1975ஆம் ஆண்டு, குடியரசுத் தலைவரால் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலை, தமிழகம் உட்பட இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என்றாலும், 1975ஆம் ஆண்டு இறுதி வரையில், தமிழகம் நெருக்கடி நிலையை உணரவே இல்லை. 1976 ஜனவரி இறுதியில் தமிழ்நாட்டில் தி.மு.கழக ஆட்சி கலைக்கப்பட்ட மறுநாள் தொடங்கி, அதன் கொடுமைகளை அடுக்கடுக்காய்த்  தமிழகம் கண்டது.
1976 ஜனவரி 31ஆம் தேதி மாலை, ஆட்சி கலைக்கப்பட்ட செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. எனினும், முதல் நாளே சில செய்திக் கசிவுகள் வெளிவந்துவிட்டன. அன்று காலை வெளிவந்த ஓர் ஏட்டில், ‘நாளையப் பொழுது நன்றாய் விடியும்’ என்று எழுதியிருந்தார், அன்று காங்கிரஸ் கட்சியில் இருந்த கவிஞர் கண்ணதாசன். அதுவே நடக்கப் போகும் செய்தியை மறைமுகமாகச் சுட்டிக் காட்டியது. முதலமைச்சராக இருந்த கலைஞருக்கும், டில்லியிலிருந்து செய்திகள் வந்திருக்கக் கூடும். அதனால்தான், அன்று மாலை 5 மணிக்கு, சென்னை டான்பாஸ்கோ பள்ளியின் ஆண்டுவிழாவில் பேசிய கலைஞர், “அனேகமாக முதலமைச்சர் என்ற நிலையில், நான் கலந்து கொள்ளும் கடைசி நிகழ்ச்சியாக இது இருக்கும்” என்று குறிப்பிட்டார்.
பள்ளி விழா முடிந்து, அவர் வீட்டிற்கு வரும் போதே செய்தி வந்துவிட்டது. வீட்டில் இருந்த தொலைபேசி இணைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு இருந்தன. பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த காவல்துறையினர் விடைபெற்றுச் சென்றனர். ஆனால், அடுத்த ஒருமணிநேரத்தில் வேறு காவல்துறையினர் கோபாலபுரம் வீட்டிற்கு வந்தனர். ‘உங்கள் மகன் ஸ்டாலினைக் கைது செய்ய வந்திருக்கிறோம்’ என்றார்கள். அவர் ஊரில் இல்லை என்று சொன்னதையும் நம்பாமல், வீடு முழுவதும் தேடிப் பார்க்க உத்தரவிட்டார்கள். காணவில்லை என்ற பிறகே திரும்பினார்கள். வெளியூர் சென்றிருந்த ஸ்டாலின் மறுநாள் வீடு திரும்பியதும், அவராகவே காவல் ஆணையர் அலுவலகம் சென்றார். கைது செய்யப்பட்டார்.
