நாடு முழுவதும் சட்டத்தை எரித்து, நான்காயிரத்திற்கும் குறையாத எண்ணிக்கையில் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். பெரிய நகரங்களில் மட்டுமின்றி, சின்னச்சின்ன ஊர்களிலும் அப்போராட்டம் நடைபெற்றது. பூந்தோட்டம், கீழ்கல்கண்டார்க்கோட்டை போன்ற சிறிய ஊர்களில், கைதானவர்களின் எண்ணிக்கை குறைவுதான். ஆனால், எண்ணிக்கையைப் பற்றிக் கவலைப்படாமல், காவல்துறைக்கும் அஞ்சாமல், பெண்கள் உட்பட தோழர்கள் பலர் கைதாயினர். பேரளத்தில் ஆர்.இராசம்மாள் என்பவர் ஆறு மாதக் கைக்குழந்தையோடும், நாகையில் கைதான 3 பெண்களில் காட்டூரைச் சேர்ந்த தனலட்சுமி 4 மாதக் கைக்குழந்தையுடனும் கைதானார்கள்.

மூன்று ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படலாம் என்றாலும், வெவ்வேறு ஊர்களில், வெவ்வேறு விதமான தண்டனைகள் விதிக்கப்பட்டன. ஒரே நீதிமன்றத்தில் கூட, ஒரே குற்றம் புரிந்தவர்களுக்கு, தண்டனைகளின் காலஅளவு வேறுபட்டிருந்தது. மற்றவர்களுக்கு 3 மாதம் தண்டனை விதித்த நடுவர்கள்,(மாஜிஸ்ட்ரேட்) கைக்குழந்தைகளுடன் வந்தவர்களுக்கு ஆளுக்கு ஒரு மாதம் தண்டனை வழங்கினர். ஊர்வலத்தை முன்னின்று நடத்தியவர்களுக்கு, ஒன்பது மாதக் கடுங்காவல் தொடங்கி, இரண்டு ஆண்டுகள் வரையில் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. சென்னையில் கைதான தோழர்கள் பத்மசுந்தரி, ருக்மாபாய் ஆகியோரைப் பார்த்து, ”இனிமேல் இம்மாதிரிச் சட்டத்தைக் கொளுத்தவில்லை என்று ‘பாண்டு’ எழுதிக் கொடுக்கிறீர்களா? அவ்வாறு கொடுத்தால், இப்போதே உங்களை விடுதலை செய்துவிடுகிறேன்” என்று ஒரு நீதிமன்ற நடுவர் கேட்டார். அதற்கு அவர்கள், ”ஒருநாளும் எழுதித்தரமாட்டோம், நீங்கள் விடுதலை செய்தால், நாங்கள் வெளியில் போய் மறுபடியும் சட்டப் புத்தகத்தை கொளுத்துவோம்” என்று சொன்னார்கள். பிறகு, பத்மசுந்தரிக்கு 2 மாதமும், ருக்மாபாய்க்கு 3 மாதமும் வெறுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது.

பெரம்பலூர் வட்டத்தில் கைதான 15 தோழர்களுக்கு, 18 மாதம் கடுங்காவல் தண்டனையும், அரியலூரில் கைதான 18 பேருக்கு 21 மாதம் கடுங்காவல் தண்டனையும் வழங்கப்பட்டன. கோவில்பட்டி நீதிமன்றத்திலோ, சட்டத்தை கொளுத்திக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்ட 2 பேரை, வெறும் 10 நாள் மட்டும் சிறையில் வைத்து அனுப்பிவிட்டனர். தஞ்சையில் சட்டத்தைக் கொளுத்திய பரிபூரணத்தம்மாள் என்னும் 67 வயது மூதாட்டிக்கு 3 மாதம் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்ணச்சநல்லூர், உய்யக்கொண்டான் திருமலை ஆகிய ஊர்களில் கைதானவர்களுக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. இவ்வாறு, அந்தந்த நீதிமன்ற நடுவர்களைப் பொறுத்து, தண்டனைகள் வேறுபட்டன. பிறகு, நான்காயிரம் பேரும், வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர். அதே போல, ஒவ்வொரு சிறையிலும், ஒவ்வொரு மாதிரியாக, கைது செய்யப்பட்டவர்கள் நடத்தப்பட்டனர். குறிப்பாக, திருச்சி சிறையில் வழங்கப்பட்ட உணவு, மிகவும் மோசமானதாக இருந்தது. எனவே, அங்கிருந்து பலர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்கள். இதனை 18.03.1958ஆம் நாளிட்ட ‘இந்து’ பத்திரிகையில் செய்தியாகப் பார்க்க முடிகிறது. சரியான உணவில்லாத காரணத்தால், பலருக்கு ரத்தசோகை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த ஏடு குறித்துள்ளது.

