1935 ஆம் ஆண்டு –
மனோரமா பிலிம்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாராகிக் கொண்டிருந்த “சதி லீலாவதி” படத்தில் நடித்த நடிகர்கள் தங்குவதற்கென்று ஒரு வீடு பிடிக்கப்பட்டது. அவரவர் சம்பளத்திலிருந்து ஒரு தொகை பிடித்தம் செய்யப்பட்டு, அதில் அவர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டது.
எம்.கே.ராதா அப்படத்தின் கதாநாயகன். நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த பலர் அப்படத்தின் மூலம் புதுமுகங்களாக அறிமுகமானார்கள். எம்ஜிஆர், கலைவாணர் என்.எஸ். கே, பாலையா, எம்.வி.மணி ஆகியோர்தான் அந்தப் புதுமுக நடிகர்கள். நடிகர்கள் அனைவரும் நட்புடனும், ஒற்றுமையாகவும் இருந்துவந்த போதிலும், உணவு வேளையில் அவர்களுக்குள் ஒரு பிணக்கு ஏற்பட்டுவிட்டது. எம்.வி. மணி உள்ளிட்ட பார்ப்பன வகுப்பைச் சேர்ந்த நடிகர்கள் சமையலறைக்கு அருகில் அமர்ந்து உண்ண, கதாநாயகன் எம்.கே. ராதா உள்ளிட்ட மற்ற பார்ப்பனர் அல்லாதவர் அனைவரும், வெளியில், முற்றத்தில் அமர்ந்து உண்ணுமாறு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கலைவாணர் ‘இது ஏன் இந்தப் பேதம்?’ என்று கேட்டார். “நாம் எல்லோரும் நடிகர்கள். உணவுக்காக எல்லோருடைய சம்பளத்தத்திலிருந்தும் ஒரே அளவு தொகைதான் பிடித்தம் செய்யப்படுகிறது. அப்படியிருக்க, ஏன் தனித்தனியாக உணவு பரிமாறப்படுகிறது?” என்பது கலைவாணரின் கேள்வி. மற்ற பார்ப்பனர் அல்லாத நடிகர்களும் கலைவாணரை ஆதரித்தனர்.
இந்தச் சிக்கல் படத்தின் தயாரிப்பாளர் மருதாசலம் (செட்டியார்) அவர்களிடம் சென்றது. “என்னப்பா செய்யறது. அவுங்க மத்தவங்க கூட சேந்து சாப்பிட மாட்டாங்கங்கிறது எல்லாருக்குந் தெரியுந்தானே? அது அவுங்க பழக்கம்” என்றார் தயாரிப்பாளர். “அப்பிடின்னா, வாரத்துல ரெண்டு நாள் எங்களுக்கு அசைவம் வேணும். இது எங்க பழக்கம்” என்றார் கலைவாணர். “அது உங்க இஷ்டம். கிளப்ல (ஹோட்டல்) வாங்கிச் சாப்பிடுங்க” என்று பதில் வந்தது.
அடுத்தநாள் மதியம், முற்றத்தில், அசைவ உணவு கமகமத்தது. உள்ளே உண்டுகொண்டிருந்தவர்களால் தாங்க முடியவில்லை. “என்ன இப்பிடி மீன் எல்லாம் வாங்கிச் சாப்பிடுறீங்க?” என்று கேட்டார்கள். “கருவாடு கிடைக்கல. நாளைக்குப் பாருங்க வாசம் தூக்கும்” என்று விடை சொன்னார் கலைவாணர்.
சிக்கல் முற்றியது. தயாரிப்பாளரும், எம்.கே. ராதாவின் தந்தையான வசனகர்த்தா கந்தசாமி (முதலியார்) யும் அனைவரையும் கூட்டிப் பேசினர். ஒரு சமாதானம் ஏற்பட்டது. சைவ உணவு மட்டுமே சமைப்பது என்றும், அனைவரும், சமையலறையக்கு அருகில் அமர்ந்து ஒன்றாக உணவுண்ணுவது என்றும் முடிவாயிற்று.