தி.மு.கழகம், திராவிடர் கழகம், பொதுவுடைமைக் கட்சிகள், ஸ்தாபன காங்கிரஸ், அன்றைய ஜனசங்கம் என எல்லாக்கட்சிகளின் முக்கியமான தலைவர்களும் இரவோடு இரவாகக் கைது செய்யப்பட்டனர். திராவிடர் கழகத் தலைவர் மணியம்மையாரும், கி.வீரமணி அவர்களும், திண்டிவனம் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு, நள்ளிரவில் சென்னை திரும்பினார்கள். பெரியார் திடல் வாசலிலேயே குவிந்திருந்த காவல்துறையினர், அந்த நள்ளிரவில் வீரமணி, சம்பந்தம் ஆகியோரைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
தமிழ்நாடு முழுவதும் தி.மு. கழகத்தினர் கைது செய்யப்பட்டார்கள். அவ்வாறு கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கானவர்களின் பெயர்ப் பட்டியலை, தன் ‘நெஞ்சுக்கு நீதி’ நூலில் கலைஞர் வெளியிட்டுள்ளார். நீல நாராயணன், ஆற்காடு வீராசாமி, முரசொலி மாறன், ஏ.வி.பி.ஆசைத்தம்பி, சிட்டிபாபு, டி.ஆர்.பாலு, பழக்கடை ஜெயராமன், மதுராந்தகம் ஆறுமுகம், பம்மல் நல்லதம்பி, கும்மிடிப்பூண்டி வேணு, துரைமுருகன், வேலூர் தேவராஜ், நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி, கோ.சி.மணி, ஒரத்தநாடு எல்.கணேசன், நன்னிலம் நடராசன், திருச்சி மன்னர் மன்னன், புதுக்கோட்டை பெரியண்ணன், வீரபாண்டி ஆறுமுகம், கோவை மு.கண்ணப்பன், பொன்.முத்துராமலிங்கம், காவேரி மணியம், எஸ்.எஸ்.தென்னரசு என்று அந்தப்பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
ஆனால், இந்தச் செய்தியைக் கூட நாளேடுகளில் வெளியிடுவதற்குத் தடை விதிக்கப்பட்டது. நெருக்கடிநிலைக் காலத்தில் சிறையில் நடந்த கொடுமைகள் ஒருபுறம் இருக்க, செய்திகளுக்கான தணிக்கை என்னும் கொடுமை இன்னொருபுறம் தலைவிரித்தாடியது. கைது செய்யப்பட்டவர்களின் பட்டியலைக் கூட பத்திரிகைகளில் வெளியிடக் கூடாது என்ற நிலை வந்த போது, கலைஞர் ஓர் உத்தியைக் கையாண்டார். பிப்ரவரி 4ஆம் நாள் முரசொலியில் “அண்ணா நினைவுநாளில் (பிப்.3), அண்ணா நினைவிடத்திற்கு வர இயலாதவர்கள்” என்று தலைப்பிட்டு, ஒரு நீண்ட பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் மூலம், அந்தப் பட்டியலில் உள்ள அனைவரும் கைது செய்யப்பட்டுவிட்டார்கள் என்னும் செய்தியை மக்கள் அறிந்து கொண்டனர்.
அரசியல் தொடர்பான செய்திகள் பலவற்றுக்கும் தணிக்கைக் குழு தடைவிதித்தது. எரிச்சலடைந்த தி.மு.கழகத் தலைவர் கலைஞர் ஒரு நாள் முரசொலியில், “வெண்டைக்காய் உடலுக்கு நல்லது – ரஷ்யாவிலிருந்து திரும்பிய ஆதிலட்சுமி ஆராய்ச்சி” என்று எட்டுக் காலத்தில் தலைப்பிட்டு வெளியிட்டார். அடுத்தநாள் விளக்கெண்ணெய் பற்றி ஒரு செய்தி வந்தது. அதாவது, இப்படித்தான், ஒரு கட்சி ஏட்டில் கூட செய்திகளை வெளியிட முடிகிறது என்பதை அவர் மறைமுகமாக உணர்த்தினார்.
அனுமதி மறுக்கப்பட்ட செய்தி
தணிக்கைக் குழுவின் கெடுபிடியால், திராவிடர் கழகமும் பல இன்னல்களைச் சந்தித்தது. சாதாரணச் செய்திகளைக் கூட, வெளியிட அனுமதி மறுத்து, சிவப்புக் கோட்டினால் அடித்துத் திருப்பி அனுப்பியதை, இன்றும் ஆவணமாக அவர்கள் பாதுகாத்து வருகின்றனர். ஒரு முறை, ‘தந்தை பெரியார்’ என்று எழுதுவதற்குக் கூட அனுமதி மறுக்கப்பட்டபோது, வெகுண்டு எழுந்த கழகத்தின் தலைவர் மணியம்மையார், கலி.பூங்குன்றனை அழைத்து, ‘நேரடியாகத் தணிக்கைக் குழுவைப் பார்த்து நான் சொல்வதைச் சொல்லிவிட்டு வாருங்கள்’ என்றார்.
