சுபவீ எழுதும் போராட்டங்கள் – இராமாயண எதிர்ப்புப் போராட்டம்

1927ஆம் ஆண்டு, அண்ணல் அம்பேத்கர் மனுஸ்மிருதியை பொது இடத்தில் வைத்து எரித்தார். அதனைத் தவிர இலக்கியங்கள் புராணங்கள், இதிகாசங்கள்,  மதநூல்கள் ஆகியனவற்றை எதிர்த்துப் பல்வேறு வகையிலான ஒரு தொடர் போராட்டம், தமிழ்நாட்டைத் தவிர இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் நடந்திருப்பதாகத்  தெரியவில்லை.

தமிழ்நாட்டில் அப்படியொரு போராட்டம், ஏறத்தாழ ஒரு நூற்றாண்டாக நடந்து கொண்டிருக்கிறது. 1922ஆம் ஆண்டு, காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக இருக்கும்போதே, ஒரு மாநாட்டில் உரையாற்றிய பெரியார், இராமாயணத்தையும், மனுவின் சட்டத்தையும் போட்டுக் கொளுத்த வேண்டும் என்று பேசினார். அப்போது சுயமரியாதை இயக்கம் என்பதெல்லாம் தொடங்கப்படவேயில்லை.

பிறகு, சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பெற்ற அதன்  தொடக்க காலத்திலும் அவர் அதனை வலியுறுத்தி வந்தார். பெரியார் நடத்திய குடியரசு ஏட்டில் சந்திரசேகரப் பாவலர் என்பார், இராமாயணம் குறித்த தொடர் கட்டுரைகளை எழுதி வந்தார். பெரியார் எழுதியுள்ள, ‘இராமாயணப் பாத்திரங்கள்,’ ‘இராமாயணக் குறிப்புகள்’ ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கன. வேறு யாரைக் காட்டிலும் பெரியார் கூடுதலாக இராமாயணத்தைப் படித்துள்ளார் என்பதை இந்நூல்கள் எடுத்துக் காட்டுகின்றன. இராமாயணத்திலும், கந்த புராணத்திலும் உள்ள கதாபாத்திரங்களை ஒப்பிட்டு, இந்நூல்களில் எழுதியுள்ளார்.

பெரியாரின் அடிச்சுவட்டைப் பின்பற்றி, அறிஞர் அண்ணா அவர்களும் இராமாயண எதிர்ப்பில் முனைப்புக் காட்டினார். ‘கம்பரசம்’ போன்ற நூல்களை எழுதியதோடு, ஏன் இராமாயணத்தைக் கொளுத்த வேண்டும் என்னும் சொற்போரிலும் அவர் ஈடுபட்டார். அந்தச் சொற்போர்கள் இரண்டு தொகுக்கப்பட்டு, ‘தீ பரவட்டும்’ என்னும் நூலாக வந்திருக்கின்றது. . முதல் சொற்போர் 1943ஆம் ஆண்டு, பிப்ரவரி 9ஆம் தேதி, சென்னை சட்டக் கல்லூரியில் நடைபெற்றது. அறிஞர் அண்ணா அவர்களும், பேராசிரியர் இரா.பி.சேதுபிள்ளை அவர்களும் எதிரெதிராக நின்று வாதாடினார்கள். அதே ஆண்டு, மார்ச் மாதம் 14ஆம் தேதி, சேலம் செவ்வாய்பேட்டையில் இரண்டாவது சொற்போர் நடைபெற்றது. அதில் அறிஞர் அண்ணாவும், நாவலர் சோமசுந்தர பாரதியாரும் பங்கேற்றனர்.

ஏன் இராமாயணம் போன்ற நூல்களை எரிக்க வேண்டும் என்பது குறித்துப் பேசிய அண்ணா, ”இக்கால இழிநிலையைப் போக்க, அக்காலத்தில் ஏற்பட்ட ஆரியக் கலையை நீக்குவதே சரி. அதற்கான மனப்பான்மை உண்டாகவே, ஆரிய ஏடுகளைத் தீயிலிட வேண்டும் என்று கூறுகிறோம்” என்றார். சூத்திரனாகப் பிறந்த ஒருவன், தவம் செய்யக் கூடாது என்று சொல்லி, இராமராஜ்யத்தில் கொலை செய்யப்பட்ட சம்பூகன் போன்றவர்கள் நிலையை எடுத்துக்காட்டி, இராமாயணம் என்பதே ஆரிய திராவிடப் போராட்டத்தின் இலக்கிய வடிவம்தான் என்று பெரியாரும், அண்ணாவும் எடுத்துச் சொல்லினர்.

