சுபவீ எழுதும் போராட்டங்கள் – 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம் (தொடர்ச்சி)

--

1965 ஜனவரி 25ஆம் நாளன்றுதான், மாணவர்களின் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்கியது என்றாலும், அதற்கு முந்திய டிசம்பர் மாதத்திலிருந்தே, அதற்கான அறிகுறிகள் தோன்றிவிட்டன.

1964 டிசம்பர் 5ஆம் தேதியன்று, மத்திய உள்துறை அமைச்சகம், வரும் ஜனவரி 26 முதல், இந்தி மொழி இந்தியாவில் ஒரே ஆட்சி மொழியாக நடைமுறைக்கு வரும் என்று அறிவித்தது. எல்லா வாக்குறுதிகளையும் காற்றில் வீசிவிட்டு, அனைத்து மாநிலங்களோடும் ஜனவரி 26க்குப் பிறகு, தொடர்புகள் இந்தியில் மேற்கொள்ளப்படும் என்று அந்த அறிவிப்பு கூறியது. 1965 செப்டம்பர் முதல், மத்தியப் பொது சேவை ஆணையத்திற்கான(UPSC) தேர்வுகள் கூட இந்தியிலேயே நடைபெறும் என்றும் அறிவிப்புகள் வெளிவந்தன.

முதலமைச்சர் எம்.பக்தவச்சலம்

இந்த அறிவிப்புகளையொட்டி, டில்லியில் முதலமைச்சர்கள் மாநாடு ஒன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு, தன் கருத்தினை வெளிப்படுத்திய தமிழக முதலமைச்சர் எம்.பக்தவச்சலம், இந்தி மொழிக்குத் தமிழ்நாட்டில் எந்த எதிர்ப்பும் இருக்காது என்றும், முன்னைக் காட்டிலும், தமிழ்நாட்டில் இந்தி கற்பவர்களின் எண்ணிக்கை கூடியிருக்கிறது என்றும் கூறினார். முதலமைச்சர்கள் மாநாடு கூட்டத்தில் பேசிய பிரதமர், இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை வளர்ப்பதற்கு, 20 லட்சம் ரூபாய் வழக்கமாக ஒதுக்கப்படும். ஆனால் இவ்வாண்டு, அது ஒரு கோடி ரூபாயாக உயர்த்தப்படுகிறது என அறிவித்தார். 55 ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு கோடி ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை என்பதை நாம் அறிவோம்.

பிரதமரைத் தொடர்ந்து, அன்று மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த இந்திராகாந்தி, அசாம் காங்கிரஸ் பெண்கள் மாநாட்டைக் கவுகாத்தியில் தொடக்கி வைத்து, உரையாற்றும்போது, ஜனவரி 26 முதல் இந்தியை இந்தியாவில் எல்லா மூலைமுடுக்குகளிலும் பரப்ப உறுதி கொள்ளுங்கள் என்றார். ஆக, ஒரு மிகப்பெரிய போராட்டத்திற்கான களம் உருவாக்கப்பட்டுவிட்டது.

தமிழ்நாட்டில் – ஏன் இந்தியாவிலேயே – முதன்முதலாக இந்தத் திட்டத்தை எதிர்த்து தி.மு.கழகமே குரல் கொடுத்தது. 1965 ஜனவரி 8ஆம் தேதி, சென்னை அறிவகத்தில் கூடிய தி.மு.கழகத்தின் செயற்குழுக் கூட்டம், மிக முக்கியமான 3 தீர்மானங்களை நிறைவேற்றியது. அத்தீர்மானங்கள்: –

1. இந்தியக் குடியரசு நாளின் முக்கியத்துவத்தைத் திமுக முழுமையாக உணர்ந்திருக்கிறது என்ற போதிலும், அந்த நாளிலிருந்து இந்தியை இந்தியாவின் அலுவல் மொழியாக்க மத்திய அரசு, தீர்மானித்திருப்பதால் வரும் ஜனவரி 26ஆம் தேதியை, இச்செயற்குழுக் கூட்டம் ஒரு துக்கநாளாக அறிவிக்கிறது.