திருச்சி சிறை, ‘கல்கத்தாவின் இருட்டறை’ என்று ‘விடுதலை’யில் ஒருவர் எழுதியிருக்கிறார். சிறை மீண்ட ஒருவர், ‘உயிரோடு வந்தவன்’ என்னும் பெயரில் எழுதியுள்ள அக்கட்டுரைக்கு, ‘உயிரோடு அனுப்புவீர்களா’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. “அங்கு தரப்படும் சோளக்கஞ்சியையும், நாற்றம் பிடித்த குழம்பையும், கல் மலிந்த சோற்றையும், எந்த காந்தி பக்தரும்கூட தங்கள் சிறை வாழ்க்கையில் உண்டிருக்க மாட்டார்கள்” என்கிறது அந்தக் கட்டுரை. ஒருவருக்கு மட்டுமே போதுமான ஓர் அறையில், 5 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் கொடுக்கப்படும் கஞ்சியையும், கேழ்வரகுக் கூழையும் 2 நாள்களுக்குத் தமிழ்நாட்டின் எம்.எல்.ஏக்களும், எம்.எல்.சிக்களும் குடிப்பார்கள் எனில், சட்டமன்றமே காலியாகிவிடும். தமிழ்நாடு முழுமைக்கும், விரைவில் தேர்தல்தான் நடத்த வேண்டியிருக்கும் என்றும் அந்தக் கட்டுரை வேதனையோடு பல செய்திகளைத் தருகிறது.

அந்தக் கட்டுரை பொய் சொல்லவில்லை என்பதை, 1958 தொடங்கி, ஆகஸ்ட் வரையில் அடுத்தடுத்துச் சிறையிலேயே இறந்து போன 15 தோழர்களின் மரணங்கள் உறுதிப்படுத்துகின்றன. அவர்களைப் பற்றிய விவரங்களை அறிந்து கொள்வதற்கு முன்பு, பெரியாரின் நிலை என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.

சட்ட எரிப்புப் போராட்டத்திற்கு முதல் நாள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பெரியார் திருச்சியில் கைது செய்யப்பட்டார். ஸ்ரீரங்கம் பொதுக்கூட்டத்தில், பேசுவதற்காக, புறப்பட்டு கொண்டிருந்த ஒரு மாலை வேளையில் அவர் கைதானார். ஸ்ரீரங்கம் கூட்டத்தை முடித்துவிட்டு, இரவே அங்கிருந்து தொடர் வண்டியில் புறப்பட்டுச் சென்னை வந்து, பெரியார் திடலில், சட்ட எரிப்புப் போராட்டத்தில் கலந்து கொள்வது என்பது அவரது திட்டம். ஆனால், முன்னெச்சரிக்கையாக நவம்பர் 25ஆம் தேதியே, காவல்துறை அவரைக் கைது செய்துவிட்டது. அதனால், மூன்றவாது நாளே, பெரியார் விடுதலை செய்யப்பட்டுவிட்டார்.

பெரியார் வெளியிலும், தொண்டர்கள் சிறையிலும் இருந்த அந்த நிலை, நீண்ட நாள் நீடிக்கவில்லை. ‘பார்ப்பான், கத்திக்குத்தான் பயப்படுவான், வேறு எதற்கும் இணங்கமாட்டான்’ என்று அவர் குளித்தலை, பசுபதிபாளையம், திருச்சி ஆகிய ஊர்களில் பேசியதற்காக தொடரப்பட்ட ‘வெட்டுக்குத்து வழக்கு’ மறுபடியும் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில், 1957 டிசம்பர் 14ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பே, அதே நாள் காலையில் பெரியார், ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில்,

”நான் இன்று தண்டனை அடையப் போவது உறுதி. ஏனென்றால், இந்தியப் பிரதமர் என்னும் பதவியில் உள்ள பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள், எனது வழக்கு நடக்கிற ஊராகிய திருச்சிக்கே வந்து, பார்ப்பனர்களைக் கொல்லு, என்று சொல்லியிருக்கிறவர்களைக் கண்டிப்பாகத் தண்டிக்க வேண்டும் என்று பேசிவிட்டுப் போயிருக்கிறார். எனவே எனக்குத் தண்டனை உறுதி. சிறைவாசம் முடிந்து திரும்பி வரும் வாய்ப்பு இருந்து, வந்து சேருவேன் என்றால், அப்போது ஒரு லட்சம் அங்கத்தினர், மூவாயிரம் கிளைகள், 1,500 ரூபாய்க்கு குறையாத அறிக்கை விற்பனைக் கணக்கு ஆகியவைகளைக் காண்பேனேயானால், நானும் மற்றும் நம் அன்பான தோழர்கள் 4,000 பேரும் சிறை சென்றது நல்ல பயன் அளித்தது என்றே கொள்ளலாம்”.

