இந்தியா விடுதலை பெறுவதற்குச் சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கி, விடுதலை பெற்றுச் சில ஆண்டுகள் வரையில் தொடர்ந்த ஒரு வீரம் செறிந்த போராட்டம் தெலங்கானா உழவர்களின் போராட்டம். இலட்சக்கணக்கான உழவர்கள் போராட்டத்தில் பங்கேற்று, ஆயிரக்கணக்கானவர்கள் சிறை சென்ற போராட்டம் அது. ஆயுதம் ஏந்திய விவசாயிகளின் போராட்டம் என்றும் அதனை அழைக்கலாம்.

கொத்தடிமை முறையை ஒழித்து, நிலவுடைமை அமைப்பை எதிர்த்து, மூவாயிரம் கிராமங்களில் விவசாயிகள் நடத்திய போராட்டம், தெலங்கானா போராட்டம். தங்களின் மண்ணைக் காக்க ஆயுதம் ஏந்தி நின்றனர் அந்த மக்கள். அப்போது தெலங்கானாவில் நிஜாம் மன்னரின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. கடுமையான ஒடுக்குமுறைகளை எதிர்கொண்ட மக்கள் தங்களின் போர்முறையை மாற்றினர். கொரில்லா போராட்டத்தினராக அவர்கள் ஆக வேண்டிய சூழல் ஏற்பட்டது. கைகளில் செங்கொடி ஏந்தி, கம்யூனிஸ்ட் கட்சி ஓங்குக என்று முழக்கமிட்டனர்.

அப்போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே, இந்தியா விடுதலை பெற்று, நிஜாமின் ஆட்சி மறைந்து இந்தியாவோடு அது இணைக்கப்பட்டது. ஆனாலும், போராட்டம் நிற்கவில்லை தொடர்ந்தது, ஒடுக்குமுறையும் தொடர்ந்தது. 1949 இறுதிவரையில் அடக்குமுறைகள் கைது நடவடிக்கை, கடுமையான தாக்குதல்கள் எல்லாம் தொடர்ந்து கொண்டே இருந்தது. உறுப்பினர்களின் எண்ணிக்கை மரணத்தாலும், தலைமறைவுகளாலும் குறையத் தொடங்கிற்று. விவசாயப் படைகளின் பெரும்பகுதி, கட்சி ஆணைப்படி நாட்டிலிருந்து காட்டிற்குள் சென்றது. காட்டுப்பகுதிகளில் மக்கள் இயக்கம் பரவிக் கொண்டிருந்தது. ஒரு சிறுபடை சமவெளிகளில் நின்று இரகசியமாக வேலை செய்து கொண்டிருந்தது. சிலர் அரசாங்கத்திடம் சரணடையவும் செய்தனர். இறுதியாக 1951இல், அப்போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

எனினும், அப்போராட்டத்தின் வீச்சு, நாடு முழுவதும் பரவி இருந்தது. கம்யூனிஸ்ட் கட்சி அதன் மூலமாக மக்களிடம் செல்வாக்குப் பெற்று, வீறு கொண்டு எழுந்தது. விடுதலை பெற்ற இந்திய அரசுக்கு எதிரான அணி திரட்டலை அது முன்வைத்தது. 1948ஆம் ஆண்டு, ‘ஏ ஆஜாதி ஜூத்தா ஹை’(இந்த சுதந்திரம் பொய்யானது) என்ற முழக்கத்தைப் பொதுவுடைமைக் கட்சி நாடெங்கும் பரப்பியது. அதனால் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், பொதுவுடைமைக் கட்சிக்கும் இடையில் பகை வளரத் தொடங்கிற்று.

