சுபவீ எழுதும் போராட்டங்கள் – சட்ட எரிப்புப் போராட்டம்

--
இந்திய விடுதலைக்குப் பிறகு, தந்தை பெரியார் தலைமையில் திராவிடர் கழகம் பல போராட்டங்களை நடத்தியுள்ள போதிலும், 1957ஆம் ஆண்டு, நடத்தப்பட்ட அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம், ஒப்பீட்டளவில் மிகப் பெரியது. தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி, இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கே அது மிகப் புதியது என்று சொல்ல வேண்டும். சாதியையும், மதத்தையும், காப்பாற்றும் இந்திய அரசமைப்புச் சட்டத்தைக் கொளுத்துவதைத் தவிர, வேறு வழியில்லை என்று பெரியார், தஞ்சையிலே நடைபெற்ற மாநாட்டில் அறிவித்தார். அதன்படி, ஆயிரக்கணக்கானவர்கள் அச்சட்டத்தைக் கொளுத்திவிட்டுச் சிறைச் சென்றனர். தமிழகத்தையே உலுக்கிய, பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அந்தப் போராட்டம் குறித்து, விரிவாக அறிந்து கொள்ள வேண்டியுள்ளது.

அந்தப் போராட்டத்தை நாம் மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளலாம். போராட்டத்திற்கான காரணமும், அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, போராட்டம் தொடங்கும் வரையிலான 23 நாள்களில், தமிழகமெங்கும், சட்டமன்றம் உட்பட ஏற்பட்ட பரபரப்புகளும், முதல்பகுதியாகப் பார்க்கப்பட வேண்டியவை. சட்ட எரிப்பு, பல்லாயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டது, நீதிமன்ற விசாரணை மற்றும் தண்டனை ஆகியன இரண்டாம் பகுதியாகும். சிறையில் மடிந்து போனவர்கள், அவர்களுக்கான இறுதி ஊர்வலங்களை ஒட்டி நடந்த போராட்டங்கள் ஆகியனவற்றை மூன்றாம் பகுதியிலும் பார்க்கலாம்.

இந்த அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம் குறித்து, நூல்கள் பல வெளிவந்திருப்பினும், திருச்சி என்.செல்வேந்திரன் முன்னுரையோடு, கரு.மலையப்பன், பிரகாசு, இரா.மனோகரன் ஆகியோர் பல்வேறு ஆவணங்களைத் தொகுத்து, 3 தொகுதிகளாக வெளிவந்திருக்கும் நூல், போராட்டம் குறித்த அனைத்துச் செய்திகளையும் உள்ளடக்கியிருக்கிறது. ஏறத்தாழ 2,500 பக்கங்களில், போராட்ட நிகழ்வுகள், அனைத்தும் அந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளன.

1957 நவம்பர் மாதம் 3ஆம் தேதி, திராவிடர் கழகத்தின் சார்பில், தஞ்சையில் நடைபெற்ற தனிச்சிறப்பு(அப்போதெல்லாம், கட்டணம் வாங்கி நடத்தப்படும் மாநாடுகளை ஸ்பெஷல் மாநாடு என்று கூறுவார்கள்) மாநாட்டில், தீர்மானம் நிறைவேற்றப் பெற்று, அதேமாதம், 26ஆம் தேதி, இந்திய அரசமைப்புச் சட்டம், தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களிலும், கொளுத்தப்பட்டது. எனினும், இப்போராட்ட முடிவு, திடீரென்று ஒரேநாளில் எடுக்கப்பட்டது என்று சொல்லமுடியாது. பல ஆண்டுகளாக இதற்கான தேவைகளையும், விளக்கங்களையும், பெரியார் பேசிக் கொண்டே வந்திருக்கிறார். அது, கொஞ்சம் கொஞ்சமாக வலிமை பெற்று, இறுதியில் சட்ட எரிப்புப் போராட்டமாக ஒரு கட்டத்தில் உருவெடுத்தது.

நவம்பர் 26 என்னும் நாளை பெரியார், மிகுந்த கவனத்தோடுதான் தேர்ந்தெடுத்தார். அந்த நாளில்தான், 1949ஆம் ஆண்டு, இந்திய அரசமைப்புச் சட்டம், குடியரசுத் தலைவரால், கையொப்பமிடப்பட்டு, இறுதி செய்யப்பட்டது. அது நடைமுறைக்கு வந்த நாள் 1950 ஜனவரி 26ஆம் தேதியாக இருந்த போதிலும், இரண்டு மாதங்களுக்கு முன்பே, அது கையெழுத்தாகிவிட்டது. அதனால்தான், அந்த நாளைக் கவனமாகப் பெரியார் தேர்ந்தெடுத்தார்.