புலவர் குழந்தை

இதன் விளைவாக, இராமாயணத்திற்கு எதிரான கருத்துகள், தமிழக மக்களிடம் பரவத் தொடங்கின. ஈரோட்டைச் சேர்ந்த புலவர் குழந்தை, இராவணனைக் கதைத் தலைவனாக ஆக்கி ‘இராவண காவியம்’ என்னும் ஒரு நூலை உருவாக்கினார். எனினும் அந்த நூல், 1948ஆம் ஆண்டு, அரசினால் தடை செய்யப்பட்டது. அவ்வாறு தடை செய்யப்பட்ட பிறகே, அது குறித்து, நிறையப் பேசப்பட்டது. இராவணக்காவியம் நூல் இளைஞர்களிடையே ஓர் எழுச்சியை உருவாக்கியது. புரட்சிக்கவிஞர் பாரதிதாசனும், இராவணனைப் பாராட்டித் தன் கவிதையில் எழுதியிருப்பதைப் பார்க்க முடிகிறது. திமுக ஆட்சி ஏற்பட்ட பிறகு, 1971ஆம் ஆண்டு, அந்த நூலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. 48ஆம் ஆண்டு வெளியான போது, நூலில் இடம் பெற்றிருந்த பாடல்களைவிட ஏறத்தாழ 300 பாடல்களைக் கூடுதலாகக் கொண்ட நூலாய், அந்நூல் மறுபடியும் வெளியிடப்பட்டது. இராமாயணத்தைப் போற்றிப் பாராட்டும், தமிழ் அறிஞர்கள் பலரும் கூட இராவண காவியத்தையும், அதன் கவிதை அழகிற்காகப்  பாராட்டி வரவேற்றனர்.

”கம்பனும் இனிமேல் வருவானா
கவிதையும் இப்படித் தருவானா
என்றிருந்தோம்
கம்பனும் வந்தான், கவிதையும் தந்தான்
கருத்துதான் மாறுபட்டது.”

என்று ஒரு தமிழறிஞர் பாராட்டினார். அறிஞர் சிலம்பொலி செல்லப்பனார், புலவர் ந.வெற்றியழகன் ஆகியோர் இராவண காவியம் குறித்த தொடர் சொற்பொழிவுகளைப்  பல மாதங்கள் நிகழ்த்தினர். 1986ஆம் ஆண்டு, பெரியார் நூலக வாசகர் வட்டம் சார்பில், இராவண காவிய மாநாடே நடைபெற்றது.

கலைத்துறையில் எம்.ஆர்.இராதா, இராமாயண எதிர்ப்புப் பரப்புரையைத் தன் நாடகங்களில் தொடர்ந்து செய்து வந்தார். மிகக் கடுமையான விமர்சனங்களை தன் நாடகங்களில் முன்வைத்தார். 1954 டிசம்பரில், இராமயண எதிர்ப்பு நாடகத்தை அவர் திருச்சியில் நடத்த முயன்றபோது, அந்நாடகத்திற்குத்  தடை விதிக்கப்பட்டது. அதனையொட்டியே, நாடகக் கட்டுப்பாடுச் சட்ட முன்வடிவம் என ஒன்றை அன்றைய தமிழக அரசு கொண்டுவந்தது. ஒரு மதத்தினரின் மனத்தைப் புண்படுத்துகிற மாதிரி நாடகங்கள் நடத்தப்பட்டால்,  அதனைத் தயாரித்தவர்கள், அதில் நடித்தவர்கள் எல்லோருக்கும் மூன்றுமாதச்  சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்  என்று அச்சட்டம் கூறியது.  இராமாயண எதிர்ப்பைத் தடுப்பதற்காக   மட்டுமே கொண்டுவரப்பட்ட சட்டம் அது!