சட்டென்று இந்த முடிவுக்கு எம்.வி. மணி உள்ளிட்ட நடிகர்கள் ஒத்து வந்ததற்கு ஒரு காரணம் இருந்தது. இதே போல ஒரு சிக்கல் தமிழ்நாட்டின் தென் மாவட்டத்தில், 10, 12 ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்டு. காந்தியார் வந்து தலையிட வேண்டிய அளவிற்குப் பெரிதாகி விட்டது. அதுதான் சேரன்மாதேவி குருகுலப் போராட்டம். அது போல இதுவும் ஆகிவிடக் கூடாது என்ற அச்சமும் அவர்களுக்கு இருந்தது.
அந்தக் குருகுலம் முதலில் கல்லிடைக்குறிச்சி என்னும் ஊரில்தான் தொடங்கப்பட்டது. ஆங்கிலேயர்களின் கல்வி, நமது பண்பாட்டைச் சொல்லித் தரவில்லை என்பதால், தேசியக் கல்வித் திட்டத்தைக் கொண்ட பள்ளிகள் உருவாக்கப்பட வேண்டும் என்னும் காந்தியாரின் விருப்பத்திற்கேற்ப அப்படிப் பள்ளிகள் தொடங்கப்படுவதற்குக் காங்கிரஸ் கட்சி தன் முழு ஆதரவைத் தெரிவித்திருந்தது.

வ.வே.சு அய்யர்
                 வ.வே.சு அய்யர்

அந்த அடிப்படையில், தேசபக்தன் இதழில் எழுதப்பட்ட ஒரு கட்டுரைக்காகத் தண்டிக்கப்பட்டு, ஒன்பது மாதங்கள் பெல்லாரிச் சிறையிலிருந்து பின் விடுதலையான வ.வே.சு அய்யர் அப்படி ஒரு பள்ளியை, அதாவது குருகுலத்தைத் தொடங்குவதற்கு முன்வந்தார். அதற்காக காங்கிரஸ் கட்சி 10000 ரூபாய் நிதி ஒதுக்கியது (அன்றைக்கு அது மிகப்பெரிய தொகை).
1922 டிசம்பர் 8 ஆம் நாள், கல்லிடைக்குறிச்சியில், பரத்வாஜ ஆசிரமத்தில், வ.வே.சு. அய்யர் நிர்வாகப் பொறுப்பில், அக்குருகுலம் உருவானது. அதற்கு, ‘தமிழ்க் குருகுல வித்தியாலயம்’ எனப் பெயரிடப்பட்டது.
பிறகு தேசிய உணர்வும், கொடை உள்ளமும் கொண்ட, உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ளவர்கள் வழங்கிய பெருநிதியில்., 30 ஏக்கர் நிலப்பரப்பில், சேரன்மாதேவி என்னும் ஊருக்கு மாற்றப்பட்டது. முதலில், மிகப்பெரிய நிதியைக் கொடுத்தவர், கானாடுகாத்தான் என்னும் ஊரைச் சேர்ந்த வை.சு.சண்முகம் (செட்டியார்) ஆவார். மலேசியாவில் வாழ்ந்த தமிழர்கள் பலரும் நிதி வழங்கியுள்ளனர்.
அவ்வளவு பெருந்தொகையில் சேரன்மாதேவியில் தொடங்கப்பட்ட அக்குருகுலத்தில், பார்ப்பன மாணவர்களுக்குத் தனியாகவும், மற்ற மாணவர்களுக்குத் தனியாகவும் உணவு வழங்கப்பட்டதை எதிர்த்து அங்கு தொடங்கிய போராட்டம் பல ஆண்டுகள் வரையில் நீண்டது. அப்போராட்டம் குறித்துத் தமிழில் சில குறிப்பிடத்தக்க நூல்கள் வெளிவந்துள்ளன.