என்று குறிப்பிட்டுள்ளார். அவர் எதிர்பார்த்த மாதிரியே, ஒவ்வொரு கூட்டத்தில் பேசியதற்கும் ஆறு, ஆறு மாதங்கள் தண்டனை என்னும் அடிப்படையில், 18 மாதங்கள் தண்டனை வழங்கப்பட்டது எனினும், 3 தண்டனைகளையும், ஏககாலத்தில் (அதாவது ஆறு மாதங்களில்) அனுபவிக்கலாம் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அத்தீர்ப்பை மகிழ்ச்சியுடன் வணங்கி ஏற்றுக் கொள்வதாகப் பெரியார் நீதிமன்றத்தில், அறிவித்தார். நீதிமன்றத்தை விட்டு, அவர் வெளியில் வரும்போது, பல்லாயிரக்கணக்கான மக்கள், கூடி நின்று, வாழ்த்தொலி எழுப்பினர். கூட்டத்தைச் சமாளிக்க முடியாத காவல்துறையினர், அவரை வேறு பாதை வழியாகத் திருச்சிக்கு அழைத்துச் சென்றனர்.

திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட பெரியார், அடுத்த மாதமே சென்னை சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கும் அவருக்கு, உடல்நலமில்லாமல் போனதால், சென்னை, அரசு மருத்துவமனையில் காவல்துறையின் பாதுகாப்புடன் அனுமதிக்கப்பட்டார். அப்படி அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில்தான், ராம்மனோகர் லோகியா போன்ற தலைவர்கள் வந்து பார்த்துவிட்டுச் சென்றனர். ஆறு மாதங்களுக்குப் பிறகு, 1958 ஜூன் 13ஆம் நாள் காலையில், பெரியார் விடுதலை செய்யப்பட்டார். அன்று மாலை, நடிகவேள் எம்.ஆர்.ராதா தலைமையில், 4 மைல் நீளத்திற்கு, வரவேற்பு ஊர்வலம் நடைபெற்றது. யானை மேல் அம்பாரி போல் அலங்கரிக்கப்பட்ட அழகுமிகு தேரில், பெரியார் அமர்த்தப்பட்டு, ஊர்வலத்தில் அழைத்துவரப்பட்டார்.

”நான் வெளியே வந்துவிட்டேன். ஆனால், கைதான 4,000 பேரில், இன்னும் 1,500 பேர் சிறையில் இருந்து கொடுமைகளை அனுபவிக்கிறார்கள். அவர்களும் வெளியில் வரும் வரை நம் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும்” என்று சொன்ன பெரியார், அடுத்த நாளே தன் சுற்றுப்பயணத்தைத் தொடங்கிவிட்டார். 14ஆம் தேதி திருச்சி, 15 குடந்தை, 16 தஞ்சை, 17 திருவாரூர் என்று தொடர்ச்சியாக அவர் பயணத்திட்டம் அமைந்தது. ஒருநாள் சின்னச்சின்ன ஊர்களின் வழியாக பயணம் செய்த அவர், ஒரே நாளில், 29 நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.

பெரியார் விடுதலையாவதற்கு முன்பே, சிறையில் இருந்த தோழர்கள் சிலர் மடிந்து போயினர். 1958 மார்ச் முதல் வாரத்தில், பட்டுக்கோட்டை இராமசாமி என்னும் தோழர், உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்து போனார். அவரே அப்போராட்டத்தின் முதல் பலி என்று சொல்லலாம். அவரையடுத்து, மணல்மேடு வெள்ளைச்சாமி காலமானார். அவருக்கும் வயிற்றுக்கடுப்பு நோய்தான் சாவுக்குக் காரணமாகிவிட்டது. செய்தி அறிந்த மணியம்மையார், சென்னையிலிருந்து உடனடியாக ஒரு காரில் திருச்சிக்குப் புறப்பட்டுச் சென்றார். சிறையில் இறந்தவர்களின் உடல்களைத் தருவதற்கும் அரசு மறுத்துவிட்டது. சினம் கொண்ட அம்மையார், முதலமைச்சர், உள்துறை அமைச்சர், காவல்துறை அதிகாரிகள் என அனைவரோடும் பேசினார். உடல்களைத் தரவில்லை என்றால், பெரும் கலவரம் ஏற்படும் என்று எச்சரித்தார். இறுதியாக அரசு பணிந்தது. இருவரின் உடல்களையும் எடுத்துக் கொண்டு, 11.03.1958 அன்று ஒரு மிக நீண்ட ஊர்வலத்தை நடத்தி, ஒரு பெரும் எழுச்சியைத் தலைவர் மணியம்மையார் தமிழ்நாட்டில் ஏற்படுத்தினார்.

