19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், ஆலைச் சங்குகள்  ஒலித்தபோது, அது இந்திய சமூக வரலாற்றில்  ஏற்படப்போகும் ஒரு பெரும் மாற்றத்திற்கான முன் அறிவிப்பு என்பதை அப்போது எவரும் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை.
வயல்களை மட்டுமே நம்பி, விவசாயிகளாக வாழ்ந்து கொண்டிருந்த மக்களைத் தொழிலாளர்களாக மாற்றிய ஓசை அது! ஆலைகளும், அதன்பின் தொழிற்சாலைகளும் வரத் தொடங்கியபின், நிலவுடைமைச் சமூக  அமைப்பில் ஒரு மாற்றம் விளைந்தது.
தொழிற்சாலை – தொழிலாளர்கள் – கூலி உயர்வு -வேலைநிறுத்தம் – தொழிலாளர் சங்கம் . சங்கத்திற்கான சட்டங்கள் என்று படிப்படியான வளர்ச்சியை நாடு கண்டது.
1918 ஏப்ரல் 27 ஆம் நாளன்று, தமிழகத்தில் முதன்முதலாகச்  “சென்னைத் தொழிலாளர் சங்கம்” தோற்றுவிக்கப்பட்டது. இந்தியாவின் முதல் தொழிற்சங்கமும் அதுதான். எனவே இந்தியத் தொழிலாளர் வரலாற்றில் இந்நாள் ஒரு மிக முதன்மையான நாள்.

இச்சங்கம் உருவாக்கப்பட்டதில் சிந்தனைச் சிற்பி ம.வே. சிங்காரவேலருக்குப் பெரும் பங்கு உண்டு என்று ஆய்வாளர்கள் குறிக்கின்றனர். எனினும் சங்கப்  பொறுப்பாளர்கள் பட்டியலில் அவர் பெயரைக் காண இயலவில்லை.  வாடியா (மும்பையைச் சேர்ந்த பி.பி.வாடியா) தலைவராகவும், திரு.வி.க., கேசவன் பிள்ளை உள்ளிட்டோர் துணைத் தலைவர்களாகவும், செல்வபதி (செட்டியார்), இராமாஞ்சலு (நாயுடு) ஆகியோர் செயலாளர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வ.உ.சிதம்பரனார், ராஜாஜி, எம்.சி.ராஜா, சக்கரை (செட்டியார்), டாக்டர் நடேச (முதலியார்) கஸ்தூரி ரங்க (அய்யங்கார்) முதலான பலர் அச்சங்கத்திற்குத் துணை புரிந்துள்ளனர்.

தொழிற்சங்கத்தை உருவாக்கிய தலைவர்களின் பட்டியலைப் பார்க்கும்போது, ஓர் உண்மை புலப்படும். பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த,  பல்வேறு சித்தாந்தங்களில் நம்பிக்கை கொண்ட தலைவர்கள் ஒன்றுகூடியிருப்பதை உணரலாம். வாடியா, திருவிக இருவரும் ஹோம் ரூல் இயக்கத்தில் தங்கள் அரசியல் வாழ்வைத் தொடங்கியவர்கள். திருவிக,  அன்னி பெசன்ட் அம்மையாரின் ஹோம் ரூல் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு, அதில் பணியாற்றுவதற்காகவே தன் பணியைத் துறந்தவர். பிறகு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து, தலைமைப் பொறுப்பு வரையில் வகித்தவர். சிங்காரவேலர், இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் என்று அழைக்கப்படுபவர். நடேசனார் நீதிக் கட்சியைத் தொடக்கியவர்களில் ஒருவர்.  வ உ சி காங்கிரஸ் கட்சியின் விடுதலைப் போராட்ட வீரர்.  எம்.சி ராஜா, ஆதி திராவிட மக்களின் தலைவர். கஸ்தூரி ரங்கர்  (அய்யங்கார்), ‘இந்து’ ஏட்டின் நிறுவனர்.  இவ்வாறாகப் பலரும் ஒருங்கிணைந்து ஏற்படுத்திய சங்கம்தான் சென்னை தொழிலாளர் சங்கம்.