சாதி ஒழிப்பு என்பதுதான், சுயமரியாதை இயக்கம் தொடங்கி, பெரியாரின் அடிப்படைக் கொள்கையாக இருந்து வந்திருக்கிறது. சாதி எதிர்ப்பைப் பல வடிவங்களில், பெரியார் தலைமையிலான சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் ஆகியன வெளிப்படுத்திக் கொண்டே இருந்திருக்கின்றன. உச்சகட்டமாகத்தான், சட்ட எரிப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

அதே காலகட்டத்தில், சென்னை திருவல்லிக்கேணியில் இருந்த, இப்போதும் இருக்கிற, ஒரு உணவு விடுதியின் முன்னால், போராட்டம் தொடங்கப்பட்டதை, நாம் முற்பகுதியில் பார்த்தோம். ‘முரளி பிராமணாள் உணவகம்’ என்னும் பெயரில் உள்ள பிராமணாள் என்னும் சொல்லை நீக்க வேண்டும் என்பதே குறிக்கோள். 1957 மே 5ஆம் தேதி, தொடங்கப்பட்ட அப்போராட்டம் எப்படியெல்லாம் நடைபெற்றது, எப்படி முடிவடைந்தது என்பதை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். எட்டு மாதங்கள் நடைபெற்ற அப்போராட்டம், வெற்றிகரமாக முடிவடைவதற்கு முன்பே, இடையில் இப்பெரிய போராட்டமும் தொடங்கிவிட்டது. ஒருவகையில் இரண்டும், ஒன்றோடொன்று தொடர்புடையனவாக இருப்பதையும் நம்மால் உணர முடிகிறது.

சாதிக்கு எதிரான சிறுசிறு போராட்டங்களை நடத்திக் கொண்டிருப்பதைவிட, சாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தையே கொளுத்திவிடலாம் என்னும் முடிவுக்குப் பெரியார் வந்திருந்தார். அம்முடிவை, தஞ்சாவூர் மாநாட்டில் அறிவித்தபோது, தமிழக அரசும், மக்களும் எதிர்பாராத அதிர்ச்சிக்கு உள்ளாகினர். எந்தவொரு செயலும், சட்டத்திற்குட்பட்டதா, சட்டத்தை மீறியதா என்னும் விவாதம்தான் எப்போதும் எழும். ஆனால், சட்டத்தையே கொளுத்துகிற, ஒரு போராட்டத்தை, அதற்கு முன்பு தமிழகம் கண்டதில்லை. அவ்வாறு சட்டத்தைக் கொளுத்துவதற்கு, என்ன தண்டனை என்பதும் சட்டப்புத்தகத்தில் இல்லை. சட்டத்தை இயற்றியவர்களே கூட, சட்டத்தையே கொளுத்துகிற ஒரு போராட்டம் நடைபெறும் என்று எதிர்பார்த்திருக்கிற வாய்ப்பில்லை. அதனால், என்ன செய்வது என்னும் ஒரு பெரும் குழப்பம் தமிழக அரசுக்கு எழுந்தது. என்ன ஆகும் என்ற எதிர்பார்ப்பு தமிழகத்தின் அரசியல் சூழலிலும் உருவாயிற்று.

தமிழ்நாட்டின் அன்றைய அரசியல் நிலை என்ன என்பதையும், நாம் காண வேண்டியுள்ளது. அப்போதுதான், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்து, காங்கிரஸ் வெற்றி பெற்று, காமராசர் முதலமைச்சராக ஆகியிருந்தார். அந்தத் தேர்தலில், பெரியார் முழுமையாகக் காங்கிரசை ஆதரித்தார். குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், அவர் ‘பச்சைத் தமிழர்’ என்று கருதிய காமராசருக்கு ஆதரவாகவே அத்தேர்தல் முழுவதிலும் பரப்புரை செய்தார். திமுகவை, மிகக் கடுமையாக எதிர்த்தும், தேர்தலில் பெரியார் பணியாற்றினார். அவர் விருப்பப்படியே காமராசர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள ஆறு மாதங்களுக்குள், சட்ட எரிப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. ஆகவே, பெரியார், காமராசர், அண்ணா எல்லோருக்குமே ஒரு தர்மசங்கடமான சூழ்நிலையும் அன்று ஏற்பட்டது என்று சொல்ல வேண்டும். பெரியாரோ, நான் தனி மனிதர்களைப் பற்றிக் கவலைப்பட முடியாது. சாதி ஒழிப்பிற்கான போராட்டத்தை, முன்னெடுத்தே தீர வேண்டியவனாக இருக்கிறேன் என்று அறிவித்துவிட்டார்.