அதனைப் பொருட்படுத்தாமல், திருச்சியல் நாடகம் நடத்த முயற்சி செய்த எம்.ஆர்.இராதா தஞ்சையில் ஒரு முறையும், கும்பகோணத்தில் இன்னொரு முறையும் கைது செய்யப்பட்டார். மீண்டும் மதுரையில் அதே ஆண்டு இறுதியில் நாடகம் நடத்த முயன்ற போது, எதிரிகளின் கைக்கூலிகள் உள்ளே புகுந்து பெரும் கலவரத்தை உருவாக்கினர். கலவரம் செய்தவர்களைக்  காவல்துறை கைது செய்து, கொண்டுபோன பிறகு மீண்டும் நாடகம் தொடர்ந்து நடைபெற்றது.

இதுகுறித்து, தமிழ்நாடு சட்டமன்றத்திலேயே விவாதங்கள் நடைபெற்றுள்ளன. அன்று, கல்வி அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம், ‘எம்.ஆர்.இராதா நடத்துவது இராமாயணம் அல்ல, கீமாயணம்’ என்றார். அன்று தடை செய்யப்பட்ட அந்த நாடகம், பின்னர் வெவ்வேறு ஊர்களில், வெவ்வேறு பெயர்களில் நடைபெற்றது.

1956ஆம் ஆண்டு, இராமர்பட எரிப்புப் போராட்டம், என ஒன்றை பெரியார் நடத்தினார். அதற்குப்  பெரும் எதிர்ப்புகள் வந்தன. வடநாட்டில், இராவணன்  பொம்மையை எரித்து, இராமலீலா கொண்டாடுகின்றனர். அவர்களுக்கு அந்த உரிமை உண்டென்றால், இராமர் படத்தை எரிக்கும் உரிமை நமக்கு ஏன் இருக்க முடியாது என்று பெரியார் கேட்டார். இராமர்பட எரிப்புப் போராட்டம் பல விவாதங்களை உருவாக்கியது. பெரியாருக்கு, மிக நெருக்கமாக இருந்த, வரதராஜுலு நாயுடு, குன்றக்குடி அடிகளார் ஆகியோரும் அந்தப் போராட்டத்தை கைவிட்டுவிடும்படி பெரியாரிடம் கேட்டுக் கொண்டார்கள். அதுகுறித்து எழுதும்போது, ”இந்தக் கணவான்கள் எனது மரியாதைக்கு உரியவர்கள் ஆவார்கள். இவர்களில் எம்.எல்.ஏ. ஒருவர், இவர் மக்கள் பிரதிநிதி உரிமை கொண்டவர், மற்றொருவர் ஒரு மாடாதிபதி” என்று குறிப்பிட்ட பெரியார், இவர்கள் இருவரும் என்மீது கொண்டுள்ள பற்றுதல் மற்றும் உரிமை காரணமாக கோருகிறார்களே அன்றி, ஏன் எரிக்கக் கூடாது என்பதற்கான நியாயமான காரணம் எதையும் கூறவில்லை என்று  குறிப்பிட்டு எழுதினார். அவர்கள் அதற்குரிய நியாயமான காரணத்தைச் சொல்வார்கள் என்றால், உடனடியாகப் போராட்டத்தை கைவிடவும் தயாராக இருக்கிறேன் என்று சொன்னார். அவர்களிடமிருந்து விடை ஏதும் வராதநிலையில், 1956 ஆகஸ்ட் ஒன்றாம் தேதி, தமிழ்நாடு முழுவதும் பொதுவெளியில் இராமர் படம்  எரிக்கப்படும் என்று பெரியார் அறிவித்தார்.