இத்தருணத்தில் 1948 பிப்ரவரி 28 முதல் மார்ச் 6 வரை கல்கத்தாவில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின், இரண்டாவது அகில இந்திய மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் இந்தியா முழுவதிலுமிருந்து 632 பிரதிநிதிகள் பங்கேற்றனர். ஒரு வாரம் நடைபெற்ற அந்த மாநாட்டில், இந்தியாவிற்கு உண்மையான சுதந்திரம் இன்னும் கிடைக்கவில்லை என்றும், புரட்சியின் கட்டம் நெருங்கிக் கொண்டிருப்பதாகவும், அதற்குரிய போர்த் தந்திரங்களை வகுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பி.டி.ரணதிவே

அந்த மாநாட்டில்தான் பி.டி.ரணதிவே கட்சியின் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்றுக் கொண்டு பேசிய முதல் உரையிலேயே, ‘தெலங்கானா வழியே நமது வழி’ என்னும் முழக்கத்தை முன்வைத்தார். அது அரசாங்கத்தைப் பெருமளவிற்கு அச்சுறுத்திவிட்டது. மத்தியிலிருந்த நேருவின் அமைச்சரவை, குறிப்பாக உள்துறை அமைச்சராக இருந்த வல்லபாய் பட்டேல், பொதுவுடைமைக் கட்சியை இதற்கு மேலும் செயல்பட அனுமதிக்கக் கூடாது என்னும் முடிவுக்கு வந்துவிட்டார்.

மார்ச் 26ஆம் தேதி, கம்யூனிஸ்ட் கட்சி, ஒரு சட்டவிரோதக் கட்சி என்று மேற்குவங்க(காங்கிரஸ்) அரசாங்கம் அறிவித்தது. மத்திய அரசின் நேரடிப் பார்வையிலிருந்த யூனியன் பிரதேசமான டெல்லியில் மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் பொதுவுடைமைக்கட்சி அலுவலகங்கள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு, இறுதியில் மூடி சீல்வைக்கப்பட்டன. அந்த அலுவலகத்தில் இருந்த 17 தோழர்கள் கைது செய்யப்பட்டனர். அதேபோல, பீகார், உத்தரபிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலும் நடவடிக்கைகள் தொடர்ந்தன.

1949 அக்டோபரில், சென்னை மாகாணத்திலும் பொதுவுடைமைக் கட்சியின் மீதான தடை விரிவு செய்யப்பட்டது. பொதுவுடைமைக் கட்சியினரைப் பற்றிப் பேசுவதோ, அந்தக் கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் சொல்வதோ கூட ஒரு மிகப்பெரிய பயங்கரவாதமாகக் கருதப்பட்டது. சிவப்புக் கொடி என்பதே, பயங்கரவாதத்தின் அடையாளம் என்பது போல மக்களிடம் கருத்துகள் பரப்பப்பட்டன. சுருக்கமாகச் சொன்னால், 1967ஆம் ஆண்டு, இந்தோனேஷியாவில், சுகர்ணோவின் ஆட்சியை அகற்றிவிட்டுப் பதவிக்கு வந்த சுகர்ட்டோ ஆட்சியில் எப்படிப் பொதுவுடைமைக் கொள்கையினர் ஒடுக்கப்பட்டார்களோ, அதே போன்ற நிலைமைதான் இந்தியா முழுவதும் இருந்தது. தமிழ்நாடும் அதற்கு விதிவிலக்காக இல்லை.

தமிழ்நாட்டில் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் முதலமைச்சராக இருந்து, விலகிய நேரம் தொடங்கி, பி.எஸ்.குமாரசாமி ராஜா முதலமைச்சராக இருந்த காலம் முழுவதும் இந்த ஒடுக்குமுறைகள் தொடர்ந்து கொண்டே இருந்தன.

இந்தியா முழுவதும் ஒடுக்குமுறைகளும், பொதுவுடைமைக்கட்சியினரின் போராட்டங்களும் நடந்து கொண்டிருந்தன என்றாலும், தமிழக அளவில் நடந்தவைகள் குறித்து மட்டும் நாம் விரிவாகப் பார்க்கலாம்.