சட்ட எரிப்புப் போராட்டத்திற்கு, முன்பே இன்னொரு வழக்கில், பெரியார் கைது செய்யப்பட்டார். பேச்சுவழக்கில் அதனை ‘குத்துவெட்டு வழக்கு’ என்று சொல்வார்கள். பெரியாருக்கும், குத்துவெட்டுக்கும் என்ன தொடர்பு என்றுதான் தோன்றும். ஆனால், அதுவும் ஒரு முக்கியமான வழக்கு.

தஞ்சை ஸ்பெஷல் மாநாட்டிற்கு முன்பு, அக்டோபர் மாதத்தில் பெரியார் குளித்தலை, கரூர் பசுபதிபாளையம், திருச்சி ஆகிய ஊர்களில் பொதுக்கூட்டங்களில் பேசினார். அந்தச் சொற்பொழிவுகள், வழக்கத்திற்கு மாறாக, மிகக் கடுமையாகத்தான் இருந்தன. ”இந்த நாட்டில் சாதி ஒழிக்கிறது என்று சொன்னால், குறைந்தது, 1000 பார்ப்பானைக் கொன்றால் ஒழிய ஒழியாது” என்று குளித்தலையில் பேசினார். திருச்சியில் பேசும்போது ”பார்ப்பான் கத்தி ஒன்றுக்குத்தான் இணங்குவான். உதைக்குத்தான் அவன் இணங்குவான். வேறு ஒன்றிற்கும் இணங்கமாட்டான்” என்று பேசினார். இந்தப் பேச்சுகள் தொடர்பாக, தஞ்சை மாநாடு முடிந்து, 06.11.1957 அன்று, இ.பி.கோ.323, 324, 325, 436, 302, 117 ஆகிய பல பிரிவுகளில் பெரியார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவற்றுள், இ.பி.கோ.302 என்பது கொலைக்குற்றச்சாற்று என்பதை நாம் அறிவோம்.

இது ஒருபுறம் இருக்க, நவம்பர் 26 அன்று நடைபெறவிருந்த சட்ட எரிப்புப் போராட்டத்திற்கு ஆதரவு பெருகியது. வேறுவழியின்றி, தமிழக அரசாங்கம் இதுதொடர்பாக ஒருபுதிய சட்டத்தை 1957 நவம்பர் 11 அன்று சட்டமன்றத்தில் முன்வைத்தது. அந்தச் சட்ட முன்வடிவத்திற்கு, ”தேசிய கௌரவ அவமதிப்புத் தடைச் சட்ட முன்வடிவம், 1957”( The prevention of insult on national honour bill, 1957) என்று பெயர். அந்த முன்வடிவம் விவாதத்திற்கு வந்தபோது, சட்டமன்றத்தில் நடைபெற்ற உரையாடல்கள், தமிழக வரலாற்றில், கவனத்திற்குரிய பகுதியாக இருக்கிறது. எனவே, அன்றைய விவாதத்திலிருந்து சில பகுதிகளையும் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

அன்று, தமிழ்நாடு உள்துறை அமைச்சராக இருந்த மாண்புமிகு பக்தவச்சலம் அதனை முன்மொழிந்தார். அந்த விவாதத்தில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினரோடு, அறிஞர் அண்ணா அவர்களும் பங்கேற்றார். அந்;த விவாதத்திலிருந்து சில பகுதிகள் கீழே தரப்படுகின்றன.