ஆகஸ்ட் முதல் தேதி, மாலை 4 மணியளவில், பெரியார், குத்தூசி குருசாமி, கி.வீரமணி, ஆனைமலை நரசிம்மன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர். இருப்பினும், அன்று தமிழ்நாடு முழுவதும், இராமர்பட எரிப்புப் போராட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. பெரியார் உள்பட கைது செய்யப்பட்ட அனைவரும் அன்று இரவே விடுதலை செய்யப்பட்டனர். இராமாயணத்தைத் தொடர்ந்து எதிர்த்து வரும், இராமர்படத்தை எரிக்கும், பெரியாரை விடுதலை செய்திருக்கக் கூடாது நீண்டநாள் சிறையில் அடைத்திருக்க வேண்டும் என்று ‘இந்து’, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’, ‘மெயில்’ ஆகிய ஏடுகள் எழுதின. ஆனால், அன்று முதலமைச்சராக இருந்த காமராசர் அதற்குமேல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழ்நாட்டில் மட்டுமின்றி, வடநாட்டில் கருத்தரங்குகளில், கலந்து கொள்ளச் சென்றபோதும்,  பெரியார், இராமாயண எதிர்ப்பை வெளிப்படுத்தினார். 1959இல், கான்பூரில் பேசும்போது, இராமாயணத்தில் உள்ள வருணபேதங்களையும், ஆபாசச் செய்திகளையும் அவர் எடுத்துப் பேசினார். அவருடைய உரை கேட்ட, லலயி சிங் யாதவ் என்பவர் பெரியாரின் ‘இராமாயணப் பாத்திரங்கள்’ என்னும் நூலை இந்தியில் மொழிபெயர்த்து வெளியிட்டார். ஆனால், உ.பி. அரசு இந்தியத்  தண்டனைச் சட்டம் 295ஏ பிரிவின்படி, அந்நூலைத்  தடை செய்துவிட்டது. ஆனால், அலகாபாத் உயர்நீதிமன்றம், அவ்வழக்கின் மேல்முறையீட்டில், அரசின் தடை செல்லாது என அறிவித்துவிட்டது.

பெரியார் அவர்களின், 92ஆவது வயதில் சேலத்தில் நடைபெற்ற மாநாடு, பேரணிகளிலும், இராமாயண எதிர்ப்பு மிகக் கடுமையாக முன்வைக்கப்பட்டது. அந்தப் பேரணியில்தான், பெரியாருக்குக் கருப்புக்கொடி காட்ட அரசின் அனுமதிபெற்று, அந்தப் பாதையில் கூடிய ஜனசங்கம் கட்சியினர்(இன்றைய பிஜேபி) பெரியார் மீது செருப்பை எடுத்து வீசினார்கள். அதுகண்டு ஆத்திரமடைந்த, திராவிடர் கழகத் தோழர்கள் அதே செருப்பை எடுத்து அங்கு ஊர்வல வண்டிகளில் வைக்கப்பட்டிருந்த இராமர் படத்தை அடித்தார்கள்.

அது மிகப்பெரும் பிரச்சனை ஆனது. வழக்கும் தொடுக்கப்பட்டது. அப்போது, தமிழ்நாட்டில் கலைஞர் தலைமையில் திமுகவின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்ததால், திமுகதான் இவற்றுக்கெல்லாம் பின்புலக்  காரணம் என்னும் செய்தி பரப்பப்பட்டது. பெரியார், இராமரைச் செருப்பால் அடிப்பது போலவும், பின்னால் நின்று முதலமைச்சர் கலைஞர், கைகொட்டிச் சிரிப்பது போலவும் துக்ளக் ஏடு கேலிச் சித்திரம் வெளியிட்டது. அந்த நிகழ்வை, இவ்வளவுதூரம் பெரிதுப்படுத்தியதற்குக்  காரணம், அப்போது நடக்கவிருந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்தான்! இந்த நிகழ்வை அடிப்படையாக வைத்துத்  தமிழ்நாடு முழுவதும் பரப்புரைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

தமிழ்நாட்டில் மட்டுமின்றி, இந்தியா முழுவதுமே இதுகுறித்துப்  பேசப்பட்டது. பிரதமர் இந்திராகாந்தியிடம், ஊடகவியலாளர்கள், ‘தமிழ்நாட்டில் உங்களோடு கூட்டணி வைத்திருக்கும் கட்சியினர் இராமர் படத்தைச்  செருப்பால் அடித்துள்ளார்களே இனி, இந்துக்களின் வாக்குகள் உங்களுக்குக்  கிடைக்குமா’ என்று கேட்டுள்ளனர். ‘யார் அப்படிச் செய்தது?’ என்று இந்திராகாந்தி திருப்பிக் கேட்டிருக்கிறார். ‘திராவிடர் கழகத் தலைவர் ஈ.வெ.இராமசாமிதான் அப்படிச் செய்கிறார்’ என்று விடை சொல்லியுள்ளனர். அதற்கு இந்திரகாந்தி சிரித்துக் கொண்டே, ‘அதனை அவர் நெடுங்காலமாகச் செய்து கொண்டிருக்கிறாரே’ என்று சொல்லிவிட்டு, அந்த இடத்தைவிட்டுச்  சென்றுவிட்டார்.

