சுபவீ எழுதும் போராட்டங்கள் – விவசாயிகள் போராட்டம்

எல்லோருடைய வாழ்க்கையிலும் போராட்டங்கள் இருந்தே தீரும். ஆனால், வாழ்க்கையே போராட்டமாக அமைந்து போனது நம் நாட்டு விவசாயிகளுக்குத்தான் என்று சொல்ல வேண்டும். ஊருக்கெல்லாம் உணவை விளைவித்துக் கொடுக்கும் அவர்கள், தங்களின் உணவுக்காகவும், உரிமைகளுக்காகவும் காலகாலமாகப் போராடிக் கொண்டே இருக்கிறார்கள். 1940களில் தொடங்கி, இன்று வரையில் நடைபெற்றுக் கொண்டே இருக்கும் அவர்களின் போராட்டங்களை, அவற்றின் மூலம் அவர்கள் பெற்ற வெற்றிகளை, அவர்கள் எதிர்கொண்ட இழப்புகளை வரலாற்றில் நாம் பதிவு செய்தே ஆக வேண்டும்.

நாராயணசாமி நாயுடு

ஆனால், அவை சரியான முறையிலும், விரிவான முறையிலும் இன்று வரையில் பதிவு செய்யப்படவில்லை என்பது ஒரு மிகப்பெரிய அவலம். 60, 70 ஆண்டுகளுக்கு முன்னர் கீழத்தஞ்சைப் பகுதியில் நடைபெற்ற உழவர்களின் போராட்டத்தைப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்கள் ஓரளவுக்குப் பதிவு செய்துள்ளனர். அந்த வகையில் என்.இராமகிருஷ்ணன் எழுதியுள்ள, “தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும்”, ஜி.இராமகிருஷ்ணன் எழுதியுள்ள “கீழத்தஞ்சை – விவசாயிகள் இயக்கமும் தலித் மக்கள் உரிமைகளும்” ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கவை.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

எனினும் 1950களுக்குப் பிறகு, நாராயணசாமி நாயுடு தலைமையில் நடைபெற்ற மிக வீரியமான போராட்டங்கள் குறித்து, எந்தவொரு நூலும் எழுதப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. அப்போராட்டங்களில் கலந்து கொண்ட ஓரிருவரைத் தொடர்பு கொண்டும், நாளேடுகளிலும், முகநூலிலும் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் எழுதியுள்ள கட்டுரைகளைப் படித்தும் மட்டுமே செய்திகளை அறிந்து கொள்ள முடிகிறது. கே.எஸ்.இராதாகிருஷ்ணனின் எழுத்துகள் புள்ளி விவரங்களுடன் கூடிய ஆவணங்களாகவே அமைந்துள்ளன. அவற்றின் அடிப்படையில்தான், இக்கட்டுரையின் பெரும்பகுதி அமைக்கப்பட்டுள்ளது. மிகவிரைவில் இப்போராட்டம் குறித்த மிகப் பெரிய நூல் ஒன்றினை அவரே எழுதி வெளியிட இருக்கும் செய்தியையும் அவர் தெரிவித்தார்.

காமராஜர் முதலமைச்சராக இருந்த காலத்தில், விவசாயத்திற்கு மின்சாரம் கேட்டு, விவசாயிகள் போராடத் தொடங்கினர். அப்போது ஒவ்வொரு நாளும் 16 மணிநேரம் விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது. காமராஜர் ஆட்சியில் தொழில்துறை வளர்ச்சியில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்ட போது, அது விவசாயிகளைப் பாதித்தது. எப்போதும் எந்தவொரு நன்மையிலும் ஒரு தீய பக்க விளைவு இருப்பதும், எந்தவொரு தீமையிலும் ஒரு நல்ல பக்க விளைவு இருப்பதும் இயற்கைதான். அவ்வாறே, தொழில்துறை வளர்ச்சிக்காக மின்சாரம் கூடுதலாகத் தேவைப்பட்ட காரணத்தால், விவசாயத்திற்கு அளிக்கப்பட்டு வந்த மின்சாரத்தின் நேரத்தை 16 மணிநேரத்திலிருந்து 4 மணி நேரமாக அரசு குறைத்தது. 1957ஆம் ஆண்டு, இதனை எதிர்த்து, விவசாயிகளை ஒன்று திரட்டி, நாராயணசாமி நாயுடு ஒரு போராட்டத்தை நடத்தினார். இதுவே அவர் நடத்திய முதல் போராட்டமாக இருக்கக் கூடும்.