பல நூல்கள் இக்காலகட்டத்தின் போராட்டங்கள் பற்றிக் கூறுகின்றன என்றாலும், மிகச்சுருக்கமான செய்திகளையே அவை தருகின்றன. செய்த தியாகமும், சிந்திய இரத்தமும் போதுமான அளவிற்கு நூல்களில் பதிவு செய்யப்படவில்லை என்றே தோன்றுகிறது. அதனால், அவை அடுத்தடுத்த தலைமுறைகளை உரிய அளவில் சென்றடையவில்லை என்பது ஒரு வருத்தத்திற்குரிய செய்திதான். எனினும், என்.இராமகிருஷ்ணன் எழுதிய, ‘தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்னும் நூல், அச்செய்திகளைச் சற்று விரிவாகவே பதிவு செய்துள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில், கட்சி தடை செய்யப்படுவதற்கு முன்பே, காவல்துறை நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. சீர்காழி சாமித்துரை, கே.ஆர்.ஞானசம்பந்தம், அய்யாசாமி தேவர் ஆகியோர் முதலில் கைது செய்யப்பட்டவர்கள். அடுத்து, தொழிற்சங்கத்தலைவர் கே.டி.கே.தங்கமணி, சாமிநாதன் ஆகியோர் கைதாகினர். கேரளாவைச் சேர்ந்த புகழ்பெற்ற தலைவர்களில் ஒருவான ஏ.கே.கோபாலனும், தமிழகத்தின் வேலூர்ச் சிறையில்தான் அடைக்கப்பட்டிருந்தார்.

ப.ஜீவானந்தம்

கல்கத்தா மாநாடு முடிந்து, இரகசியமாகத் தமிழகம் வந்தடைந்த ஏ.எஸ்.கே., பாலதண்டாயுதம், என்.சங்கரய்யா, எம்.வி.சுந்தரம் ஆகியோர் வெவ்வேறு ஊர்களில் கைது செய்யப்பட்டனர். நூற்றுக்கணக்கானவர்கள் தலைமறைவாகிவிட்டனர். அவர்களும் ஒவ்வொருவராகக் கைது செய்யப்பட்டுக் கொண்டே இருந்தனர். அவர்களுள் வி.பி.சிந்தன், வி.கே.கோதண்டராமன், என்.டி.வானமாமலை ஆகியோரும் அடங்குவர். அப்போது இலங்கைக்குச் சென்றிருந்த ப.ஜீவானந்தம் இரகசியமாக காரைக்கால் வந்து சேர்ந்தார். ஆனால், அவரும் சில நாள்களில் கைது செய்யப்பட்டுவிட்டார்.

தஞ்சை மாவட்டம் முழுவதும், போராட்டம் கொழுந்துவிட்டு எரிந்தது. ஒருபக்கம் அறப்போராட்டமாகவும், மறுபக்கம் ஆயுதப் போராட்டமாகவும் அது விளங்கியது. நிலவுடைமையாளர்கள், பண்ணையார்கள் சிலரின் அடக்குமுறைகளும் மிகக் கூடுதலாயின. குறிப்பாக, தஞ்சை மாவட்டம், ஆலத்தூர் கிராமம் முழுவதுமே குன்னியூர் சாம்பசிவ ஐயருக்குச் சொந்தமாக இருந்தது. அவர், விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்கவதற்காக மதுரை, இராமநாதபுரம் மாவட்டங்களிலிருந்து அடியாள்களை அழைத்துக் கொண்டு வந்தார்.