அப்போது நடைபெற்ற தேர்தலில், இதன் எதிர்விளைவுகள் கண்டிப்பாக இருக்கும் என்றும் இம்முறை, திமுக தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும்  ஆட்சிக்கு வரமுடியாது என்றும் பத்திரிகைகள் பலவும் எழுதின. ஆனால், அனைவரின் கணிப்புகளையும் பொய்யாக்கிவிட்டு, தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்றது. 234 இடங்களில், 184 இடங்களைத் திமுகவிற்கே மக்கள் அளித்திருந்தனர். எந்த சேலத்தில், அந்தப் பேரணியும், கலவரமும் நடைபெற்றதோ அதே சேலத்தில், திமுக கழகம் பெரிய வெற்றியை ஈட்டியது. அது தொடர்பாக, நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.


பெரியாருக்குப் பின்னும், இராமயண எதிர்ப்புப் போராட்டம் தமிழகத்தில் தொடரவே செய்தது. பெரியார் இறந்த மறுஆண்டே, இங்கு பெரிய அளவில், ஒரு போராட்டம் நடைபெற்றது. அதற்கு ‘இராவணலீலா’ என்று பெயர். வடநாட்டில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் இராமலீலாவுக்கு எதிராக இந்த இராவணலீலா அமைந்தது. பெரியாருக்குப் பிறகு, திராவிடர்  கழகத்தைத் தலைமையேற்று நடத்திய மணியம்மையார், இராவணலீலாவை நடத்தினார்.

மணியம்மையாரின் வாழ்க்கை போராட்டங்களும், தியாகங்களும் நிறைந்தது. தோழர் ஓவியா, தன் நூலில் எழுதியிருப்பதைப் போல, ”மணியம்மையார் அளவுக்கு, ஒரு மிகப்பெரிய எதிர்ப்பலையை, வசவுச் சொற்களை அபவாதத்தைச் சந்தித்த, வேறு ஒரு பெண் தலைவர் திராவிடர் இயக்கத்தில் மட்டுமல்ல, வேறு எந்த இயக்கத்திலாவது, இருக்க முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி” என்றே சொல்ல வேண்டும். 1942ஆம் ஆண்டு முதல், தன்னை முழுமையாகப் பொதுவாழ்வில், இணைத்துக் கொண்ட மணியம்மையார், இறுதிநாள்வரை போராட்டங்களிலேயே தன் வாழ்வை நகர்த்தினார். பெரியாருக்குப் பிறகு, அவர் நடத்திய மிகப்பெரிய போராட்டம் ‘இராவணலீலா’ என்று சொல்லலாம்.

வடநாட்டில், தொடர்ந்து இராமலீலா என்னும் விழா நடத்தப்படுவதைத் தடை செய்ய வேண்டும் என்று, அன்றைய திராவிடர் கழகச் செயலாளர் கி.வீரமணி, 17.10.1974 அன்று, பிரதமர் இந்திராகாந்திக்குக்  கடிதம் எழுதினார். அப்படி அது தடைசெய்யப்படவில்லை என்றால், தமிழ்நாட்டில் இராவணலீலா நடத்தப்படும் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். அதற்கு, 24.10.1974 அன்று, விடை அனுப்பிய பிரதமர், ‘உங்கள் கோரிக்கையை ஏற்க முடியாது’ என்றும், இராவணலீலா நடத்தும் திட்டத்தைக்  கைவிடுமாறும் எழுதியிருந்தார். மீண்டும் அதை வலியுறுத்தி, மணியம்மையார் எழுதிய கடிதத்திற்கும், பிரதமரிடமிருந்து அதே மாதிரியான இன்னொரு விடை வந்திருந்தது. அதனால், 25.12.1974 அன்று, சென்னை பெரியார் திடலில், இராவணலீலா கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இராமர்பட எரிப்பின்போது, காமராசர் முதலமைச்சராய் இருந்ததைப் போல, இராவணலீலா நிகழ்வின்போது, தமிழ்நாட்டில் கலைஞர் முதலமைச்சராக இருந்தார். அன்று காமராசரிடம், சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டதைப் போலவே, இப்போது கலைஞரிடம் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், சட்டமன்றத்தில் வினா எழுப்பினர். அதற்கு முதல்வர் கலைஞர் ”இராவணலீலா, பக்தர்கள் மனங்களைப்  புண்படுத்தும் என்றால், இராமலீலா பகுத்தறிவாளர் மனங்களைப்  புண்படுத்தாதா” என்று கேட்டார்.