 
அடுத்தடுத்து எம். அண்ட் எஸ்.எம். தொழிலாளர் சங்கம், டிராம்வே தொழிலாளர் சங்கம், அச்சுத்  தொழிலாளர் சங்கம், மண்ணெண்ணைத் தொழிலாளர் சங்கம் என்று பல்வேறு சங்கங்கள் இங்கு உருப்பெற்றுள்ளன. காவல்துறைக்கான சங்கம் கூட ஏற்படுத்தப்பட்டது என்பது ஒரு வியப்பான செய்தி!
சங்கங்கள் தொடங்கப்பட்ட பின்பு, கூலி உயர்வும், பிற உரிமைகளும் கேட்டு முதன் முதலில் மிகப் பெரிய வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தியவர்கள் சென்னையில் இருந்த பக்கிங்ஹாம் கர்னாடிக் ஆலைத் தொழிலாளர்களே! 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், பக்கிங்ஹாம் ஆலை  என்றும், கர்னாடிக் ஆலை  என்றும் தனித்தனியாகத் தொடங்கப்பட்டவை, 1917 இல் ஒன்றாக இணைந்து பக்கிங்ஹாம்-கர்னாடிக் ஆலை (இனி சுருக்கமாக பி அண்ட் சி மில்) என்று ஆனது. அந்த ஆலைதான் முதன்முதலாகத் தமிழ்நாட்டில் ஒரு பெரும் தொழிலாளர் வேலை நிறுத்தத்தைக்  கண்டது.
தொழிற்சங்கம் உருவானபின் நடைபெற்ற முதல் தொழிலாளர் போராட்டம் அது என்ற போதிலும். தொழிலாளர் போராட்டங்கள் அதற்கு முன்பே தொடங்கிவிட்டன.
1908 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் இயங்கிக்கொண்டிருந்த கோரல் மில் தொழிலாளர்களின் போராட்டம் மிகப் புகழ் பெற்றது.
1888 ஆம் ஆண்டு ஹார்வி என்னும் ஆங்கிலேயர் தூத்துக்குடியில் கோரல் ஆலையைத் தொடங்கினார். முதலில் 10000 பேரும், பிறகு 16000 பேரும் அங்கு தொழிலாளர்களாகப் பணியாற்றினர். மிகக் கூடுதல் லாபம் பெற்ற  அந்த ஆலை , தொழிலாளர்களுக்கு மிகக் குறைந்த ஊதியத்தையே  கொடுத்தது. ஒரு நாளைக்குப் பதினான்கு மணி நேரம் அவர்களிடம் வேலை வாங்கியது. அவர்களுள் பாதிக்கும் மேற்பட்டோர் 12 வயதுக்கும் குறைவான சிறுவர்கள் என்பது இன்னொரு கொடுமை! இத்தனைக்குப் பிறகும், வேறு வழியின்றி அங்கு வேலை பார்த்து வந்த ஊழியர்கள், வ.உ.சி., சுப்ரமணிய சிவா ஆகியோரின் உரைகேட்டு  உரம் பெற்றனர்.
1908 பிப்ரவரி 27 அன்று, அந்தத் தொழிலாளர்கள் அனைவரும் வேலை செய்ய முடியாது என்று கூறித்  தெருவுக்கு வந்தனர். இதற்குப் பின்புலத்தில் வ.உ.சி, சிவா இருவரும்தான் உள்ளனர் என்ற கோபம் அரசுக்கு ஏற்பட்டது. அவர்கள் இருவரும் பிறகு கைது செய்யப்பட்டதற்கு, இந்திய விடுதலைப் போராட்டம் மட்டும் காரணமன்று, கோரல் மில் தொழிலாளர் வேலை நிறுத்தமும் ஒரு பெரிய காரணம்.