அவரை எதிர்த்து களப்பால் குப்பு போன்ற எதற்கும் அஞ்சாத வீரர்கள் சிலர், விவசாயிகளைத் திரட்டிப் பண்ணையாருக்கு எதிராகப் போராடினர். ஒருநாள் காவல்துறை அந்த கிராமத்தையே வளைத்து, 14 விவசாயிகளைக் கைது செய்து கொண்டு போனது. அதனைக் கண்டித்து 10,000 மக்கள் காவல்நிலையத்தின் முன்பு கூடினர். தடியடிக்கும் அஞ்சாமல் கூடி நின்றனர். பிறகு, காவல்தறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. நடேசன், மஞ்சான் ஆகிய இரண்டு விவசாயிகளும் அந்த இடத்திலேயே இறந்தனர். தலைமறைவாக இருந்த களப்பால் குப்புவும் பிறகு விஷம் கொடுத்து கொல்லப்பட்டார்.

பி. சீனிவாசராவ்

என்ன செய்தும், போராட்டம் ஓயவில்லை. ஒருபுறத்தில் களப்பால் குப்பு என்றால், அதே தஞ்சை மாவட்டத்தின் மறுபுறங்களில் பி.சீனிவாசராவ், வாட்டாகுடி இரணியன் ஆகியோர் போராடினர். பி.சீனிவாசராவ் பற்றித் தனியாகக் கூறியாக வேண்டும். அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் இல்லை, விவசாயியும் இல்லை. பிறப்பால் ஒரு பார்ப்பனர். ஆனாலும், உழைக்கும் மக்களுக்காகவும், விவசாயிகளுக்காகவும் தன் உயிரையே பலி கொடுத்த மாபெரும் தியாகி அவர்.

அதேபோல, பட்டுக்கோட்டை வட்டம், வாட்டாகுடி என்னும் கிராமத்தில் பிறந்தவர் இரணியன். மலேயாவில்,(இன்றைய மலேசியா) பணியாற்றியவர். அங்கே தொழிற்சங்கத் தலைவராக இருந்தார். இங்கு வந்தும், தடை செய்யப்பட்டிருந்த பொதுவுடைமைக் கட்சியில் இணைந்து இரவு பகலாகப் பணியாற்றினார். 1950ஆம் ஆண்டு, மே மாதம் 5ஆம் தேதி, இரணியனும், அவருடைய தோழர் ஆம்பலாம்பட்டு ஆறுமுகமும், ஒரு சவுக்குத் தோப்பில் இரகசியமாகச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தனர். அந்த இடத்திற்கு வந்த காவல்துறை, இருவரையும் அதே இடத்தில் சுட்டுக் கொன்றது.

கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டவர்களும், கடும் போராட்டத்தை மேற்கொண்டனர். அவர்களின் போராட்டம் இரண்டு விதமாக இருந்தது. ஒன்று, சிறையில் நடக்கும் கொடுமைகளை எதிர்த்தும், சிறைச் சீர்த்திருத்தம் வேண்டியும் போராட்டம் நடைபெற்றது. இன்னொன்று, பொதுவாக மக்கள் படும் துயரங்களுக்காகவும் உள்ளே இருந்து போராடினர்.

சிறைக்குள் வந்தும் போராடுவதை, அரசினால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை. அவற்றை ஒடுக்குமாறு, சிறை அதிகாரிகளுக்கு அரசு ஆணையிட்டது. எல்லாச் சிறைகளிலும், ஒவ்வொரு நாளும் விதவிதமான அடக்குமுறைகள் நிகழ்த்தப்பட்டன. அடி, உதை என்பது அனைத்துச் சிறைகளிலும் பொதுவான ஒன்றாக இருந்தது. ஆனால், வேலூர், சேலம் சிறை அதிகாரிகள் மிகமோசமாக நடந்து கொண்டனர். நகக் கண்களில் ஊசி ஏற்றுதல், மிளகாய்ப் பொடித் தூவுதல், நிர்வாணமாக்கி அடித்து உதைத்தல், போன்றவைகள் அங்கு நடைபெற்றன. குறிப்பாக, வேலூர்ச் சிறையில் கண்காணிப்பாளராக இருந்த மீனாட்சி சுந்தரம் என்னும் அதிகாரி, மிகக் கொடுமையாக நடந்து கொண்டார். வெளிநாட்டில் படித்துப் பாரிஸ்டர் பட்டம் பெற்றவரான மோகன் குமார மங்கலத்தை, நிர்வாணப்படுத்தி, சிறை முழுவதும் நடந்து வரச் செய்தார். இவ்வளவிற்கும், மோகன் குமார மங்கலத்தினுடைய தந்தையார் டாக்டர் சுப்பராயன் காங்கிரஸ் ஆட்சியில் அன்று அமைச்சராக இருந்தார்.