எனினும், முதலமைச்சர் என்ற முறையில், சட்டப்படி எடுக்க வேண்டிய நடவடிக்கையிலிருந்தும் அவர் தவறவில்லை. 24.12.1974 அன்றே கழகத்தின் பொதுச்செயலாளர் கி.வீரமணி, திருவாரூர் கே.தங்கராசு, கா.மா.குப்புசாமி, திருச்சி செல்வேந்திரன், கோவை இராமகிருட்டிணன் உட்பட பலரும் கைது செய்யப்பட்டனர்.

எனினும், 25.12.1974 இரவு, சென்னை பெரியார் திடலில், பல்லாயிரக்கணக்கானவர்கள் கூடினர். அப்போது அங்கு 15அடிக்கும் மேலாக உருவாக்கப்பட்டிருந்த இராமர், இலட்சுமணன், சீதை ஆகியோரின் உருவபொம்மைகளுக்கு தலைவர் மணியம்மையார் தீ வைத்தார். பொம்மைகள் கொழுந்துவிட்டு எரிய, தொண்டர்கள் பேரெழுச்சியோடு முழக்கங்களை எழுப்பினர். பிறகு, அனைவரும் கைது செய்யப்பட்டு, அன்று இரவே பிணையில் வெளிவிடப்பட்டனர். மணியம்மையார் உட்பட 14 பேர் மீது அரசு தொடுத்த வழக்கையும், 25.04.1977 அன்று, அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியா முழுவதும், பாஜக நடத்திய இராம ராஜ்ய  ரதயாத்திரை கூட, தமிழ்நாட்டில் பல இடங்களில் விரட்டியடிக்கப்பட்டதை நாம் அறிவோம். அதனால்தானோ என்னவோ, இப்போது அக்கட்சியினர், இராமர் யாத்திரையை விட்டுவிட்டு, தமிழ்நாட்டில், மட்டும் வேல்யாத்திரை நடத்த முயற்சிக்கின்றனர்!

களங்கள் தொடரும்…

– சுப.வீரபாண்டியன்

பயன்பட்ட நூல்கள்

1. பூங்குன்றன், கலி. கவிஞர் – ”இயக்க வரலாற்றில் இராமாயண எதிர்ப்பு” – பெரியார்  யமரியாதைப் பிரச்சார வெளியீடு, சென்னை – 7

2. ஆனைமுத்து, வே. (பதிப்பு.) – ”பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் – தொகுதி 6” – பெரியார் ஈ.வெ.இராமசாமி – நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளை, சென்னை – 5.

3. மங்கள முருசேன், ந.க, முனைவர்-பேராசிரியர் – “தொண்டறச் செம்மல் அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார்” – திராவிடர் கழக வெளியீடு, சென்னை – 7

4. அண்ணா, அறிஞர் – ”தீ பரவட்டும்” – பாரதி பதிப்பகம், சென்னை – 17.

5. ஓவியா – ”கருஞ்சட்டைப் பெண்கள்” – கருஞ்சட்டை பதிப்பகம், சென்னை – 24.

Disclaimer: எங்கள் செய்தி இணையதளத்தில் வரும் தொடர்கள் யாவும் பத்திரிகை டாட் காமிற்கே பிரத்தியேக, தனிப் பிரசுர உரிமை வழங்கப்பட்டுள்ளது . எனவே, பத்திரிகை டாட் காமின் முன் அனுமதியின்றி இதனை முழுவதுமாகவோ இல்லை இதில் வரும் சில பகுதிகளையோ உங்கள் பயன்பாட்டிற்கு உபயோகிக்க அனுமதியில்லை.