முனைவர் பழ. அதியமான் எழுதியுள்ள “சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்” என்னும் நூல் ஒரு வரலாற்று ஆவணம் என்றே சொல்லலாம். முனைவர் புவியரசு, 1920களில் வெளிவந்த நவசக்தி போன்ற ஏடுகளை சான்றாகக் காட்டியதோடு அந்தப் பத்திரிகைச் செய்திகளையே புகைப்படங்களாகத் தன் நூலில் வெளியிட்டுள்ளார். அக்குருகுலத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய சுத்தானந்த பாரதி, தன் “வீர விளக்கு வ.வே.சு.அய்யர்” என்னும் நூலில் பல செய்திகளைக் குறித்துள்ளார். இவை தவிர வேறு சில நூல்களும், தலைவர்கள் சிலரின் வாழ்க்கை வரலாற்று நூல்களும் இப்போராட்டம் பற்றிப் பேசுகின்றன. இந்நூல்களிலிருந்து, அன்று நடைபெற்ற அந்தப் போராட்டம் பற்றிய செய்திகளின் தொகுப்பைச் சுருக்கமாக முதலில் பார்க்கலாம்.
காங்கிரஸ் கட்சியும், பணத்தை அள்ளிக்கொடுத்த செல்வர்களும், வ.வே.சு. அவர்கள் மீது பெரும் நம்பிக்கை வைத்திருந்தனர். அவருடைய நேர்மை, தியாக உணர்வு, தேசப்பற்று ஆகியவை அதற்கான காரணங்கள். எனினும் அவருடைய வைதீகச் சார்பு, குருகுலத்தை ஒரு தீராச் சிக்கலில் கொண்டுவந்து நிறுத்தி விட்டது.

பார்ப்பன மாணவர்கள் ஓரிடத்திலும், மற்ற மாணவர்கள் வேறிடத்திலும் அமர்ந்து உணவுண்ண வேண்டும் என்பதே அங்கு நடைமுறையாக இருந்தது. பிற்காலத்தில் தமிழகத்தின் முதமைச்சராக இருந்த ஓமந்தூர் ராமசாமி (ரெட்டியார்) மகன் சுந்தரம் மூலம் இந்தச் செய்தி வெளிவந்தது. பெரியார் இதுகுறித்துத் தன் கண்டனத்தை வெளியிட்டார். அப்போது காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவராக இருந்தவர் வரதராஜுலு (நாய்டு). அவரே இதனை உடனடியாகக் கையில் எடுத்து, நம் கட்சி (காங்கிரஸ்) இதனைக் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை முன்வைத்தார்.
சேரன்மாதேவி குருகுலம் போராட்டத்தைப் பொறுத்தமட்டில் வரதராஜுலு, வ.வே.சு இருவரும் எதிரெதிர் துருவங்களாக நின்றனர். ஆண்டுக்கணக்கில் அப்போராட்டம் நீண்டும், இறுதிவரையில் எந்த முடிவுக்கும் உறுதியாக வராமல், சென்று தேய்ந்து முடிந்தது என்றே சொல்ல வேண்டும்.

  1. குருகுலப் போராட்டத்தில் நாம் கவனிக்க வேண்டிய சிக்கல்கள் மூன்று.
  2. ஆங்கிலக் கல்வி முறைக்கும், தேசியக் கல்வி முறைக்குமான வேறுபாடு
    கல்வியில் காட்டப்பட்ட வேறுபாடு
  3. சேர்ந்துண்ணுதல் (சமபந்தி) என்பதில் ஏற்பட்ட போராட்டங்கள்

இவற்றுள் மூன்றாவது சிக்கலே மிகப் பெரிதாய் ஆனது என்றாலும், முதலிரு சிக்கல்களிலிருந்தே அது உருவானது என்பதால் அவை குறித்தும் நாம் அறிந்திடல் வேண்டும்.
இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பே கல்வி இருந்தது. ஆனால் அது எல்லோருக்குமான கல்வியாக இல்லை. தமிழ்நாட்டிலும் கூட, சங்க காலத்தில். கல்வியும். புலமையும் மிக்க பெண்களையும், ஆண்களையும் பார்க்க முடிந்தது. ஆனால் இடைக்காலத்தில் நிலை மாற்றமடைந்தது. மதம் சார்ந்தும், சாதி சார்ந்தும் கல்வி பயிற்றுவிக்கப்பட்டது.