வேலூர்ப் பெண்கள் சிறையில் இருந்த கே.பி.ஜானகிஅம்மாள், என்.எஸ்.ருக்மணிஅம்மாள், மணலூர் மணியம்மாள், சொர்ணத்தம்மாள் ஆகியோர் மீதும் தடியடி நடத்தப்பட்டது. கைக்குழந்தையோடு சிறைக்கு வந்திருந்த அனுசியா என்னும் பெண் தோழரின் குழந்தையை அவரிடமிருந்து பறித்து, வெளியில் நின்றிருந்த உறவினர்களிடம் கொடுத்துவிட்டனர். இப்படிப்பட்ட, ஆங்கிலேயர் ஆட்சியில்கூட கண்டிராத, கொடுமைகள் பல, அன்று இங்கே நடந்தன.

1949 நவம்பர் 19 அன்று, மதுரையில் நடந்த ஒரு கொடுமை பற்றியும் இங்கே கூற வேண்டும். கட்சியின் அடுத்தக்கட்டச் செயல்பாடுகளைத் தீர்மானிப்பதற்காக, நகரச் செயலாளர் மணவாளன் தலைமையில், மாரி, பி.கருப்பையா, கோவிந்தன், முத்தையா உள்ளிட்டோர் மதுரை நரிமேட்டில் உள்ள ஒரு வீட்டில் இரகசியமாகப் பேசிக் கொண்டிருந்தனர். ஒரு கயவனால் அக்கூட்டம் காட்டிக் கொடுக்கப்பட்டது. அதன் காரணமாக அங்கு வந்த காவல்துறையினர், அந்த இடத்திலேயே மணவாளனையும், மாரியையும் சுட்டுத்தள்ளினர்.

சிலருக்குத் தூக்குத் தண்டனையும், பலருக்கு ஆயுள் தண்டனையும், மிகப் பலருக்கு ஆண்டுக்கணக்கில் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டன. அவ்வாறு மதுரையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் ஐவர். அவர்களுள் ஒருவர் பாலு. பிற்காலத்தில் ‘தூக்குமேடை பாலு’ என்று அழைக்கப்பட்டவர் அவர். பாலு முதலில் காவல்துறையில் பணியாற்றினார். தெலங்கானா விவசாயிகளை ஒடுக்குவதற்காக அனுப்பப்பட்ட காவல்துறையினரில் அவரும் ஒருவராக இருந்தார். திருடர்களை, சமூக விரோதிகளை ஒடுக்குவதற்குத்தான் காவல்துறையே தவிர, தங்கள் உரிமைகளுக்காகப் போராடுகிற மக்களை அடித்து நொறுக்குவது நம் வேலையில்லை என்று அவர் சொன்னார். அவரால் அந்த வேலையில் தொடர முடியவில்லை.