2. இந்தித் திணிப்பை விளக்கியும், கண்டித்தும் தமிழ்நாடு முழுவதும் பொதுக் கூட்டங்களை நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

3. அந்த நாளில் அனைவரும் தத்தம் உடைகளில் கருப்புப்பட்டை அணிந்து கொள்ளுமாறும், எல்லா இடங்களிலும் கருப்புக் கொடி ஏற்றுமாறும் வேண்டுகோள் விடுக்கிறது.

தமிழகத்தின் வரலாற்றைப் புரட்டிப் போட்ட மூன்று தீர்மானங்கள் என இவற்றைக் குறிக்கலாம். இத்தீர்மானங்கள் உடனடியாக இரு விளைவுகளை ஏற்படுத்தின. மறுநாளே தன்னுடைய ‘சுயராஜ்யா’ இதழில், திமுகவின் தீர்மானத்தைக் குறிப்பிட்டு, 26ஆம் தேதி மட்டுமில்லை, வரப்போகும் 1965ஆம் ஆண்டே இந்தி பேசாத மக்களுக்கு ஒரு துக்க ஆண்டாக ஆகிவிடப் போகிறது என்று ராஜாஜி எழுதினார். அவர் எழுதியது நடைமுறையில் உண்மையாக ஆகிவிட்டது.

அடுத்த நாள்வரையில்கூடக் காத்திருக்காமல், அதே நாள் மாலையில் சென்னை பச்சையப்பன் கல்லூரி விடுதியில், அனைத்துக் கல்லூரி மாணவர் தலைவர்களும், ஒன்றுகூடித் தாங்களும் போராட்டத்தில் முழுமையாக ஈடுபடப் போவதாக அறிவித்தனர். அப்போராட்டத்தை வழிநடத்திய மாணவர் குழுவில் ஒருவராக இருந்த பேராசிரியர் அ.இராமசாமி, எந்த நாளில், எத்தனை மணிக்கு, எங்கு கூட்டம் நடந்தது என்பதோடு அதில் கலந்து கொண்டவர்கள் யார் யார் என்னும் செய்தி தொடங்கி, இறுதி வரையில் அப்போராட்டம் எப்படி நடத்தப்பட்டது என்னும் அனைத்து விவரங்களையும் தன் ஆங்கில நூல் ஒன்றில் விரிவாகப் பதிவு செய்துள்ளார். அந்த நூல் அப்போராட்டம் பற்றிய ஓர் ஆவணம் என்றே நாம் சொல்லலாம்.

இங்கே இரண்டு செய்திகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. மாணவர்களின் போராட்டத்தைத் தொடங்கிய மாணவர் தலைவர்களின் குழுவில் இடம் பெற்றிருந்த அனைவரும் திமுக சார்புடையவர்கள் இல்லை. எந்தக் கட்சியும் சாராதவர்கள் சிலர் அதில் இருந்தனர். ஆனாலும், திமுகவின் மீது மிகுந்த பற்றுடையவர்கள் பலரே அதில் இடம்பெற்றிருந்தனர் என்பதையும் மறுக்க முடியாது.

திமு கழகத்தின் செயற்குழு ஜனவரி 26ஆம் தேதியைத் துக்கநாள் என்று அறிவித்திருக்க, போராட்ட மாணவர்களோ, ஜனவரி 25ஆம் தேதியே கருப்புக் கொடி ஏற்றுவது என முடிவெடுத்தனர். அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன என்கிறார் பேராசிரியர் அ.இராமசாமி.

திமுகவினால், உந்துதல் பெற்றிருந்தாலும், திமுகவின் முடிவைச் சரியென ஏற்றுக் கொண்டாலும், அப்படியே முழுக்க முழுக்கத் திமுகவின் அடையாளத்தைத் தாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை என்று மாணவர்கள் சிலர் முடிவெடுத்தது ஒரு காரணம். 26ஆம் தேதி, குடியரசுநாளையொட்டி, விடுமுறை நாளாக இருக்கும் என்பதால், மாணவர்களைத் திரட்டுவது சற்றுக் கடினம். எனவே அதற்கு முதல்நாளும், வேலைநாளுமான 25ஆம் தேதியே போராட்டத்தைத் தொடக்கிவிடலாம் என்பது இரண்டாவது காரணம்.