இந்தியாவெங்கும், மொகலாயப் பேரரசின் கீழ் மதரஸா போன்ற இஸ்லாமியக் கல்விக்கூடங்களும், பார்ப்பனர்களுக்கான குருகுலங்களும் மட்டுமே இருந்தன. பார்ப்பனர்களை அடுத்திருந்த சமூகத்தினரையும் ஏற்றுக்கொண்ட பள்ளிகள் திண்ணைப் பள்ளிகள் என்று அழைக்கப்பட்டன.
ஆங்கிலேயர்கள் வருகைக்குப் பின்பே அனைவருக்குமான பொதுக்கல்வித் திட்டம் 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் கொண்டுவரப்பட்டது. அதனைக் கொண்டு வந்ததில் லார்ட் பெண்டிங், மெக்காலே இருவருக்கும் பெரும் பங்குண்டு. அதிலும் பல விவாதங்கள் நடைபெற்றன. எந்த மொழியில் பாடம் சொல்வது, எதனைப் பாடமாகச் சொல்வது போன்ற உரையாடல்கள் நடந்து முடிந்த பின்பே, 1836 இல் அக்கல்வித் திட்டம் நடைமுறைக்கு வந்தது.

தாமஸ் மன்றோ


இந்தியாவில் சிலருக்கு மட்டுமே கல்வி வழங்கப்படுகிறது என்பது குறித்தும், எல்லோருக்கும் அது பொதுவாக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் 1822 ஆம் ஆண்டே தாமஸ் மன்றோ இங்கிலாந்து அரசுக்கு எழுதியிருந்தார். அதனையொட்டி, 1823 ஆம் ஆண்டு கல்கத்தாவிலும். 1826 ஆம் ஆண்டு சென்னையிலும், பொதுநிலைக் கற்பித்தலுக்கான குழு (Committee of public Instruction) அமைக்கப்பட்டது என்றும், 1834 இல் இந்தியா வந்த மெக்காலே அதன் தலைவராக நியமிக்கப்பட்டார் என்றும் தன் ஆய்வு நூலில் கூறும் பேராசிரியர் இரா.சுப்பிரமணி, மெக்காலேயும், அவர் மைத்துனர் ட்ரைவாலும்தான் ஆங்கிலக் கல்விக்கு அடிகோலினர் எனக் குறிப்பிடுகின்றார். அதற்கு லார்ட் வில்லியம் பெண்டிங்கின் முழு ஆதரவும் இருந்தது என்றும் சொல்கின்றார்.
இந்திய மக்களுக்கு இந்திய மொழிகளிலேயே கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்று இங்கிலாந்து நாடாளுமன்றத்திலேயே ஜேம்ஸ் மில் போன்றவர்கள் எழுப்பிய குரல் எடுபடவில்லை. எனினும் ஆங்கிலேயர்கள் கொண்டுவந்த கல்விதான், சாதி, மதங்களைத் தாண்டி உலகப் பொதுச் செய்திகளையும், அறிவியல் செய்திகளையும் இங்கு கொண்டுவந்தது என்பது மறுக்க முடியாதது.
வ.வே.சு தொடங்கிய பள்ளியோ பெயரளவில் தமிழக குருகுலமாக இருந்தபோதிலும், இந்து வைதீகப் பண்புகளையே கொண்டிருந்தது. பள்ளி தொடங்கிய நாள் நிகழ்வுகளை,

காலை சுமார் நாலரை மணிக்கு, சன்னிதித் தெருவிலிருந்து பஜனை சகிதம் வித்தியாலயத்தின் தற்கால ஜாகாவில் பிரவேசம் நடந்தது. அதுகாலை ஆச்சாரியார், ஸ்ரீமான்கள் தி.ரா மஹாதேவ அய்யர் அவர்கள், தேசிய கலாசாலை உபாத்தியாயர்கள் கிருஷ்ணய்யர், கோமதி சங்கர தீக்ஷிதர்………ஆகியோர் பிரசன்னமாகி இருந்தனர். ஆச்சாரியார் அந்த சுப முஹூர்த்தத்தில் வித்தியாரம்பம் செய்து……

என்று அதியமான், தன் நூலில் குறிக்கின்றார். இவ்வரிகளே அப்பள்ளியின் தன்மையை நமக்குத் தெளிவாகக் காட்டுகின்றன.