அமைச்சர் பக்தவச்சலம்:

“எனக்குத் தெரிந்தவரையில் இவ்வாறு எந்த நாட்டிலும், இம்மாதிரியான சட்டங்கள் இருக்கின்றனவா என்பதைப் பார்த்தால், ஒரு நாட்டிலும், இல்லை என்றுதான் தெரிகிறது. வேண்டுமானால், ஏதாவது சில நாடுகளில் இருக்கலாம். ஆனால், எங்கு விபரீதம் ஏற்படுகிறதோ அல்லது விபரீதத்தை ஏற்படுத்துவதற்கென்று, ஒரு சிலர் காணப்பட்டால், அதைத் தடுப்பதற்கு, இதைப் போன்ற நூதனமான சட்டம் கொண்டுவர வேண்டியிருக்கிறது. நாட்டைப்  பாதுகாப்பதற்கும், மக்களின் நல்வாழ்க்கையைக் காப்பாற்றுவதற்கும், இம்மாதிரியான சட்டங்களை நிறைவேற்ற வேண்டியிருக்கிறது.

ஆகவே, இந்த மசோதாவை இங்கே சமர்ப்பிக்கிறேன். நாம் எந்த விதத்திலும் நம் நாட்டின் மானத்திற்கு, எந்தவிதமான பங்கமும் ஏற்பட இடம் கொடுக்க முடியாது, கூடாது. அவ்வாறு யார் பங்கம் விளைவித்தாலும், அந்த முயற்சியில் ஈடுபட்டாலும், அதை அனுமதிக்கக் கூடாது. அதற்குத் தக்க தண்டனை விதிக்க வேண்டும்”.

உள்துறை அமைச்சரின் உரையைத் தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர்கள்; கே.ஆர்.நல்லசிலம், எம்.கல்யாணசுந்தரம், சி.முத்தையாபிள்ளை, பி.எஸ்.சின்னத்துரை, வி.சங்கரன் உள்ளிட்ட பலரும் தங்களின் கருத்துக்களை எடுத்துரைத்தனர். அவர்களின் ஒட்டுமொத்தமான கருத்து, சட்ட எரிப்பைத்  தடுக்க வேண்டும் என்பதும், மீறி எரிப்பவர்களுக்குத் தண்டனை கொடுக்கத்தான் வேண்டும் என்பதுமாக இருந்தது. குறிப்பாக, திரு.எம்.கல்யாணசுந்தரம், தன் கட்சியின்(கம்யூனிஸ்ட்) சார்பில், மசோதாவிற்கு முழு ஆதரவைத் தெரிவித்தார். பிறகு, திமு கழகத்தின் சார்பில், அண்ணா ஒரு நீண்ட உரையாற்றினார். இடையிடையே எழுந்த குறுக்கீடுகளுக்கும் விடை சொன்னார்.

அண்ணாவின் உரை மிகுந்த கவனத்தோடும், எப்பக்கமும் முழுமையாகச் சாய்ந்துவிடாமலும் இருந்தது. ஆளுங்கட்சிக்கு இருந்த அதே தர்மசங்கடம் திமுகவிற்கும் இருந்தது. அண்ணாவால், பெரியாரையும் விட்டுக்கொடுக்க முடியவில்லை. சட்டத்தை ஏற்றுக் கொண்டு, சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் தருணத்தில், சட்டத்தை எரிக்கலாம் என்றும் சொல்லமுடியவில்லை. இரண்டுக்கும் இடையில் அண்ணா, தன் உரையை ஆற்றினார். அதிலிருந்து சில பகுதிகளை நாம் காணலாம்.

சி.என்.அண்ணாதுரை:


“இன்றுவரையில் குற்றங்கள் என்று கருதப்படாமல் இருந்துவந்த சில செயல்கள் இனி மூன்று ஆண்டுகளுக்குத் தண்டிக்கத்தக்க கடுமையான குற்றங்கள் என்று தெரிவிக்கும் இந்த மசோதாவை, நான் தீதானது, தேவையற்றது, கொடுங்கோன்மைக்கு வழிகோலுவது என்றுக் கூறிக் கண்டிக்கிறேன்”.

மேற்காணும், கண்டனத்தோடு அண்ணா தன் உரையைத் தொடங்கினாலும், தான் இதுபோன்ற காரியங்களிலே பங்கு எடுத்துக் கொள்கிறவன் இல்லை என்பதை வெளிப்படுத்துகிறார். ஒருமுறை தேசியக் கொடி எரிக்கப்பட வேண்டும் என்ற கிளர்ச்சி நடந்த நேரத்தில், அதிலிருந்து தான், ஒதுங்கியிருந்ததையும், அது தவறானது என்று வெளிப்படையாகக் கண்டித்ததையும் குறிப்பிடுகின்றார்.