உளவுத்துறையின் மூலம் அனைத்துச் செய்திகளையும் தெரிந்து கொண்ட தமிழக அரசு, போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுப்பதென்று முடிவு செய்தது. அரசின் முடிவைத் தாண்டி, மதுரையைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் சிலர், மாணவர்களை அடித்து உதைப்பதற்கான ஏற்பாடுகளையும், சில வன்முறையாளர்களின் மூலம் செய்து முடித்திருந்தனர். பெரும் கலவரம் வரப்போகிறது என்பதைத் தெரிந்து கொண்ட திமு கழகத்தின் தலைமை, பொது இடங்களில் அல்லாமல், அவரவர் வீடுகள் மற்றும் சொந்த இடங்களில் மட்டுமே கருப்புக் கொடி ஏற்றுமாறு கேட்டுக் கொண்டது.

ஜனவரி 24ஆம் தேதி இரவு, மதுரையில் ‘வெஸ்ட் கேட் ஹரிஜன் காலனி’ என்னும் இடத்தில் மாணவர்கள் பலர் இந்தித் திணிப்புக்கு எதிரான துண்டறிக்கைகளை மக்களுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு அரிவாள், தடி, கம்புகளுடன், வீரய்யன், வெஸ்ட் கேட் சுந்தரம் ஆகிய அடியாட்களின் தலைமையில் 20க்கும் மேற்பட்டவர்கள் வந்து இறங்கினர். சிந்திப்பதற்கும் நேரமின்றி மாணவர்களைத் தாக்கத் தொடங்கினார்கள். இரத்தக் காயங்களோடு மாணவர்கள் பலர், அந்த இடத்திலிருந்து தப்பினர். இதுவே மாணவர்கள் மீது நடைபெற்ற முதல் தாக்குதல்.

அடுத்த நாள்(ஜனவரி 25) காலையில், தங்கள் விடுதியில் கருப்புக் கொடி ஏற்ற முயன்ற, சென்னை, விக்டோரியா விடுதி மாணவர்கள் மீது காவல்துறை மிகக் கடுமையான தாக்குதலை நடத்தியது. விடுதியை விட்டே மாணவர்களை வெளியே விரட்டிக் கதவுகளைச் சாத்திப் பூட்டியது. அரசின் இந்த அடக்குமுறை, போராட்டத்தை முற்றிலுமாகத் தடை செய்துவிடும் என்று முதலமைச்சர் கருதினார். ஆனால் அது எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதாகவே முடிந்தது.

 

எந்தவொரு கல்லூரியும் விடுபட்டுப் போகாமல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் இந்தப் போராட்டத் தீ பற்றிக் கொண்டது. கல்லூரிகளிலிருந்து பள்ளிகளை நோக்கியும் அப்போராட்டம் பரவத் தொடங்கியது. மாணவர்களின் குழு திட்டமிடாத ஒரு நிகழ்வும் மதுரையில் அரங்கேறியது. மதுரை தியாகராயர் கல்லூரி மாணவர்களான நா.காமராசன், கா.காளிமுத்து ஆகிய இரு மாணவர்கள், இந்திய அரசமைப்புச் சட்டத்திற்குத் தீ வைத்தனர். அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த வீரய்யன் குழுவினர், அங்கிருந்த மாணவர்களையும் அடித்துத் துவைத்தனர். பிறகு காமராசனும், காளிமுத்துவும் கைது செய்யப்பட்டனர்.