எனினும், பள்ளியில் கற்பித்த கல்வியில் வேறுபாடு எதுவும் காட்டப்படவில்லை என்று வ.வே.சு. கூறுகின்றார். ஆனாலும் துவிஜர்களுக்கு மட்டுமே சில அப்பியாசங்களைச் சம்பிரதாயப்படி சொல்லிக் கொடுக்க முடியும் என்பது எல்லோரும் அறிந்ததுதானே என்றும் கூறுகின்றார்.
துவிஜர் என்றால் இருபிறப்பாளர் என்று பொருள். தூவி என்றால் இரண்டு. ஜா என்பது பிறப்பைக் குறிக்கும் சொல். அதனால்தான், கிரிஜா (மலையில் பிறந்தவள்), வனஜா (வனத்தில் அதாவது காட்டில் பிறந்தவள்), ஜலஜா (நீரில் பிறந்தவள்) போன்ற பெயர்கள் சூட்டப்படுகின்றன. பெண்ணிடமிருந்து பிறந்த தீட்டை, ஓர் ஆவணி அவிட்டத்தில் பூணூல் போட்டு நீக்கிவிட்டு, மறுபிறப்பு அடைவது என்பதே ‘துவிஜர்’ என்னும் சொல்லின் பின்னால் உள்ள வைதீகம். இச்சடங்கு சூத்திரர், பஞ்சமர்களுக்குக் கூடாது என்பதே மனுநீதி.

வ.வே.சு. வின் உழைப்பு, புலமை, தியாகம் ஆகியனவற்றை வரதராஜுலு, பெரியார், வை.சு.சண்முகம். சொ. முருகப்பா ஆகியோர் கூட மறுக்கவில்லை என்றாலும், இந்த நடைமுறைகளை அவர்களால் ஏற்க முடியவில்லை.
இவற்றை எல்லாம் தாண்டியும், ‘சேர்ந்துண்ணல்’ சிக்கல் அங்கு பெரிதாகிவிட்டது. காங்கிரஸ் கட்சிக் குழு அங்கு சென்று நேரில் பார்வையிட்ட பின் தம் எதிர்ப்பை வெளியிடுகின்றது. இச்சிக்கல் மேலும் வளர்ந்து, 1925 ஏப்ரல், மே மாதங்களில் காங்கிரஸ் கட்சியை உடைக்கும் அளவுக்குப் போய்விட்டது. மன்னார்குடியில் நடைபெற்ற காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் இது ஒன்றே விவாதிக்கப்படும் அளவிற்குரிய பிரச்சினை ஆகிவிட்டது.

தன்னளவில் தீர்த்துக் கொள்ள இயலாத நிலை வந்ததால், வைக்கம் போராட்டத்தில் தீர்வு காண்பதற்காகத் திருவிதாங்கூர் வந்த காந்தியாரிடம் இது குறித்து முறையிடப்பட்டது. காந்தியார் ஒரு தீர்வைக் சொல்லிவிட்டுப் புறப்பட்டு விட்டார். சமையலர்கள் பார்ப்பனர்களாக இருக்கட்டும். ஆனால் அனைவரும் சேர்ந்துண்ண ஏற்பாடுகள் நடக்கட்டும் என்பதே அவர் தந்த தீர்வு.
அதனையும் பலர் ஏற்கவில்லை. ஒரு குருகுலத்தின் சிக்கலாகத் தொடங்கி, காங்கிரஸ் கட்சியின் சிக்கலாக வளர்ந்து, இறுதியில் தமிழ்நாட்டின் சமூகச் சிக்கலாக அது உருவெடுத்தது. ஒரு விதத்தில் சமத்துவம் வேண்டும் என்ற எண்ணத்தை மக்களிடம் ஏற்படுத்திய விழிப்புணர்வு நிலையாகவும் அதனைக் கொள்ளலாம்.
