த மாதம் 15 ஆம் தேதி வியட்நாம் மற்றும் சீனாவில் இந்த படம் ரிலீஸ் ஆகிறது.

அங்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, தமிழ், இந்தி, மற்றும் தெலுங்கில் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார், பீட்டர் ஹெயின்.

– பா. பாரதி