இருப்பினும், இந்தப் போராட்டத்தை மட்டும் பார்க்காமல், இதற்குப்பின்னால் இருக்கும் காரணங்களையும், நாம் கணக்கில் கொள்ள வேண்டும் என்பது அண்ணாவின் கருத்தாக உள்ளது. சாதிவெறியனால்தானே காந்தியார், கோட்சேயினால் கொல்லப்பட்டார் என்பதை நினைவுகூறும் அண்ணா, இன்னொரு அழுத்தமான கருத்தைச் சட்டமன்றத்தில் முன்வைக்கிறார். “சாதியைப் பாதுகாக்கும் சட்டத்தைக் கொளுத்தும் போராட்டத்திற்காகத்  தனிச்சட்டம் கொண்டு வருகிற இந்த அரசு, சாதிவெறியை அடக்குவதற்கு, இதுவரையில் எந்தச்சட்டதைக் கொண்டு வந்திருக்கிறது?” என்று கேட்கிறார்.

”காந்தியாரின் உயிரையே வாங்கிவிட்ட சாதிவெறியை, மதவெறியை அடக்குவதற்கு, நாங்கள் சட்டம் கொண்டு வந்திருக்கிறோம் என்று சொன்னால், நான் அதைப் பாராட்டுவேன். உலகம் உங்களைப் பெருமையாகச் சொல்லிக் கொள்ளும்” என்று அண்ணா குறிப்பிடுகிறார். பெரியார் என்றைக்கும், சட்டத்தை ஏற்றுக் கொள்கிறவர், மதிக்கிறவர், அநாவசியமான கிளர்ச்சிகளிலும், கொந்தளிப்புகளிலும் ஈடுபடுகிறவர் இல்லை. சாதியின் மீதிருக்கிற கோபத்தினால்தான், அவர் இந்த எல்லைக்குப் போயிருக்கிறார் என்பதை இந்த மன்றம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறுகிற அவர், பெரியாருக்கு மிகவும் வேண்டியவரும், நெருக்கமானவருமான முதலமைச்சர் காமராசர் ஏன் அவரை நேரில் சென்றுப் பார்த்து பேசக்கூடாது என்ற கருத்தையும் முன்வைக்கிறார்.

விரிவான விவாதங்கள் நடந்தபோதிலும், இறுதியில் அந்தச் சட்டம் அன்று நிறைவேற்றப்பட்டு விடுகிறது. மூன்று ஆண்டுகள் வரை, சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் என்று முடிவாகிறது.

இது, தான் எதிர்பார்த்ததுதான் என்கிறார் பெரியார். ஆனாலும், இந்த மிரட்டல் சட்டத்தையெல்லாம் கண்டு, நானோ என்கட்சித் தொண்டர்களோ ஒருநாளும் பயந்துவிட மாட்டோம் என்பதையும் தெரிவிக்கிறார். ‘நான்தான் உயிரைவிடத் தயாராக இருக்கிறேனே, கழகத் தொண்டர்களும் தயாராகத்தானே இருக்கிறார்கள்! பிறகு எப்படி உங்கள் சிறைத் தண்டனைக்கு நாங்கள் பயப்படுவோம்?’ என்று கேட்கிறார்.

அதன்பிறகுதான், போராட்ட வேலைகள் விரைந்து தொடங்குகின்றன. கைதாவதற்கும், ஆண்டுக்கணக்கில் சிறை செல்வதற்கும், தொண்டர்களே தயாராகுங்கள் என்று பெரியார் அறிக்கைவிடுகின்றார். அதுமட்டுமின்றி, கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டால், என்ன வாக்குமூலம் கொடுக்க வேண்டும் என்பதையும், 1957 நவம்பர் 20ஆம் தேதி, ‘விடுதலை’ ஒரு பெட்டிச் செய்தியாக வெளியிட்டுள்ளது.