காங்கிரஸ் கட்சியிலும், வெளியிலும் இது குறித்துப் பல்வேறு நிலைப்பாடுகள் எழுந்தன. “பிராமணர்கள்தான் சமைக்க வேண்டும்” என்பது போன்ற நிபந்தனையை வரதராஜுலுவும், பெரியாரும் அவர்களைச் சார்ந்தோரும் ஏற்கவில்லை. காந்தியார் சொன்ன சமாதானத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது திரு.வி.க., மருத்துவர் டி.எஸ்.எஸ். ராஜன் போன்றோரின் கருத்தாக இருந்தது.
தனித்தனியாக உணவு பரிமாறப்படுவதைத் தன்னால் ஏற்க இயலவில்லை என்று கூறிய ராஜாஜி, பெரியார், வரதராஜுலு ஆகியோரின் நிலைப்பாடும் தனக்குப் பிடிக்கவில்லை என்றார். “தான் சமபந்தி போஜனத்தை ஆட்சேபிக்கவில்லை, அதைக் காங்கிரஸ் கட்சியின் வேலையாக்குவதைத்தான் ஆட்சேபிக்கிறேன்” என்றும் ராஜாஜி கூறினார்.
இதில் வ.வே.சு.வை விடவும் கடுமையான நிலைப்பாட்டை எடுத்தவர் எம்.கே.ஆச்சார்யாதான். “சமபந்தி போஜனம் என்பதை மனத்தளவில் கூட என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. ஒரு பிராமணன் இன்னொருவருடன் சேர்ந்து போஜனம் செய்ததைக் கேள்விப்பட்டால் கூட என்னால் பத்து நாள்களுக்குச் சாப்பிட முடியாது” என்று அவர் பேசினார்.
எந்தத் தீர்வும் ஏற்படாத சூழலில், வ.வே.சு. குருகுலப் பொறுப்புகள் அனைத்திலிருந்தும் தான் விலகிக் கொள்வதாக அறிவித்தார். அத்தோடு நிற்காமல், அனைத்து நிதி, நிர்வாகப் பொறுப்புகளையும் மஹாதேவ அய்யரிடம் ஒப்படைத்து விடுவதாகவும் அறிவித்தார். அந்த அறிவிப்பும் பெரும் புயலைக் கிளப்பியது.
“நாங்கள் வ.வே.சு அய்யரை நம்பித்த்தான் பணம், நிலம் எல்லாம் கொடுத்தோம். அவர் பொறுப்பிலிருந்து விலகுவதானால், காங்கிரசிடமோ, எங்களிடமோ பொறுப்பை ஒப்படைத்திருக்க வேண்டும். அதனை விட்டுவிட்டு அவர் விருப்பத்திற்கு ஒருவரிடம் நிதியையும், நிர்வாகத்தையும் கொடுப்பது முறையன்று.இது அவருடைய தனிச் சொத்தில்லை” என்று பணம் கொடுத்த வை.சு.சண்முகம் முதல் பலரும் கொதித்தெழுந்தனர்.
இந்தக் கொதிநிலையான சூழலில், யாரும் எதிர்பாராத ஒரு துயரம் நடந்துவிட்டது. 1925 ஜுன் 3 ஆம் நாள் மாணவர்களுடன் பாபநாசம் பகுதிக்கு, வ.வே.சு.வும் தன் பிள்ளைகளோடு சுற்றலா சென்றிருந்தார். அவருடைய மகள் அருவியில் வழுக்கி விழுந்து ஆற்றுடன் அடித்துச் செல்லப்பட, அவரைக் காப்பாற்றச் சென்ற வ.வே.சு.வும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு விட்டார். இருவரின் உடல்களையும் சில நாள்களுக்குப் பின் கண்டெடுத்தனர். 44 வயதில் அவருக்கு ஏற்பட்ட மரணம், குருகுலத்திற்கு எதிரான போராட்டத்தின் வேகத்தைக் குறைத்து விட்டது.