தணிக்கைக் குழு அதிகாரிகளாக, மூவர் இருந்தனர். மூவரும் பார்ப்பனர்கள். அவர்களில் ஒருவரான சௌமிய நாராயணன் என்பவரை, கலி.பூங்குன்றன் சந்தித்தார். “சென்ற வாரம் நாங்கள் சங்கராச்சாரி என்று எழுதிய போது அவ்வாறு எழுதக் கூடாது, சங்கராச்சாரியார் என்றுதான் எழுத வேண்டும் எனச்   சொன்னீர்கள். ஆனால் இன்று தந்தை பெரியார் என்று கூட எழுதக் கூடாது என்கிறீர்களே, இது என்ன நியாயம்?” என்று கேட்டார். அதற்கு அவர், ‘நாங்கள் சொல்வதுதான் சட்டம், என்ன சொல்கிறோமோ, அதைத்தான் நீங்கள் செய்ய வேண்டும்’ என்றார்.
கலி.பூங்குன்றன்
மணியம்மையார் சொல்லச் சொன்ன செய்தியைக் கலி.பூங்குன்றன் “பெரியார் எங்கள் தலைவர். அவர் தொடங்கிய பத்திரிக்கை இது. இதில் நாங்கள் தந்தை பெரியார் என்றுதான் குறிப்பிடுவோம். நீங்கள் என்ன செய்வீர்களோ செய்து கொள்ளுங்கள், ஆனாலும், ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், காலம் இப்படியே போய்விடாது” என அப்படியே சொல்லிவிட்டு, அலுவலகம் திரும்பினார். அடுத்த நாள் தந்தை பெரியார் என்றுதான் அச்சில் வந்தது. அவர்களும், மிரட்டிய மாதிரி எதுவும் செய்யவில்லை, விட்டுவிட்டார்கள். இருப்பினும், மற்ற செய்திகளில் எல்லாம், அவர்கள் வெட்டியவை ஏராளம் என்றுதான் கூற வேண்டும்.
சிறைச்சாலைக் கொடுமைகள் சொல்லி மாளாதவை. தமிழகத்தின் அனைத்துச் சிறைகளிலும் ஒரே மாதிரியான கொடுமைகள் நடந்தன என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு சிறையும், ஒவ்வொரு மாதிரி இருந்தது. மிகக் கூடுதலான சித்ரவதைகளைச் சென்னையில் இருந்தவர்கள் சந்தித்தனர். முரசொலி மாறன், ஆற்காடு வீராசாமி ஆகியோர்கள் மீது தொடுக்கப்பட்ட தடியடியால், அவர்களின் இடுப்பு எலும்புகள் முறிந்தன. வீரமணி, பெரியவர் சம்பந்தம் ஆகியோரும் இரக்கமின்றித் தாக்கப்பட்டனர். 70 வயது முதியவரான நெல்லை ஜெபமணிக்கு நடந்த சித்ரவதைகள் மிகக் கொடுமையானவை. கண்காணிப்பாளர் வித்தியாசாகர், சிறை அதிகாரி கையூம் ஆகியோர் திட்டமிட்டுப் பல்வேறு வகையிலும், கொடுமைகளைச் சிறையில் அரங்கேற்றினர்.
சென்னைச் சிறையில்தான், முரசொலி மாறன், கி.வீரமணி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இருந்தனர். அவர்கள் அனுபவித்த கடும் சித்தரவதைகள் குறித்து, நூல்கள் பலவற்றில் பதிவுகள் காணப்படுகின்றன. மூத்த எழுத்தாளர் சோலை எழுதியுள்ள ‘ஸ்டாலின்’ என்னும் நூலில் அச்செய்திகள் விரிவாகக் குறிக்கப் பெற்றுள்ளன. வேறு ஒரு வழக்கில், கைதாகி, அப்போது சென்னைச் சிறையில் இருந்த தியாகுவும், தன் நூலில், தான் கண்ட அந்தக் காட்சிகளைப் பதிவு செய்துள்ளார். எல்லாவற்றையும் தாண்டி, சிறைக் கொடுமைகளால் இறந்து போன, அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர், சிட்டிபாபு எழுதி, பிறகு வெளியான “சிட்டிபாபுவின் சிறை டைரி”, கல் நெஞ்சையும் கரைக்கக் கூடியது. இளகிய மனம் படைத்தவர்களால், அந்த நூலை முழுமையாகப் படித்து விடவே முடியாது. அந்நூலில் இருந்து, எடுத்துக்காட்டிற்காகச் சில வரிகளை மட்டும் கீழே தருகிறேன்.