உயிர்த்தியாகம் செய்த இருவரோடு, சிறை மரணங்கள் நின்றுவிடவில்லை. மார்ச் மாதம் தொடங்கிய இரண்டு வீரச்சாவுகள் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் 15ஆக உயர்ந்துவிட்டன. அந்த மாவீரர்களின் பெயர்களை மட்டுமாவது நாம் அறிந்து கொள்ள வேண்டாமா? இதோ அந்த பட்டியல்.

1. பட்டுக்கோட்டை இராமசாமி
2. மணல்மேடு வெள்ளைச்சாமி
3. காரைக்கோட்டை இராமையன்
4. கோவில்தேவராயன்பேட்டை நடேசன்
5. திருவையாறு மஜீத்
6. இடையாற்றுமங்கலம் நாகமுத்து
7. பொறையாறு தங்கவேலன்
8. இடையாற்றுமங்கலம் தெய்வானை அம்மையார்
9. நன்னிமங்கலம் கணேசன்
10. வரகனேரி சின்னச்சாமி
11. மாதிரிமங்கலம் இரத்தினம்
12. வாளாடி பெரியசாமி (15 வயது)
13. கண்டராதித்தம் சிங்காரவேலு
14. சென்னை, புதுமனைக்குப்பம் கந்தசாமி
15. திருச்சி டி.ஆர்.எஸ்.மணி

போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பலர் ஏழை, எளிய மக்கள். இனத்தின் மீதும், சமூகநீதியின் மீதும் கொண்ட மாறாத பற்றினால், தங்கள் வாழ்வைப் பற்றிக் கவலைப்படாமல், சாதிகளற்ற சமத்துவச் சமுதாயம் படைக்க வேண்டும் என்ற நோக்கில், அவர்கள் சிறை ஏகினர். ஓராண்டு, ஈராண்டுகள் சிறைத்தண்டனை முடிந்து வெளியில் வந்த போது, பலருடைய குடும்பங்கள் சிதறிப் போயிருந்தன. சரி செய்ய முடியாத அளவிற்குச் சிலருடைய பொருளாதார நிலை சரிந்து போயிருந்தது. வயது வேறுபாடுகளைக் மறந்து, சாதி-மதங்களைக் களைந்து, ஆண்-பெண் பாலின வேறுபாட்டைக் கடந்து, சட்ட எரிப்புப் போராளிகளாக நின்று, அவர்கள் சமர் செய்தனர். சிறை மீண்ட பின் அவர்களின் வாழ்நிலையும், குடும்பமும் எப்படி இருந்தன என்பதைச் சிலர் பதிவு செய்துள்ளனர். அவற்றை ‘அரசியல் சட்டம் எரிப்பு – 1957’ என்னும் நூலில் மூன்றாவது தொகுதியில் நாம் காணலாம்.

திராவிட இயக்க வரலாற்றில், இந்தப் போராட்டம், ஓர் எழுச்சிமிகு அத்தியாயம். அதன் ஒவ்வொரு பக்கத்திலும், தியாகத்தின் சுவடுகள் படிந்து கிடக்கின்றன.

(களங்கள்  தொடரும்)

அன்புடன்
சுப.வீரபாண்டியன்

பயன்பட்ட நூல்கள்
==================

1. செல்வேந்திரன், திருச்சி என் – ”சாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டம் எரிப்பு – 1957/ தொகுதிகள் 1,2,3” – தந்தை பெரியார் திராவிடர் கழகம், கோவை-44.

2. வீரமணி, கி – ”உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு – தொகுதிகள் 7,8” – திராவிடர் கழக வெளியீடு, சென்னை-7

3. ஆணைமுத்து, வே – ”ஈ.வெ.ரா. சிந்தனைகள் – தொகுதி-6/1” – பெரியார் ஈ.வெ.ராமசாமி-நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளை, சென்னை-5

4. கருணானந்தம், கவிஞர் – ”தந்தை பெரியார் முழுமுதல் வாழ்க்கை வரலாறு” – வேலா வெளியீட்டகம், கோவை-42.

Disclaimer: எங்கள் செய்தி இணையதளத்தில் வரும் தொடர்கள் யாவும் பத்திரிகை டாட் காமிற்கே பிரத்தியேக, தனிப் பிரசுர உரிமை வழங்கப்பட்டுள்ளது . எனவே, பத்திரிகை டாட் காமின் முன் அனுமதியின்றி இதனை முழுவதுமாகவோ இல்லை இதில் வரும் சில பகுதிகளையோ உங்கள் பயன்பாட்டிற்கு உபயோகிக்க அனுமதியில்லை.