அவர்களைக் கைது செய்த பின், அப்போராட்டம் வெறும் தொழிலாளர் போராட்டமாக இல்லாமல், மக்கள் போராட்டமாக மாறியது. அதற்கு ஓர் எடுத்துக்காட்டைப் பார்க்கலாம்.
அந்த ஊரில் ரெங்கசாமி அய்யங்கார் என்ற ‘பெரிய மனிதர்’ போராட்டத்திற்கு எதிராய், அரசுக்கு ஆதரவாக இருந்திருக்கிறார். அவருக்கு முகச் சவரம் செய்ய வந்த ஒரு தொழிலாளி, “அய்யா நீங்க போராட்டத்துக்கு எதிராவா  இருக்கீங்க?” என்று கேட்டுள்ளார். கோபப்பட்ட அய்யங்கார், ‘அது உன் வேலையில்லை. உன் வேலைய மட்டும் பாரு’ என்று சொல்லியுள்ளார். உடனே அந்தத் தொழிலாளி, உங்களுக்கு முகச் சவரம் செய்வதும்  இனி  என் வேலையில்லை என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாராம். அதனைத் தொடர்ந்து சலவைத் தொழிலாளிகளும் அவர் வீட்டுத் துணியை எடுக்க மறுத்து விட்டனராம். அப்படி அந்தப் போராட்டம் மக்கள் போராட்டமாக மாறியுள்ளது.
கோரல் மில் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு முன்பாக, இதே கர்னாடிக் மற்றும் பக்கிங்ஹாம் ஆலைகளில் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் வேலை நிறுத்தங்கள் நடந்துள்ளன. ஆனால் அப்போதெல்லாம் அவர்களை வழிநடத்த தொழிற்சங்கங்கள் கிடையாது.
1921 ஆம் ஆண்டு நடைபெற்ற தொழிலாளர் போராட்டம் முறைப்படி ஒழுங்குபடுத்தப்பட்ட தொழிலாளர் போராட்டமாக நடந்துள்ளது. 1908 இல் தொழிற்சங்கம் இல்லை. 1918 இல் அது உருவாகிவிட்டது. ஆனால் அப்போதும் தொழிற்சங்கங்களுக்கான சட்டங்கள் ஏதும் இல்லை.
எனவே, தொழிற்சங்கத்திற்கெனத் தனிச் சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்ற முயற்சியில் தலைவர்கள் இறங்கினர். இங்கிலாந்திலும், தொழிலாளர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தொடர்பு கொண்டு தங்கள் கோரிக்கையை முன்வைத்தனர். உலகளாவிய இயக்கத் தொடர்பு கொண்டவராக விளங்கிய சிங்காரவேலர், இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் சக்லத்வாலாவிடம் பேசினார்.  அவரும் அதனை ஏற்று அங்கு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அதே போல, தில்லியில் இருந்த  இந்தியச் சட்டமன்றத்திலும்,  எம்.ஜோஷி என்பார் தொழிலாளர் நலச்  சட்டங்கள் வேண்டித் தன் உரையை முன்வைத்தார்.
அப்போது சென்னை மாகாணத்தின் ஆளுநராக இருந்தவர் லார்ட் வில்லிங்டன். அவர் புதிய தொழிற்சங்கத் தலைலைவர்களை அழைத்துப் பேசினார். பேசினார் என்பதை விட, எச்சரித்து அனுப்பினார் என்பதே பொருத்தம் என்கிறார் திருவிக.
இருப்பினும், கண்துடைப்பாக ஒரு சட்ட வரைவுக் குழுவை நியமனம் செய்தார் வில்லிங்டன்.  அதற்கு நீதிபதி குமாரசாமி சாஸ்திரியாரைத் தலைவர் பொறுப்பில் அமர்த்தினார். அதற்குக்  கடும் எதிர்ப்பு எழுந்தது.  அந்த எதிர்ப்பு எழுந்ததற்குப் பின்னால் ஒரு பெரும் காரணம் உள்ளது.