இறுதிவரையில் எந்தத் தீர்வும் ஏற்படாமலேயே, குருகுலச் சிக்கல் மந்த நிலையை அடைந்துவிட்டது. சில ஆண்டுகளுக்குப் பின் நிர்வாகப் பொறுப்பு, காந்தியாரால் டி.எஸ்.எஸ். ராஜனுக்கும், பிறகு ஹரிஜன சேவா சங்கத்திற்கும் மாற்றிக் கொடுக்கப்பட்டது. ஆனால் நிர்வாகத்திலிருந்து மட்டும் விலகிய மகாதேவ அய்யர், நிதி எதனையும் கொடுக்க மறுத்துவிட்டார்.
இதுகுறித்த செய்திகளை டி.எஸ்.எஸ்.ராஜன் தன் வாழ்க்கைக் வரலாற்று நூலில் (நினைவலைகள்) விரிவாகக் குறிப்பிட்டிருப்பார் என்ற நம்பிக்கையுடன் அந்நூலைப் புரட்டியபோது, அவர் எதனையுமே பதிவு செய்யாமல் விட்டிருக்கிறார் என்பது வியப்பாக இருந்தது. சரி, மகாதேவ அய்யரைக் காப்பாற்றும் எண்ணமோ என்னவோ!
இறுதியில், அந்தக் குருகுலம் ராமகிருஷ்ண மடத்துடன் இணைக்கப்பட்டு விட்டதாக அதியமான் கூறுகின்றார்.
உணவைப் பகிர்ந்து உண்ணும் பண்பாடு ஒருபுறம் இருக்கட்டும், அவரவர் உணவை ஒரே இடத்தில் சேர்ந்து உண்பதற்கும் கூட மனமில்லாதவர்கள் என்றோ நம் நாட்டில் வாழ்ந்திருக்கின்றனர் என்று கருதிவிடக் கூடாது. இன்றும் அந்த எண்ணம் உடையவர்களாகவே ஒரு குறிப்பிட்ட சமூகத்த்தினர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் – வெளியில் காட்டிக் கொள்ளாமல்!
(களங்கள் தொடரும்)
அன்புடன்
சுப.வீரபாண்டியன்
பயன்பட்ட நூல்கள்
==================
1. அதியமான், பழ. “சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும், திராவிட இயக்கத்தின் எழுச்சியும்”, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில்
2. புவியரசு, அ. – “சேரன்மாதேவி-வைக்கம்-தேவதாசி ஒழிப்புப் போராட்டங்கள்” – காவ்யா பதிப்பகம், சென்னை-24.
3. ஆனைமுத்து, வே (தொ.ஆ) – “பெரியார் ஈ.வெ,ரா. சிந்தனைகள் – தொகுதி 6(1) – பெரியார் ஈ.வெ .இராமசாமி நாகம்மை ஆராய்ச்சி அறக்கட்டளை, சென்னை 5
4. சுப்பிரமணி, இரா. – “மெக்காலே” – சாரல் பதிப்பகம், சென்னை-15
5. நாராயணன், அறந்தை – “திராவிடம் பாடிய திரைப்படங்கள்” – என்.சி.பி.ஹெச். சென்னை-98
6. அன்புக்கொடி நல்லதம்பி, பேராசிரியர் – “சமூக விஞ்ஞானி கலைவாணர்” – மலர் பதிப்பகம், சென்னை-101
7. ராஜன், டாக்டர், தி.சே.சௌ., “நினைவு அலைகள்” -சந்தியா பதிப்பகம், சென்னை-83.
Disclaimer: எங்கள் செய்தி இணையதளத்தில் வரும் தொடர்கள் யாவும் பத்திரிகை டாட் காமிற்கே பிரத்தியேக, தனிப் பிரசுர உரிமை வழங்கப்பட்டுள்ளது . எனவே, பத்திரிகை டாட் காமின் முன் அனுமதியின்றி இதனை முழுவதுமாகவோ இல்லை இதில் வரும் சில பகுதிகளையோ உங்கள் பயன்பாட்டிற்கு உபயோகிக்க அனுமதியில்லை.