அந்த நேரத்தில் கம்யூனிஸ்டுகளை, வேவு பார்த்துவந்த ஒரு காவல்துறை தலைமைக்காவலர் செண்பகம் என்பவர் கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில்தான் பாலுவும், அவரது தோழர்கள் மருதை, டேவிட் ராஜாமணி உள்ளிட்ட 6 பேரும் கைது செய்யப்பட்டனர். பாலுவிற்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. விடிந்தால் தூக்குத் தண்டனை. ஆனால், அது குறித்து அவர் சற்றும் கவலைப்படாமல், ஜீவா எழுதிய ‘செங்கொடி ஏந்தி வாரீர்’ என்னும் பாடலையும், எம்.ஆர்.எஸ்;.மணி எழுதிய, ‘செங்கொடி என்றதுமே எனக்கொரு ஜீவன் பிறக்குதம்மா’ என்னும் பாடலையும் இரவு முழுவதும் பாடிக் கொண்டிருந்தார். அடுத்த நாள் காலை அவர் தூக்குமேடைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, சிறையின் அடுத்தடுத்த அறைகளில் இருந்த பொதுவுடைமைக் கட்சித் தோழர்கள், ‘பாலு வாழ்க, பாலு வாழ்க’ என்று முழக்கமிட்டனர். அப்போது பாலு அவர்களைப் பார்த்து, ‘பாலு என்னும் தனிமனிதனை ஏன் வாழ்த்துகின்றீர்கள்? கம்யூனிஸ்ட் கட்சி வாழ்க, பொதுவுடைமைச் சமுதாயம் மலர்க’ என்று முழக்கமிடுங்கள் எனக் கூறினார். பகத்சிங்கைப் போலத் தூக்குமேடை கண்டு அஞ்சாமல், அவர் மடிந்து போனார்.

தமிழ்நாட்டிலேயே, மிகக் கொடுமையான நிகழ்வு ஒன்று, 1950ஆம் ஆண்டு, பிப்ரவரி 11ஆம் தேதி, சேலம் சிறைச்சாலையில் நடைபெற்றது. அந்தச் சிறையில் அப்போது, 350 பொதுவுடைமைக் கட்சித் தோழர்கள் இருந்தனர். அடிக்கடி பட்டினிப் போராட்டம், தொடர் முழக்கப் போராட்டம் ஆகியனவற்றை அவர்கள் நடத்திக் கொண்டிருந்தனர். அதிகாரிகளின் சர்வாதிகாரமான ஆணைகளுக்குக் கீழ்ப்படிய மறுத்தனர். அதனால், அந்தச் சிறையில் ஒரு மோதல் போக்கு இருந்து கொண்டே இருந்தது. சட்டென்று மேலே குறிப்பிட்ட அந்த நாளில், யாரும் எதிர்பார்க்காத வகையில், அதிகாலையில், இருநூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள், துப்பாக்கிகளோடு இவர்கள் இருக்கும் தொகுதிக்குள் நுழைந்தனர். கண்மூடித்தனமாக, எல்லோரையும் அடித்துத் தாக்கினர். இவர்களும், அவர்களைத் திருப்பித் தாக்கினர். அந்த இடமே யுத்தக்களமாயிற்று. அப்போது அங்கு வந்த சிறைக் கண்காணிப்பாளர், துப்பாக்கிச்சூட்டிற்கு ஆணையிட்டார்.

சிறைக்குள் நடந்த துப்பாக்கிச்சூடு, அந்த இடத்திலேயே, 22 உயிர்களைப் பலிவாங்கிவிட்டது. சேலம் சிறையில், தோழர்கள் அன்று சிந்திய இரத்தம், வரலாற்றுப் பக்கங்களில், இன்னும் காயாமலே இருக்கிறது. ஆனால், அன்று இறந்து போனவர்களின் தியாகம் இன்னமும் போதுமான அளவிற்கு அடுத்தடுத்த தலைமுறைகளுக்குச் சொல்லப்படாமலும் இருக்கிறது.

குத்தூசி குருசாமி

பொதுவுடைமைக் கட்சியினர் இவ்வாறு வேட்டையாடப்பட்ட போது அவர்களுக்கு ஆதரவாக, திராவிடர் கழகமும், அதன் தலைவர் தந்தை பெரியாரும், நாடு முழுவதும் சென்று, இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக, ஆவேசமாகக் குரல் எழுப்பினர். ஒரு கட்டத்தில், பொதுவுடைமைக் கட்சியினருடன் கருத்துப் போர் நடத்துவதில், முதன்மைப் பாத்திரம் வகித்த, பெரியாரும், குத்தூசி குருசாமியும்தான், அவர்களை ஆதரித்து எழுதுவதிலும் முதன்மைப் பாத்திரம் வகித்தனர் என்கிறார் எழுத்தாளர் எஸ்.வி.இராஜதுரை.