ஸ்டாலின் சிட்டிபாபு
        “அருகே என் தம்பி! ஆமாம் ஸ்டாலின்தான். தமிழக முதலமைச்சரின் மகன் என்று நேற்று வரை அறிந்த தம்பியின் முகத்தில் ஒருவன் தன் பூட்ஸ் காலால் உதைந்தான். அடுத்து, கொலைகாரன் ஒருவன் ஒரு தடிகொண்டு தோள்பட்டையில் அடித்தான்! காக்கி உடையணிந்த வார்டன் ஒருவன் கன்னத்தில் கை நீட்டினான். கண்டேன் காட்சியை… இவர்கள் இவனை அடித்தே கொன்றுவிடுவர் என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. திடீரென்று குறுக்கே பாய்ந்தேன், தம்பியைத் தள்ளிக் கொண்டே! தடிகள் என் கழுத்தில்! அவைகள் அடிகள் அல்ல உலைக்களத்தில் பழுத்துக் காய்ச்சிய இரும்பைத் தட்டிப் பதப்படுத்தும் உளியாக மாற்றிவிடும் சம்மட்டி அடிகள். அடுத்து ஒருவன் வீராச்சாமியை தூக்கி நிறுத்தி, ஒரு குத்துவிட்டு உள்ளே தள்ளினான். அடுத்து, ‘வாடா தம்பி வா’ என்று சொல்லி என் வாயில் ஒரு குத்துவிட்டு என்னையும் உள்ளே தள்ளினான்”
 – இப்படிப் போகிறது சிட்டிபாபுவின் டைரி. இன்னும் எத்தனையோ விதவிதமான கொடுமைகள். ஒருநாள் உணவில் வேப்பெண்ணெய் ஊற்றிக் கொடுக்கிறார்கள். இன்னொருநாள் சோறும், மணலும் கலந்து வருகிறது.
இந்தக் கொடுமைகள் பற்றியெல்லாம், அரைகுறையாகக் கேள்விப்பட்ட கழகத்தின் தலைவர் கலைஞர் சிறைக்குச் செல்கிறார். இரத்த உறவினை மட்டும்தான் பார்க்க முடியும் என்கிறார்கள். அதன்படி, ஸ்டாலினை வரச் சொல்கிறார்கள். வழக்கத்திற்கு மாறாக, அவர் முழுக்கைச் சட்டை  போட்டிருப்பதைப் பார்த்த கலைஞர், ‘அடித்தார்களா?’ என்று கேட்கிறார். மௌனமாக இல்லை என்று தலையசைக்கிறார் ஸ்டாலின்.
இவ்வாறு நிலைமைகள் தொடர்ந்து கொண்டிருந்த போது, ஜூன் 3ஆம் தேதி, தன் பிறந்தநாளையொட்டி, உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதத்தில், “என் அன்னையைவிட அதிக அன்பை என் மீது பொழிந்த அண்ணா” என்று எழுதியிருந்த வரிகளை வெட்டிவிட வேண்டும் என்று, தணிக்கைக் குழுவினர் கூறுகின்றனர். ஏன் என்று கேட்டதற்கு, காரணம் கூற மறுத்துவிடுகின்றனர். ‘இனியும் பொறுப்பதில்லை’ என்ற முடிவோடு, கையில் துண்டறிக்கைகளை எடுத்துக் கொண்டு சென்னை ஆயிரம்விளக்கு முதல், அண்ணா சாலையில் இருக்கும் அண்ணா சிலை வரை கலைஞர் நடந்தே போகிறார். எதிரில் வருவோருக்கெல்லாம், துண்டறிக்கைகளைக் கொடுத்துக் கொண்டே போகிறார். அவருடன், இளமுருகு பொற்செல்வி, முரசொலி செல்வம், மகன்கள் அழகிரி, தமிழரசு ஆகியோரும் செல்கின்றனர். அவர் அண்ணா சிலையை அடையும் வேளையில், பெரும் கூட்டம் கூடிவிடுகிறது. போக்குவரத்து நிலைக்குத்தி நிற்கிறது. இது ஒரு புதுவிதமான போராட்டம். காவல்துறையினரே எதிர்பார்க்காத போராட்டம்.