இந்தியாவில் எழுந்துள்ள தீவிரவாதத்தை ஒடுக்குவதற்காக என்று சொல்லி,  பிரித்தானிய அரசால், 1917 ஆம் ஆண்டு நீதிபதி சிட்னி ரௌலட் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் அறிக்கை 1919 மார்ச் மாதம் வந்தது. அது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று கூறி நாடு முழுவதும் போராட்டங்களும், கிளர்ச்சிகளும் நடந்தன. அப்போதுதான், 1919 ஏப்ரலில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களைச்  சுட்டுக் கொன்ற ஜாலியன்வாலாபாக் படுகொலை நிகழ்ந்தது. இவ்வரலாற்றுச் செய்தியை நம்மில் பலரும் அறிவோம்.
சரி, இதற்கும், தொழிற்சங்க சட்ட உருவாக்கக் குழுவில் குமாரசாமி சாஸ்திரியை நியமனம் செய்ததற்கும் என்ன தொடர்பு என்று கேட்கத் தோன்றும். நேரடியான தொடர்பே உள்ளது. ரௌலட் சட்டக்  குழுவில் இடம்பெற்றிருந்த அறுவரில் ஒருவரும், ஒரே ஒரு இந்தியரும் நீதிபதி குமாரசாமி சாஸ்திரிதான். இந்திய மக்களுக்கு எதிரான அந்தச் சட்ட  வரைவை எழுதிக் கொடுத்தவரே  சாஸ்திரிதான் என்ற குறிப்புகளும் கிடைக்கின்றன.
ஆதலால்தான், தந்தை பெரியார், ரௌலட் சட்டத்தை எப்போதும் ரவுலட்- சாஸ்திரி சட்டம் என்றே குறிப்பார். மக்களிடம் பெரும் எதிர்ப்பை அந்தச் சட்டம்  எதிர்கொண்டதால், சத்தமில்லாமல் சாஸ்திரியின் பெயர் மறைக்கப்பட்டு, அது ரௌலட் சட்டம் ஆகிவிட்டது என்று சொல்வார்.
அப்படிப்பட்ட சாஸ்திரியைத் தொழிலாளர் சட்டம் உருவாக்குவதற்குத் தலைவர் ஆக்கினால்  என்ன ஆகும் என்று அஞ்சியே, தொழிலாளர்கள் அந்த நியமனத்தை எதிர்த்தனர்.  ஆனால் அந்தக் குழு புதிதாக எந்த முன்வரைவையும் கொடுக்காமலே போய்விட்டது.
சென்னை தொழிலாளர் சங்கம் உருவான பிறகு, தொழிலாளர்களிடையே ஓர் ஒற்றுமையும், துணிவும் ஏற்பட்டன. அந்த ஆலையை நடத்திவந்த பின்னி நிர்வாகத்திடம் அவ்வப்போது தங்கள் கோரிக்கையை முன்வைத்தனர். நிர்வாகமோ கேளாக்காதாகவே  இருந்தது.
போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று கருதிய தொழிலாளர்களும், தொழிற்சங்கமும் 21.06.1921 அன்று (சில நூல்களில் மே 21 என்று உள்ளது. அது பிழை. ஜூன் 21 என்பதே சரி) தொடங்கிய காலவரையற்ற போராட்டமே. பி அண்ட் சி ஆலைத்தொழிலாளர் போராட்டம் என்றும், தமிழகத்தின் முதல் மாபெரும் தொழிலாளர் போராட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.  இருப்பினும் அதற்கு முன்பே இரண்டு மூன்று சிறு சிறு போராட்டங்கள் 1920 அக்டோபர் தொடங்கி அங்கு நடந்துள்ளன.
1920 அக்டோபரில் நடேசன் என்பவருக்குப் பதவி உயர்வு கொடுக்காமல், அவருக்குக்  கீழே பணியாற்றியவர்களுக்குப் பதவி உயர்வு கொடுக்கப்பட்டதை எதிர்த்துத் தொழிலாளர்கள் உள்ளிருப்புப்  போராட்டம் நடத்தியுள்ளனர்.  வாடியா தலைமையிலான தொழிற்சங்கம் அதற்கு ஆதரவு கொடுத்துள்ளது.
