போர்டில் எழுதிவைத்துவிட்டு காவல் நிலையத்தலேயே காவலர் தற்கொலை முயற்சி

னது தற்கொலைக்கு காரணம் ஆய்வாளர்தான் என்று காவல் நிலைய போர்டில் எழுதிவைத்துவிட்டு அங்கேயே தற்கொலை முயற்சியில் சிறப்பு காவல் ஆய்வாளர் முயன்ற சம்பவம் திண்டுக்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பணிச்சுமை, உயரதிகாரிகள் டார்ச்சர் போன்ற காரணங்களால் தற்கொலை செய்துகொள்வது காவல்துறையில் அதிகரித்து வருகிறது.

சில வருடங்களுக்கு முன், மயிலாப்பூரில் காவல் ஆய்வாளர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். சென்னை ஆயுதப்படை காவலர்கள் சிலர் மேலதிகாரிகள் டார்ச்சரால் தற்கொலை செய்துகொண்டனர். மேலதிகாரி டார்ச்சரால், தற்கொலை செய்துகொள்ளப்போவதாக பெண் எஸ்.ஐ. ஒருவர் பேசிய ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியது டிஎஸ்பி விஷ்ணுபிரியாவின் தற்கொலை தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி காவல் நிலைய ஆய்வாளராக இருப்பவர் சுபகுமார். இதே காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பொறுப்பு வகிப்பவர்  முருகேசன் (வயது54). பணி நிமித்தமாக இருவருக்கும் அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று காலை பணிக்கு வந்த முருகேசனை, ஆய்வாளர் சுபகுமார் ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் முருகேசன், காவல்நிலைய கரும்பலகையில் தனது தற்கொலைக்கு ஆய்வாளர் சுபகுமார்தான் காரணம் என எழுதிவைத்துவிட்டு, ஆய்வாளர் அறையிலிருந்த மின் விசிறியில் துணியைக் கட்டி தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றார்.

இதைக் கண்டு பதறிய சக காவலர்கள் அவரை காப்பாற்றினர். அவர்  சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

இந்த சம்பவம் காவல்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. சக்திவேல் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.