நா.காமராசன்

கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவரான காளிமுத்துதான், பிற்காலத்தில் தமிழக அமைச்சராகவும், தமிழ்நாடு சட்டமன்றத்தலைவராகவும் பதவிகளை வகித்தவர். நா.காமராசனும் பிற்காலத்தில் புகழ்பெற்ற கவிஞராகவும், திரைப்படப்பாடல் ஆசிரியராகவும் விளங்கினார். அவர்களின் திட்டம், இன்னும் சற்றுக் கடுமையானதாக இருந்திருக்கிறது. சட்டத்தைக் கொளுத்துவதோடு நின்றுவிடாமல், தங்களைத் தாங்களே எரித்துக் கொள்ளவும் திட்டமிட்டு இருந்திருக்கின்றனர். நா.காமராசன் முன்மொழிந்த இந்தத் திட்டத்தை காளிமுத்துதான் மறுத்திருக்கிறார். நாம் வாழ்ந்து போராட வேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கிறார்.

மேற்காணும் தகவலை, மயிலாடுதுறை, மன்னம்பந்தலில் உள்ள ஏ.வி.சி.கல்லூரி வாசலில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு, தன்னைத் தானே எரித்துக் கொண்ட சாரங்கப்பாணி என்னும் மாணவன் சிலைக்கான அடிக்கல் நாட்டுவிழாவில் கலந்து கொண்டு பேசியபோது, காளிமுத்துவே வெளியிட்டார்.

மதுரையில் நடந்திருக்க வேண்டிய அந்நிகழ்வு, ஜனவரி 25ஆம் தேதி இரவு, சென்னை கோடம்பாக்கத்தில் நடந்தேறிவிட்டது. ‘தமிழ் வாழ்க, இந்தி ஒழிக’ என்னும் முழக்கத்தோடு, கோடம்பாக்கம் சிவலிங்கம் தன்னைத் தானே எரித்துக் கொண்டார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் முதல் தீக்குளிப்பு அதுதான். அவரைத் தொடர்ந்து, அடுத்த நாள் காலையே சென்னை விருகம்பாக்கத்தில், அரங்கநாதன் என்னும் தியாகி, தமிழுக்காகத் தீக்குளித்தார். இருவரும் மூட்டிய நெருப்பு, எங்கு பார்த்தாலும் பரவியது.

ஆனால், காங்கிரஸ் கட்சி மட்டுமல்லாமல், ஜனசங்கத்தை(இன்றைய பாஜக) சேர்ந்தவர்களும் தீக்குளிப்பு நிகழ்ச்சிகளைக் கடுமையாகக் கண்டித்தனர். டில்லி நாடாளுமன்ற மாநிலங்களவையில் உரையாற்றிய ஜனசங்கத் தலைவர் ஏ.பி.வாஜ்பாய், “இந்திய நாட்டின் அலுவல் மொழியை எதிர்த்து, இந்தியர் ஒருவரே தீக்குளிப்பது என்பது மிகப்பெரிய அவமானமாகும். உலகமே நம்மைப் பார்த்துச் சிரிக்கிறது.” என்று பேசினார். அது மட்டுமல்லாமல், “இப்படிப்பட்ட ஒரு விந்தையான போராட்டத்தை யார் தூண்டியிருக்க முடியும் என்று கேட்டு, அதற்கு ஒரு விந்தையான விடையையும் அவரே சொன்னார். தன்னுடன் வியட்நாமிற்கு அரசுப் பணியாக உடன் வந்திருந்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், அங்கே புத்தபிட்சுகள் சிலர் தீக்குளித்தது பற்றி, வியந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள்தான், இது போன்ற போராட்டத்திற்குத் தூண்டுதலாக இருந்திருப்பார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது” என்றும் கூறினார்.