போராட்டம் நடத்திய ஊழியர்களை நோக்கி, அந்த ஆலையின் மேலாளர் ஒருவர் துப்பாக்கியை உயர்த்திட, தொழிலாளர்கள் பாய்ந்து சென்று அதனைப் பிடுங்கியுள்ளனர். அடிதடி ஏற்பட்டுள்ளது. மறுநாள் காலை நிர்வாகம் ஆலையை மூடிவிட்டது.  மேலும், வாடியா, திருவிக உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கும் தொடுத்துள்ளது.
தொழிற்சங்கத்திற்கான சட்டப்பாதுகாப்பு ஏதும் இல்லாத அன்றைய சூழலில், சங்கத் தலைவர்கள் தடுமாறியுள்ளனர். வாடியாவை அழைத்துக்கொண்டு போய் அன்னிபெசன்ட் அம்மையார் நிர்வாகத்திடம் ரகசியமாகச் சமரசம் பேசியுள்ளார்.
திடீரென்று வேலை நிறுத்தம் செய்ததால், இந்த ஆண்டு யாருக்கும் ஊதிய உயர்வு இல்லை என்பது போன்ற நியாயமற்ற சில நிபந்தனைகளுடன், ஆலையை மீண்டும்  திறக்க நிர்வாகம் இசைந்துள்ளது. போராட்டம் வெற்றி பெற்றுவிட்டதாக வாடியா வெளியில் வந்து  கூறியுள்ளார். அதில் திருவிக உள்ளிட்ட தலைவர்களுக்கும், பெரும்பான்மையான தொழிலாளர்களுக்கும் உடன்பாடில்லை.
இருந்தபோதிலும், வேறு வழியின்றி வேலை நிறுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. வாடியா தலைமைப் பொறுப்பிலிருந்து விலகி, வெளிநாடு சென்றுவிட்டார். அதன்பிறகே திருவிக அச்சங்கத்தின் தலைவர் ஆகின்றார்.
1921 மே மாதம் இன்னொரு வேலை நிறுத்தம் நடைபெறுகின்றது. இது தொழிற்சங்கத்தின் ஒப்புதல் இன்றி, தன்னெழுச்சியாக நடந்த போராட்டம். பிறகு தலைவர்களின் அறிவுரைப்படி தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பியுள்ளனர்.

இதன்பின்பே அந்த மாபெரும் போராட்டம் தொடங்கியுள்ளது. இம்முறை முறைப்படி நிர்வாகத்திற்கு அறிவிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை நிர்வாகம் மதிக்கவில்லை. எனினும், நிர்வாகத்திற்கு உள்ளூர ஓர் அச்சம் இருந்தது. அங்கு பணியாற்றிய பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒற்றுமையாக இருந்ததே நிர்வாகத்தின் அச்சத்திற்குக்  காரணம்.  அந்த  ஒற்றுமையை உடைத்துவிட வேண்டும் என்று நிர்வாகம் திட்டமிட்டது.
அப்போது இந்தியா முழுவதும், காந்தியாரின் செல்வாக்கு பரவிக் கொண்டிருந்த நேரம்.  அதனால், முதல் உலகப் போர் முடிந்து நாடு முழுவதும் பசி, பஞ்சம் என்று இருந்தபோதும், காந்தியாரின் சொல்லுக்கு அனைவரும் கட்டுப்பட்டு ஒற்றுமையாக  இருந்தனர். கிலாபத் இயக்கம் வலிமையாக இருந்ததால், இந்து முஸ்லீம் பகையை ஏற்படுத்தவும் நிர்வாகத்தால் இயலவில்லை.  (கிலாபத் இயக்கம் குறித்து விரிவாகச் சொல்ல இங்கு இடமில்லை.  அறியாத வாசகர்கள் படித்தறிந்திட வேண்டுகிறேன்).