“நான் சாதி ஒழிப்புக் கிளர்ச்சிக்காரன். இந்திய அரசியல் சட்டத்தில் சாதிக்கும், அதை உண்டாக்கிய மதத்துக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.  அரசியல் சட்டம் தமிழர் நலனுக்காக வகுக்கப்படவில்லை. அச்சட்டத்தைத் திருத்தக்கூடிய வசதி தமிழர்களுக்கு இல்லை. ஆதலால் என் எதிர்ப்பைக் காட்டிக்கொள்ளும் விதமாக  இச்சட்டத்தைக் கொளுத்தினேன். இப்படிக் கொளுத்துவதற்கு எனக்கு உரிமை உண்டு. இதனால் எந்த உயிருக்கும், பொருளுக்கும் சேதமில்லை. ஆதலால் நான் குற்றவாளியில்லை.  இந்த நீதிமன்ற நடவடிக்கையில் நான் கலந்து கொள்ள விரும்பவில்லை. நான் எதிர் வழக்காடவும் விரும்பவில்லை. நான் குற்றவாளி என்று கருதப்பட்டால், அதற்குரிய தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளத்  தயாராயிருக்கிறேன்.”
இவ்வாறு மட்டுமே நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுக்கப்பட வேண்டும் என்றும்  இதற்கெல்லாம் உடன்பட்டு, சிறைத்தண்டனையை ஏற்றுக்கொள்ள தயாராயிருப்போர் மட்டும் பெயர் கொடுக்கும்படியும் அறிவிக்கப்பட்டது.
நவம்பர் 24 அன்று எந்தெந்த ஊரில், எந்தெந்த இடத்தில்,  சட்ட எரிப்புப் போராட்டம் நடக்கும் என்று அறிவிப்பு வெளியானது.  சென்னை பெரியார் திடலில், பெரியார் தலைமையில் சட்டம் கொளுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.   எனவே பெரியார் முன்கூட்டியே கைது செய்யப்படுவது உறுதி என்ற நிலை ஏற்பட்டது. அப்போது பெரியார் ஓர் அறிக்கை விடுத்தார்.
தானும், கட்சியின் முக்கியத் தொண்டர்களும் முன்கூட்டியே கைது செய்யப்படலாம் என்றும், அவ்வாறு நடப்பினும், வெளியில் உள்ள தோழர்கள் எதற்கும் அஞ்சாமல் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் அவர் கேட்டுக்கொண்டார். அத்துடன் மட்டுமின்றி, பார்ப்பன சமுதாயத்தைச் சேர்ந்த ஆண்களுக்கோ, பெண்களுக்கோ, குழந்தைகளுக்கோ துன்பம், வேதனை உண்டாக்கக்கூடிய ஒரு சிறு காரியம் கூட நடத்தாமல், நடைபெறாமல் இருக்கும்படியும் ஒவ்வொருவரும் நடந்து கொள்ள வேண்டும் என்று வணக்கத்துடன் கேட்டுக்கொள்வதாகவும்  அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
எதிர்பார்த்தபடியே, போராட்டத்திற்கு முதல்நாள்,  25.11.1957 அன்று பெரியார் கைது செய்யப்பட்டார்.
அதனால் தொண்டர்கள் மேலும் வீரியம் பெற்றனர். குறிப்பிட்டபடி, நூற்றுக்கணக்கான ஊர்களில் சட்ட எரிப்புப் போராட்டம் நடைபெற்றது. சென்னை, பெரியார் திடலில், அன்றைய விடுதலை ஆசிரியர் தலைமையில் ஆயிரக்கணக்கானவர்கள் கூடிச்  சட்டத்தை எரித்தனர்.  சின்னச் சின்ன ஊர்கள் முதல், மாநகரங்கள் வரையில், நாடெங்கும் போராட்டம் நடந்தது. எனினும் ஒரு சிறு வன்முறை கூட இல்லை என்பது வியப்புக்குரியது.
கைதானவர்கள் எத்தனை பேர், அனைவருக்கும் வழங்கப்பட்ட தண்டனை என்ன, சிறையில் என்னவெல்லாம் நடந்தது என்பவை குறித்து அறிந்துகொள்ள வேண்டிய செய்திகள் பல உள்ளன. அவற்றை அடுத்த வாரம் காண்போம்!
(களங்கள்  தொடரும்)

அன்புடன்
சுப.வீரபாண்டியன்

பயன்பட்ட நூல்கள்
==================

பயன் பட்ட நூல்களின் விவரம், அடுத்த வார இறுதியில் தரப்படும்

Disclaimer: எங்கள் செய்தி இணையதளத்தில் வரும் தொடர்கள் யாவும் பத்திரிகை டாட் காமிற்கே பிரத்தியேக, தனிப் பிரசுர உரிமை வழங்கப்பட்டுள்ளது . எனவே, பத்திரிகை டாட் காமின் முன் அனுமதியின்றி இதனை முழுவதுமாகவோ இல்லை இதில் வரும் சில பகுதிகளையோ உங்கள் பயன்பாட்டிற்கு உபயோகிக்க அனுமதியில்லை.