அடுத்த சில நாள்களில், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்கள் வெகுண்டு எழுந்து ஒரு மிகப்பெரிய ஊர்வலத்தை நடத்தினர். சிதம்பரம் தொடர்வண்டி நிலையத்திற்குச் சென்று, அங்கு இருக்கும் இந்தி எழுத்துகளை எல்லாம் தார் கொண்டு அழிப்பது அவர்களின் நோக்கம். ஆனால், வழியிலேயே காவல்துறை அவர்களை மறித்தது. காவல்துறையின் தடுப்புகளை மீறி, மாணவர்கள் பேரணி நடத்த முயன்றபோது, காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசத் தொடங்கினர். அது கண்டும் கலங்காத மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அந்தத் துப்பாக்கிச் சூட்டில், பி.எஸ்சி., கணிதம் படித்துக் கொண்டிருந்த 18 வயது மாணவன் இராசேந்திரன், சுட்டுக் கொல்லப்பட்டான். காவல்துறையில் பணியாற்றிய தலைமைக் காவலர் ஒருவரின் பிள்ளைதான் இராசேந்திரன்.

 

எந்தவிதமான அடக்குமுறையும் வெற்றிபெறவில்லை. அடுத்தடுத்து, தீக்குளித்தும், நஞ்சருந்தியும் அய்யம்பாளையம் ஆசிரியர் வீரப்பன், விராலிமலை முத்து, சண்முகம் என்று வரிசையாக மாண்டனர். அன்றைய நாளேடுகளில் ஒவ்வொரு நாளும், மாணவர்களின் மரணச் செய்தியே, தலைப்புச் செய்தியாக இடம் பெற்றுக் கொண்டிருந்தது. வேறுவழியின்றி தமிழகமெங்கும் கல்லூரிகளும், பள்ளிகளும் மூடப்பட்டன. போராட்டத்தைச் சமாளிக்க முடியாமல் அரசு தடுமாறியது. கல்லூரிகளை மூடியதோடு, விடுதிகளிலும் யாரும் தங்கக் கூடாது என்றும் ஆணையிடப்பட்டது.

மாணவர்கள் போராட்டம், இவ்வாறு ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, தி.மு.கழகம் இன்னொரு புறத்தில் பெரிய போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தது. இரண்டையும் தாண்டித் தன்னெழுச்சியாக, பல ஊர்களில் பொதுமக்களும், போராட்டத்தில் இறங்கினர். 10,15 நாள்களுக்கு பிறகுப் போராட்டம், வன்முறை வடிவத்தையும் கையில் எடுத்தது. கலவரத்தை அடக்க, துணை இராணுவம் வரவழைக்கப்பட்டது. நாடே அமைதியற்றுத் தவித்தது. வீட்டைவிட்டு வெளியில் புறப்படும் ஒவ்வொருவரும், வீட்டுக்குத் திரும்பிவிடுவார்கள் என்பது உறுதியற்ற ஒன்றாகவே இருந்தது. இந்திய விடுதலைக்குப் பிறகு, தமிழ்நாடு ஒரு போர்க்களமாகக் காட்சியளித்தது 1965ஆம் ஆண்டில்தான்! சில ஊர்களில், அஞ்சலகங்கள் கொளுத்தப்பட்டன. வேறு சில ஊர்களில் தண்டவாளங்கள் பெயர்க்கப்பட்டன.

எல்லாவற்றுக்கும் உச்சமாக, பொள்ளாச்சியில் ஒரு சம்பவம் நடைபெற்றது. 1965 பிப்ரவரி 12ஆம் நாள் தமிழ்நாடெங்கும், முழுஅடைப்புப் போராட்டம் நடைபெற்றது. அனைத்துக் கடைகளும் மூடப்பட்டன. பேருந்துகள் ஓடவில்லை. அப்போது, தெருக்களில் ஊர்வலமாக வந்த இந்தியத் துணை இராணுவம், கண்ணில் கண்டவர்களையெல்லாம் சுட்டுத் தள்ளியது. அன்று மட்டும், ஒரு நூறு பேர், அந்த ஒரேயொரு ஊரில் கொல்லப்பட்டிருப்பார்கள் என்பது, நாளேடுகள் தரும் செய்தி. மக்கள் வெகுண்டெழுந்தனர். ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு, சில இடங்களில் இராணுவத்தையே விரட்டத் தொடங்கினர். அப்போது அவர்களிடம், தனியாகச் சிக்கிக் கொண்ட இரண்டு காவலர்களை கோபம் கொண்ட மக்கள் கூட்டம், உயிரோடு கொளுத்திவிட்டது. இவ்வாறு பல்வேறு சம்பவங்கள், பல்வேறு இடங்களில் நடைபெற்றன.