அப்போது தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த நீதிக்கட்சியுடன் தொழிற்சங்கத் தலைவர்கள் தொடர்பில் இருந்ததால்,  அரசையும் அவர்களால் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. ஆனாலும், தன் இறுதி ஆயுதமாக நிர்வாகம் ஒன்றைப் பயன்படுத்தியது.
பட்டியல் இனத்தவருக்கு (அன்று ஆதி திராவிடர்கள்) மட்டும் சில தனிச் சலுகைகளை வழங்கியது. காரணம், அந்த ஆலையில் பணியாற்றியவர்களில் பாதிப் பேர் அம்மக்களே.  நாடு முழுவதும் வறுமை இருந்தாலும், அம்மக்களின் வறுமை இன்னும் கொடியதாக இருந்தது. வர்க்க அடிப்படையில் தொழிலாளர்கள் இணைந்திருந்தாலும், அவர்களுக்குள்ளேயும் வருண-சாதி வேறுபாடுகள் இருக்கவே செய்தன. இடைச் சாதியினர் அவர்களைச்  சமமாக நடத்துவதில்லை, என்னும் செய்தி நிர்வாகத்தின் காதுகளுக்கும் எட்டியிருந்தது. எனவே அதனைப் பயன்படுத்தித் தொழிலாளர்களைப் பிரித்து விடலாம் என்று முடிவு செய்தது.
அந்த முடிவு அவர்ளுக்கு நல்ல பயனைப் பெற்றுத் தந்தது என்றே சொல்ல வேண்டும்.
வேலைநிறுத்தம் தொடங்குவதற்கு முதல் நாள், 19.06.1920 அன்று புளியந்தோப்பு பகுதியில் தனியாக ஒரு தொழிலாளர் கூட்டம் நடைபெற்றது. எம்.சி.  ராஜாவும், தேசிகாச்சாரி என்பவரும் அக்கூட்டத்தை நடத்தினர். அனைத்து ஆதி திராவிட வகுப்பைச் சேர்ந்த தொழிலாளர்களும் அதில் கலந்து கொண்டனர். தங்களுக்கு உரிய ஊதியத்தையும் பிற உரிமைகளையும் கொடுக்க நிர்வாகம் முன்வந்துவிட்ட பிறகு, வேலை நிறுத்தத்தில் நாம்  கலந்து கொள்ள வேண்டியதில்லை என்று அங்கு முடிவெடுக்கப்பட்டது.
“அடுத்தநாள், தொழிலாளர்கள் அனைவரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும்போது, ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களில் ஒரு பகுதியினர், வேலைக்குத் திரும்பிவிட்டனர்” என்று திருவிக தன் வாழ்க்கைக் குறிப்பில் எழுதுகின்றார்.  ஆனால் அவர்களுள் பெரும்பகுதியினர் வேலைக்குத் திரும்பி விட்டனர் என்பதே உண்மை என்று பல நூல்கள் கூறுகின்றன.
இருப்பினும் வேலை  நிறுத்தமும், போராட்டமும் ஒரு பகுதித் தொழிலாளர்களுடன் தொடர்ந்தது. எம்.சி. ராஜா அப்போது நீதிக்கட்சியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததால், சமாதான முயற்சிகளும் நடந்தன. அவை பயனளிக்கவில்லை. எம்.சி.ராஜா  உடன்பட மறுத்துவிட்டார்.
வேலைக்குப் போகும் தொழிலாளர்களைக் கருங்காலிகள் என்று  போராடும் தொழிலாளர்கள் கூறி  எதிர்த்தனர். ஆதி திராவிடர்களை இழிவு படுத்துவதாக அது திரிக்கப்பட்டது. அதனால் தொழிலாளரிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டது.  அடிதடி, தீ வைப்பு என்பது வரையில் அந்தப் பகை நீண்டது.