எதிர்பார்த்ததைவிட மிகுந்த ஒற்றுமையுடன் விவசாயிகள் போராடத் தொடங்கினர். எனவே, அரசு அவர்களின் கோரிக்கையை ஏற்று, மீண்டும் 16 மணிநேரம் மின்சாரம் வழங்க இசைந்தது. இந்த வெற்றி, போராட்டத்தின் மீதான நம்பிக்கையையும், நாராயணசாமி நாயுடு மீதான நம்பிக்கையையும் விவசாயிகளிடம் உருவாக்கியது.

1960களிலும், விவசாயிகளின் போராட்டம் அங்கங்கு நடைபெற்றன. ஒரு பெரிய விவசாய சங்கம் எதுவும் உருவாக்கப்படவில்லை என்றாலும், மிகப்பெரிய போராட்டங்கள் அந்தக் காலக்கட்டத்தில் நடந்துவிடவில்லை என்றாலும், போராட்டங்களின் மூலம் சில நன்மைகளை விவசாயிகள் பெற்றுக் கொண்டிருந்தனர்.

1970களுக்குப் பின்புதான், அது ஒரு மிகப்பெரிய இயக்கமாக வளர்ந்தது. அதற்கு, 1970ஆம் ஆண்டு விவசாகளின் மீது நடைபெற்ற துப்பாக்கிச்சூடு ஒரு காரணம் என்று கூறலாம். ஆம், அப்போது தி.மு.கழக ஆட்சிதான் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அன்று மட்டுமின்றி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் முதலமைச்சர்களாக இருந்த காலங்களிலும் விவசாயிகளின் மீது துப்பாக்கிச்சூடுகள் நடைபெற்றுள்ளன. அனைத்துத் துப்பாக்கிச்சூடுகளிலுமாகச் சேர்ந்து 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது ஒரு கொடுஞ்செய்தியே ஆகும். 1970ஆம் ஆண்டு மே மாதம், கலைஞர் முதலமைச்சராக இருந்த போது, அரசின் நிதி நெருக்கடியை ஓரளவு சமாளிப்பதற்காக மின் கட்டணத்தில் ஒரு யூனிட்டுக்கு 8 காசுகள் (பைசா) கட்டணம் என்றிருந்ததை 10 காசுகளாக அரசு உயர்த்தியது. இதனை எதிர்த்தே அன்று விவசாயிகள் போராடத் தொடங்கினர். குறிப்பாக, கோவை மாவட்ட விவசாயிகள், புதுமையான ‘மாட்டுவண்டிப் போராட்டம்’ ஒன்றை நடத்தினர்.

அதற்கு முன்பு, தமிழகம் கண்டிராத புதிய வடிவிலான போராட்டம் அது. கோவையின் சுற்றுப்புறத்தில் வாழும் ஆயிரக்கணக்கான விவசாயிகள், தங்களின் மாட்டு வண்டிகளோடு கோவை நகருக்கு வந்து சேர்ந்தனர். கோவையின் முக்கியமான தெருக்கள், பேருந்து நிலையங்கள், கடைவீதிகள் என எல்லா இடங்களிலும் தங்கள் மாட்டு வண்டிகளைக் குறுக்கும் நெடுக்குமாக நிறுத்தி வைத்தனர். சில மணிநேரங்களில் கோவை மாநகரமே நிலைகுத்திப் போயிற்று. எந்தப் போக்குவரத்தும் இல்லை. இறுதியாக, இந்தப் போராட்டம் விவசாயிகளுக்குப் பாதி வெற்றியைப் பெற்றுத் தந்தது. அதே வருடம், ஒரு யூனிட்டுக்கு, 10 காசுகள் மின்கட்டணம் என்பது ஒன்பது காசுகள் என்று குறைக்கப்பட்டது

ஆனால், மறுபடியும் 1972ஆம் ஆண்டு ஜூன் மாதம் மின் கட்டணம் 12 காசுகளாக உயர்த்தப்பட்டு, கோவை மாவட்ட விவசாய சங்கம் 1970ல் நடைபெற்றதை விடபெரிய மாட்டுவண்டிப் போராட்டம் ஒன்றை நடத்தினர். காவல்துறையினர் பேச்சுவார்த்தைகள் நடத்தியும், அச்சுறுத்திப் பார்த்தும் எந்தப்பயனும் ஏற்படவில்லை. இறுதியாகப் பல இடங்களில் தடியடியும், ஓரிடத்தில் துப்பாக்கிச்சூடும் நடைபெற்றன. அந்தத் துப்பாக்கிச்சூட்டில், அன்று (09.05.1972) மூவர் பலியாயினர். மின் கட்டணம் 11 காசுகளாகக் குறைக்கப்பட்ட பிறகு, மாட்டுவண்டிப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது என்றாலும் தமிழக விவசாயிகள் சங்கம் உருப்பெறுவதற்கு அது அடிப்படைக் காரணமாக இருந்தது.