 

எம். கல்யாணசுந்தரம்

புதுக்கோட்டைச் சிறையிலிருந்து, 14.06.1951 அன்று, விடுதலையாகி வெளியில் வந்த, பொதுவுடைமைக் கட்சித் தலைவர்களில் ஒருவரான, தோழர் எம்.கல்யாணசுந்தரம், குத்தூசி குருசாமிக்கு எழுதிய கடிதத்தில்,

”என்னுடைய விடுதலை, திராவிடர் கழகம், கம்யூனிஸ்ட்
கட்சியின் ஐக்கியத்தின் வெற்றியாகும்…. கம்யூனிஸ்ட்
கட்சியும், தொழிலாளி விவசாய மக்களின் இயக்கமும்
காங்கிரஸ் பாசிஸ்ட் அடக்குமுறைக்குப் பலியானபொழுது
விடுதலைப் பத்திரிகை செய்துள்ள சேவை சரித்திரத்தில்
இடம்பெற வேண்டியது… என்னிடம் (திராவிடர் கழகம்)
காட்டியுள்ள நம்பிக்கைக்கும், அன்பிற்கும் தகுதியுடையவனாகவும்,
விசுவாசமுள்ளவானகவும் கடைசி மூச்சு உள்ளவரை
நடக்க உறுதி கூறுகிறேன்.”

என்று குறிப்பிட்டுள்ளார். அடக்குமுறைக் காலங்களில் கருப்பும், சிவப்பும் கைகோத்து நின்ற காட்சியை இக்கடிதம் காட்டுகிறது.

பொதுவுடைமைக்கட்சியினரின் செங்கொடி, 1950 போராட்டக் காலங்களில், தடியடிகளுக்கும், சித்திரவதைகளுக்கும் உள்ளான தியாகிகளின் இரத்தத்தில் தோய்த்து எடுக்கப்பட்டது என்பதையே இந்தப் போராட்ட வரலாறு நமக்கு உணர்த்துகிறது.

(களங்கள் தொடரும்)
அன்புடன்
சுப.வீரபாண்டியன்

பயன்பட்ட நூல்கள்
==================

1. இராமகிருஷ்ணன், என். – ”தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தோற்றமும், வளர்ச்சியும்(1917-1964)” – வைகை வெளியீடு, மதுரை.

2. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மத்திய கல்வி இலாகா) – ”இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றுக் குறிப்புகள்” – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, சென்னை -17.

3. இராகுலன் – ”இந்தியாவில் பொதுவுடைமை இயக்கம்” – புதுமைப் பதிப்பகம், ஆண்டான் கோயில், கரூர்.

4. திருமலை, ப. – ”மதுரை அரசியல்” – சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை-17.

5. இராஜதுரை, எஸ்.வி. – ”பெரியார்: ஆகஸ்ட் 15” விடியல் பதிப்பகம், கோவை

6. திருநாவுக்கரசு, க. – ”திமுக வரலாறு – பாகம் -1” – நக்கீரன் பதிப்பகம், சென்னை-4

Disclaimer: எங்கள் செய்தி இணையதளத்தில் வரும் தொடர்கள் யாவும் பத்திரிகை டாட் காமிற்கே பிரத்தியேக, தனிப் பிரசுர உரிமை வழங்கப்பட்டுள்ளது . எனவே, பத்திரிகை டாட் காமின் முன் அனுமதியின்றி இதனை முழுவதுமாகவோ இல்லை இதில் வரும் சில பகுதிகளையோ உங்கள் பயன்பாட்டிற்கு உபயோகிக்க அனுமதியில்லை.