செப்டம்பர் மாதம் நடைபெற்ற தொழிலாளர் ஊர்வலத்தில் வெளியிலிருந்து கற்கள் வீசப்பட்டன. ஆதி திராவிடர் பிரிவுத்  தொழிலாளர்களே அப்படிச் செய்தனர் என்று பெரும்குமுறல் இப்பக்கம் எழுந்தது. நிர்வாகமே ஆள் வைத்துச் செய்துவிட்டு அவர்கள் மீது பழிவரக் காரணமாயிருந்தனர் என்றும் சில நூல்கள் கூறுகின்றன. அந்த ஊர்வலத்தின் போது  காவல்துறையின் துப்பாக்கிச் சூடும்  நடந்தது. எட்டுப் பேர் பலியானார்கள்.
நீதிக்கட்சி ஆட்சியில் இருந்தாலும், அது அதிகாரமற்ற இரட்டை ஆட்சி முறை என்பதால், ஆங்கிலேய அரசே நேரடியாகத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியது. ஆனால்,  அந்தப் பழி நீதிக்கட்சி ஆட்சியின் மீதும் விழவே செய்தது.
போராட்ட நாள்கள் நீடிக்க, நீடிக்க வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் கொடும் வறுமைக்கு உள்ளானார்கள்.தொழிற்சங்க நிதியிலிருந்து ஒரு சிறு தொகை மாதாமாதம் அவர்களுக்குக்  கொடுக்கப்பட்டது. சுப்ரமணிய சிவா போன்றவர்கள் தொழிலாளர்களுக்காக மக்களிடம்  மடிப்பிச்சை ஏந்தினார்கள். நீதிக்கட்சித் தலைவர் சர்.பிட்டி.தியாகராயர் தன் சொந்தக் செலவில் ஒவ்வொரு நாளும் வண்டி வண்டியாகக் காய்கறிகளை அனுப்பிவைத்தார்.
எல்லா முயற்சிகளும் தொழிலாளர் பசி தீர்க்கப் போதுமானவையாக இல்லை என்பதே எதார்த்தமாக இருந்தது. ஆறுமாதப் போராட்டத்தில் ஒரு தளர்வு எற்பட்டது. வேலைக்குத் திரும்பிவிடலாம் என்ற கருத்து சிலரிடம் உண்டானது.  பசியால் வாடும் குழந்தைகளின் அழுகுரல், போராட்டப்  போர்க்குரலை  நிலைதடுமாற வைத்தது. நெஞ்சு நிமிர்ந்து நின்றது. ஆனாலும் வயிறு பணிந்து சென்றது.
ஆறுமாதப் போராட்டம் தோல்வியடைந்தது. தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பினர். அந்த சூழல் ஏற்படுத்திய வறுமை, மனச் சோர்வு, பகை எல்லாம் மாறுவதற்குப் பல காலங்கள் ஆயின.
போராட்டம் தோல்வி அடைந்ததற்கு எம்.சி.ராஜா போன்றவர்களே காரணம் என்று நாகை முருகேசன் போன்றவர்கள் நேரடியாகக் குற்றம் சாற்றினர். திருவிக வும் தன் மனக்குமுறலைப் பதிவு செய்துள்ளார். ஆனால் ஆதி திராவிடர் தலைவர்கள் சிலர், பிட்டி தியாகராயர், ஆதி திராவிடர்களுக்கு எதிராக வெளியிட்ட அறிக்கைதான் காரணம்  என்றனர். அப்படியொரு அறிக்கை இன்றுவரையில் கிடைக்கவில்லை என்கிறார் க.திருநாவுக்கரசு. பேராசிரியர்கள் ஆ.சிவசுப்பிரமணியன், இரா. வேங்கடாசலபதி ஆகியோர் எழுதியுள்ள “பின்னி மில் தொழிலாளர் வேலைநிறுத்தம் 1921” என்ற நூலிலும் அந்த அறிக்கை பற்றிய குறிப்பு ஏதுமில்லை என்கின்றனர். (எனக்கு அந்த நூல் கிடைக்கவில்லை)

“போராடாமல் இருப்பதை விட, போராடித் தோற்பதே மேல்” என்று இப்போராட்டம் குறித்துச் சிங்காரவேலர் எழுதியுள்ளார்.