செய்தி அறிந்து, காவல்துறையினர் விரைந்து வருகின்றனர். ‘எங்கே செல்கின்றீர்கள்?’ என்று கலைஞரைப்  பார்த்துக் கேட்கிறார்கள். “அண்ணாவின் பெயரைக் கூடப் போட அனுமதிக்காத தணிக்கைக் குழுவினரின் அலுவலகம் முன்பு, உண்ணா நோன்பு மேற்கொள்ளப் போகிறேன்” என்று சொல்கிறார். அதற்குப்பிறகு, அவரையும், மற்றவர்களையும் கைது செய்து, திருவல்லிக்கேணி காவல்நிலையத்திற்குக் கொண்டு செல்கின்றனர். மாலை வரை அங்கு வைத்திருந்துவிட்டு, பிறகு அனைவரும் விடுதலை செய்யப்படுகிறார்கள்.
சிட்டிபாபு
சிறையில் சித்ரவதைக்குள்ளான சிட்டிபாபு, சாத்தூர் பாலகிருஷ்ணன் ஆகியோர் மரணத்தைத்  தழுவுகின்றனர். சாத்தூர் பாலகிருஷ்ணனின் இறதி நிகழ்வில் கலந்து கொள்வதற்குக் கூடக் கலைஞருக்குத் தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி, அவர் சாத்தூருக்குச் செல்கிறார்.
அந்தக் காலகட்டத்தில், அவரிடம் பணியாற்றியவர்கள் கூட, வேலையைவிட்டு விலகிச் சென்றுவிடுகின்றனர். கார் ஓட்டுவதற்கும் யாருமில்லை. முன்னாள் அமைச்சர் கோவை கண்ணப்பன் சில காலம் கலைஞரின் காரோட்டியாகப் பணியாற்றினார். பிறகு அவரும் கைது செய்யப்பட்டார். கோபாலபுரத்திற்கு வந்து போகும் அனைவரும் கண்காணிக்கப்பட்டனர். திமுகவினரின் கரை வேட்டிகளைச் சலவை செய்து கொடுப்பதற்கும், சலவைத் தொழிலாளிகள் அஞ்சினர்.
ஒருமுறை, வழக்குகளுக்கு நிதி திரட்டுவதற்காகக் கலைஞர் பெங்களூரு சென்றிருந்தார். அங்கே ஹைலேண்ட்ஸ் ஹோட்டலில் தங்கியிருந்தார். அப்போது அங்கு வந்த கர்நாடகக் காவல்துறை அதிகாரிகள், மாலைப் பொதுக்கூட்டத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறினர். ‘ஜனநாயகம் முழுமையாகச் சாகடிக்கப்பட்டுவிட்டதா’ என்று கேட்டார் கலைஞர். விடை ஏதும் சொல்லாமல், அவர்கள் விடைபெற்றனர். ஆனால், அப்போதும் ஒரு மாற்றுவழியை அவர் கையாண்டார். தன்னைச் சந்திக்க விரும்புகிறவர்கள் மாலையில் நேரில் வந்து சந்திக்கலாம் என்று அறிவித்தார்.