அக்காலகட்டத்தில், மத்திய அமைச்சர்களாக இருந்த, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சி.சுப்பிரமணியன், ஓ.வி.அழகேசன் இருவரும், தங்கள் பதவிகளைவிட்டு விலகினர். இந்நிலையில், மத்திய, மாநில அரசுகள் வேறுவிதமான முடிவுகளை எடுத்தன. திமுகதான் இவ்வளவுக்கும் காரணம் என்று கருதிய அரசுகள், அக்கட்சியை ஒடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தன. கட்சியின் தலைவர்களை, ஜனவரி 25 தொடங்கியே கைது செய்தனர். குடியரசுநாளுக்கு முதல்நாளே, அறிஞர் அண்ணா, நாவலர், கலைஞர் ஆகியோர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டாலும், பிப்ரவரி மாதம் தலைவர் கலைஞர் கடுமையானதொரு அடக்குமுறைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

1965 பிப்ரவரி 16, நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்த நேரத்தில், அடுத்த நாள் ‘முரசொலி’க்குத் தேவையான கட்டுரைகளை எழுதி முடித்துவிட்டுக் கலைஞர் வெளியில் வந்தபோது, அவரைக் கைது செய்யக் காவல்துறை காத்திருந்தது. இது ஒரு நீண்டநாள் சிறைவாசமாக இருக்கக் கூடும் என்பதைப் புரிந்து கொண்ட கலைஞர், சற்றுநேரத்தில் பெட்டி படுக்கைகளுடன், காவல்துறை ஊர்தியில் புறப்பட்டார். இரவு 1.30 மணி வரையில், எழும்பூர் காவல்துறை தலைமையகத்தில் விசாரணை. பிறகு அங்கிருந்து, அதிகாலை 4 மணிக்குப் புறப்பட்டு, அவரைத் திருச்சிக்குக் கொண்டு வந்தனர். அங்கும் சிறையில் அடைக்கவில்லை. சற்றுநேர ஓய்வுக்கும், உணவுக்கும் பிறகு, மதுரைக்கு அழைத்துச் சென்றனர். போகிற வழியில் கலைஞருக்குக் கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டது. அதனால், மதுரை அரசு மருத்துவர்கள், வந்து சோதித்து, மருந்துகளைக் கொடுத்து மதுரையிலேயே தங்க வைக்குமாறு கூறினர். ஓர் இரவு மட்டும் தங்கவைத்துவிட்டு, மறுபடியும் மறுநாள் காலை, அவரை அழைத்துக் கொண்டு போய் பாளையங்கோட்டைச் சிறையில் அடைத்தனர்.

ரௌலட்-சாஸ்திரி சட்டத்தின் மறுவடிவமான இந்தியப் பாதுகாப்புச் சட்டம், என்னும் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுப் பாளைச் சிறையில் தனிமையில் அடைக்கப்பட்டார். ஏறத்தாழ இரண்டு மாதங்கள் அங்கு அவர், தனிமைச் சிறையில் இருந்த போதுதான், அறிஞர் அண்ணா அவரை வந்து பார்த்தார். கலைஞர் மட்டுமின்றி, முரசொலி மாறன், தமிழறிஞர் சி.இலக்குவனார் ஆகியோரும் அதே சட்டத்தின் கீழ், பிறகு கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

எல்லா அடக்குமுறைகளையும் தாண்டி, தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் வலுவடைந்து கொண்டே சென்ற நிலையில், அரசுகள் மறு ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் நேர்ந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே கருத்து வேறுபாடுகள் எழத் தொடங்கின. கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான காமராசரே, இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரையில், ஆங்கிலமும் நீடிப்பதே சரி என்னும் கருத்தை வெளிப்படையாகத் தெரிவித்தார்.