போராட்டங்களில் வெற்றியும் தோல்வியும் இயல்பானதே.  தோல்வியிலும் சில நன்மைகளும், பாடங்களும் கிடைக்கவே செய்யும்.
ஆம், அம்மாபெரும் போராட்டத்தின் விளைவாகவே, 1926 ஆம் ஆண்டு “தொழிற்சங்கச் சட்டம்” அரசினால் ஏற்கப்பட்டது. பி அண்ட் சி மில் நிர்வாகமே அந்தச் சட்டத்தை 1932 ஆம் ஆண்டு ஏற்றுக்கொண்டது.
இன்று தொழிற்சங்கங்கள்  பெற்றுக்கொண்டிருக்கும் பல நியாயமான வெற்றிகளுக்கு அடித்தளமிட்டது அந்த ஆலைத்  தொழிலாளர் போராட்டம்தான்!
அந்தப் போராட்டத்தில் இறந்துபோன, காயங்களை நெஞ்சில் சுமந்த அத்தனை போராளிகளுக்கும் நம் வீரவணக்கம்!
(களங்கள் தொடரும்)
-சுப. வீரபாண்டியன்-
பயன்பட்ட நூல்கள் :
==================

  1. கலியாணசுந்தரனார், திருவாரூர், வி. – “திரு.வி.க. தமிழ்க்கொடை தொகுதி 6” – தமிழ்மண் பதிப்பகம், தியாகராயர் நகர், சென்னை-17
  2. கேசவன், டாக்டர் கோ., – “பொதுவுடைமை இயக்கமும் சிங்காரவேலரும்” – சரவண பாலு பதிப்பகம், விழுப்புரம்-2
  3. வீரமணி, பா. – “சிங்காரவேலர்” -சாகித்ய அகாதெமி, புது தில்லி
  4.  கணேசன், பு.சி.,- “தமிழர் எழுச்சியின் திறவுகோல் திரு. வி.க” பசும்பொன் பதிப்பகம்,          சோழபுரம் தெற்கு 626139
  5. முத்துகுணசேகரன்,  “மாமேதைசிந்தனைச் சிற்பிம.வெ. சிங்காரவேலர்” – சிந்தனைச் சிற்பி பதிப்பகம், சென்னை-81
  6. அருணன் – “வ.உ.சி. கடைசி காலத்தில் தடம் மாறினாரா?” -வசந்தம் வெளியீட்டகம், மதுரை-1
  7. திருநாவுக்கரசு,க. – “நீதிக்கட்சி வரலாறு – பிற்சேர்க்கை 10” – நக்கீரன் பதிப்பகம், சென்னை-4
  8. சீனிவாசன், பழங்காசு ப., – “சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலரின் வரலாறு, உண்மையும் புரட்டும்”  – சிங்காரவேலர் கல்வி அறக்கட்டளை, சென்னை-5
  9. கிருஷ்ணமூர்த்தி, அனிதா, கு. -“தமிழர் தந்தை வ.உ.சிதம்பரனார்” -அனிதா பதிப்பகம், திருப்பூர்-641687

Disclaimer: எங்கள் செய்தி இணையதளத்தில் வரும் தொடர்கள் யாவும் பத்திரிகை டாட் காமிற்கே பிரத்தியேக, தனிப் பிரசுர உரிமை வழங்கப்பட்டுள்ளது . எனவே, பத்திரிகை டாட் காமின் முன் அனுமதியின்றி இதனை முழுவதுமாகவோ இல்லை இதில் வரும் சில பகுதிகளையோ உங்கள் பயன்பாட்டிற்கு உபயோகிக்க அனுமதியில்லை.