மாலை நேரம். மக்கள் மைல்கணக்கில் வரிசையில் நின்றார்கள். ஒவ்வொருவராக ஹோட்டலுக்குள் வந்து, வழக்கு நிதியைத் தனிப்பட்ட முறையில் வழங்கிச் சென்றார்கள். பொதுக்கூட்டம் நடந்திருந்தால்கூட அவ்வளவு நிதி சேர்ந்திருக்காது. வழக்கு நிதியாகப் பெருந்தொகையைப் பெற்றுச் சென்னை திரும்பினார் கலைஞர்.
அது ஓர் இருண்டகாலம். தனிமனித உரிமை, பத்திரிகை சுதந்திரம், நீதிமன்ற தனிப்போக்கு எல்லாம் முடக்கப்பட்டிருந்த காலம். அதுகுறித்து பிற்காலத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில், (27.06.2000), நீதிபதி கிருஷ்ணய்யர், ( Emergency – Darkest Hour in India’s Judicial History) என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார்.
எல்லாம் கடந்து போகும் என்பதுதானே இயற்கையின் விதி! 21 மாதங்களுக்குப் பிறகு, நெருக்கடி நிலையும் கடந்து போயிற்று. மறுபடியும் இந்தியாவில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் பரப்புரைக்காகச் சென்னை வந்திருந்த இந்திராகாந்தி, சென்னை கடற்கரையில் நடைபெற்ற மாபெரும் பொதுக் கூட்டத்தில், வெளிப்படையாக மன்னிப்பு கோரினார். ‘தான் நினைத்தது ஒன்று’ என்றும், தன்னை மீறிப் பல செயல்கள் நடந்துவிட்டதை உணர்வதாகவும், அப்போது அவர் கூறினார்.
உலகில் என்றும் சர்வாதிகாரம் வென்றதில்லை. அதேபோல அறிவிக்கப்பட்டால்தான் நெருக்கடிநிலை என்பதுமில்லை. அறிவிக்காமல் நெருக்கடி நிலையை நடைமுறைப்படுத்துகிற அரசுகளும் ஒருகாலத்தில் மக்களிடம் மன்னிப்புக் கோர நேரிடும்.
(களங்கள் தொடரும்….)
அன்புடன்
சுப.வீரபாண்டியன்
பயன்பட்ட நூல்கள்
==================
1. சுப்பிரமணி, இரா. – “இந்தியாவின் நெருக்கடி நிலை” – சாளரம் வெளியீடு, இராயப்பேட்டை, சென்னை -14.
2. சிட்டிபாபு – “சிட்டிபாபுவின் சிறை டைரி” – திமுக இளைஞரணி வெளியீடு, அன்பகம், சென்னை – 18.
3. தேவசகாயம், எம்.ஜி.(தமிழில் ஜெ.ராம்கி) – “எமர்ஜென்சி – ஜெ.பி.யின் ஜெயில் வாசம்” – கிழக்குப் பதிப்பகம், இராயப்பேட்டை, சென்னை – 14.
4. சோலை – “ஸ்டாலின்” – விகடன் பிரசுரம், சென்னை – 2.
5. கருணாநிதி,மு. கலைஞர் – “நெஞ்சுக்கு நீதி – இரண்டாம் பாகம்” – திருமகள் நிலையம், சென்னை – 17.
6. தியாகு, – “சுவருக்குள் சித்திரங்கள்” – பொன்னி வெளியீடு, மடிப்பாக்கம், சென்னை – 91.
7. Sanjaya Baru (Ed.,) – “Democracy interrupted – The Emergency, 1975-77” – Penguin Publishers, Gurgaon, Haryana

Disclaimer: எங்கள் செய்தி இணையதளத்தில் வரும் தொடர்கள் யாவும் பத்திரிகை டாட் காமிற்கே பிரத்தியேக, தனிப் பிரசுர உரிமை வழங்கப்பட்டுள்ளது . எனவே, பத்திரிகை டாட் காமின் முன் அனுமதியின்றி இதனை முழுவதுமாகவோ இல்லை இதில் வரும் சில பகுதிகளையோ உங்கள் பயன்பாட்டிற்கு உபயோகிக்க அனுமதியில்லை.