இறுதியில், 1965ஆம் ஆண்டு, நிதிநிலை அறிக்கையையொட்டி, நடைபெற்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையின் கூட்டுக் கூட்டத்தில், குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன், இந்தியை எதிர்த்து, தென்னிந்தியாவில் நடைபெற்று வரும் நிகழ்வுகள், தமக்கு வேதனையை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறினார். முன்னாள் பிரதமர் நேரு அளித்த வாக்குறுதியை, இன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியும் ஏற்றுக் கொள்வதாகவும், இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை இந்தியோடு, ஆங்கிலமும் இணை அலுவல் மொழியாக நீடிக்கும் என்றும் உறுதி அளித்தார். அதன் பிறகே, தமிழ்நாட்டில் மெல்ல அமைதி திரும்பத் தொடங்கிற்று.

அன்று இந்தியாவின் பிரதமராக இருந்த, லால்பகதூர் சாஸ்திரியும், தமிழகத்தின் முதல்வராக இருந்த பக்தவச்சலமும், நேர்மையானவர்கள் என்றும், நிர்வாகத் திறன் மிக்கவர்கள் என்றும் பாராட்டப் பெற்றவர்கள். அந்த பாராட்டுகளுக்கு அவர்கள் உரியவர்களே என்பதில் ஐயமில்லை. ஆனால், மொழி குறித்த தமிழ்நாட்டு மக்களின் மனநிலையை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. யார் சொன்னாலும், மொழிப் பிரச்சனையில், இந்தி ஆட்சிமொழியாவதற்குத் தமிழ்நாடு, ஒருநாளும் இசையாது என்பதை 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம் மெய்ப்பித்தது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 8வது அட்டவணையில் குறிப்பிடப்பெற்றுள்ள அனைத்து மொழிகளையும், ஆட்சி மொழியாக்குவதும், ஆங்கிலத்தைத் தொடர்பு மொழியாக ஏற்றுக் கொள்வதும்தான் ஒரே தீர்வு. ஆனால், அத்தனை பெரிய போராட்டத்திற்குப் பிறகும், இதுதான் தீர்வு என்பதை அன்றைய அரசும் புரிந்து கொள்ளவில்லை, இன்று வரையிலான எந்த அரசும் புரிந்து கொள்ளவில்லை.

(களங்கள்  தொடரும்)

அன்புடன்
சுப.வீரபாண்டியன்

பயன்பட்ட நூல்கள்
==================

1. பார்த்தசாரதி, டி.எம். – “தி.மு.க. வரலாறு” – பாரதி பதிப்பகம், சென்னை-17.

2. வேள்நம்பி, கோ. (தொ.ஆ) – “தமிழனை உயர்த்திய தலைமகன் உரைகள்” – சீதை பதிப்பகம், சென்னை-4.

3. செந்தில்நாதன், ஆழி. – “மொழி எங்கள் உயிருக்கு நேர்” – ஆழி பதிப்பகம், சென்னை-93

4. கருணாநிதி, மு. – “நெஞ்சுக்கு நீதி – முதல்பாகம்” – திருமகள் நிலையம், சென்னை-17.

5. Ramasmy, A. Dr. – “Struggle for freedom of languages in India” – Aazhi publishers, Chennai – 93
6. Ramachandran, S.(Ed.) – “Anna Speaks – At the Rajya Sabha 1962-66” – Orient longman Limited, Newdelhi.

Disclaimer: எங்கள் செய்தி இணையதளத்தில் வரும் தொடர்கள் யாவும் பத்திரிகை டாட் காமிற்கே பிரத்தியேக, தனிப் பிரசுர உரிமை வழங்கப்பட்டுள்ளது . எனவே, பத்திரிகை டாட் காமின் முன் அனுமதியின்றி இதனை முழுவதுமாகவோ இல்லை இதில் வரும் சில பகுதிகளையோ உங்கள் பயன்பாட்டிற்கு உபயோகிக்க அனுமதியில்லை.