மேற்கில் மட்டுமின்றி, தமிழகத்தின் தெற்குப்பகுதியிலும் விவசாயிகளிடம் ஒர் எழுச்சி ஏற்பட்டது. அதுவரையில் கோவை மாவட்ட விவசாயிகள் சங்கமாக மட்டுமே இருந்த நிலையில், அனைவரும் ஒருங்கிணைந்து, 1973ஆம் ஆண்டு, நவம்பர் 13ஆம் நாள், ‘தமிழக விவசாயிகள் சங்கம்’ என்னும் அமைப்பை உருவாக்கினர். அந்த அமைப்புக்கு வேலப்பன் என்பவர் தலைவராகவும், நாராயணசாமி நாயுடு பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவ்வமைப்பிற்குத் தமிழ்நாடு முழுவதும் கிளைகள் ஏற்படுத்தப்பட்டன.

எம்.ஜி.ஆர். முதலமைச்சரான பிறகும் விவசாயிகளின் போராட்டம் வலுவடைந்தது. இம்முறை கோவைப் பகுதியில் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் மின்கட்டணச் சலுகை கோரியும், இலவச மின்சாரம் கேட்டும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் போராட்டம் நடத்தியது. அந்தச் சூழலில் தமிழக வரலாற்றில் அதுவரை நடைபெற்றிராத ஒரு பெரிய நிகழ்வும் நடந்தது. முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியும் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரும், கோவை வையம்பாளையத்தில் உள்ள நாராயணசாமி நாயுடுவின் வீட்டிற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். வேறு எந்த போராட்டத்திலும் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். இப்படிக் கீழிறங்கிச் சென்று சமாதானம் பேசியதில்லை. முதலும் கடைசியுமான நிகழ்வு அதுவாகத்தான் இருக்க முடியும். ஆனால், எம்.ஜி.ஆர். வந்து சென்ற அடுத்த நாளே திருச்சியில் விவசாயிகளின் மீது கடுமையான தடியடி நடத்தப்பட்டது. தெருவெங்கும் இரத்தம் படிந்தது.

அதற்குச் சில நாள்களுக்குப் பிறகு சென்னை வந்த நாராயணசாமி நாயுடு, கோபாலபுரம் சென்று தலைவர் கலைஞரைச் சந்தித்தார். அந்த சந்திப்பிற்கு கே.எஸ்.இராதாகிருஷ்ணன் ஏற்பாடு செய்திருந்தார். அது குறித்து கல்கி ஏட்டிற்குப் பேட்டி அளித்த நாராயணசாமி நாயுடு, ”எந்த உறுதியை அளித்தாலும், அதனை கலைஞர் நிறைவேற்றுவார் என்னும் நம்பிக்கையில் அவரை நான் சென்று சந்தித்தேன்” என்று கூறியிருந்தார்.

இதற்குப் பிறகு, விவசாயிகள் சங்கத்திற்கும், தமிழக அரசுக்கும் இடையிலான உறவு முற்றிலும் சீரழிந்துவிட்டது. எம்.ஜி.ஆர் அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்க மறுத்துவிட்டது. அதன் விளைவாக, 1980 டிசம்பர் 31ஆம் தேதி, தமிழ்நாடு முழுவதும் கடை அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. தென் மாவட்டங்களில் அது மிகுந்த வரவேற்பைப் பெற்றது. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. பல இடங்களில் சாலைமறியல் நடைபெற்றது. அன்று காலை 11 மணியளவில் திருவேங்கடம் என்னும் ஊரில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காவல்துறையினர் கடுமையான தடியடியை நடத்தினார்கள். அந்தப் பகுதியில் இருந்த பல கிராமங்களில் உட்புகுந்து வீடுகளைச் சேதமாக்கினர். மாலை 4 மணி அளவில் கோவில்பட்டி அருகில் உள்ள குருஞ்சாக்குளம் என்னும் சிற்றூருக்குள் காவல்துறை நுழைந்தபோது பெரும் பதற்றம் ஏற்பட்டது. அந்த ஊரைச் சேர்ந்த, விவசாயச் சங்கத் தலைவர்களில் ஒருவரான சாத்துரப்ப நாயக்கர், ‘அமைதியாக இருக்கும் எங்கள் கிராமத்திற்குள் நுழைந்து ஏன் பதற்றத்தை உருவாக்குகிறீர்கள்’ என்று காவல்துறை அதிகாரியைப் பார்த்துக் கேட்டார்.

யாரும் எதிர்பாராத வகையில் அந்த இடத்திலேயே மந்திரம் என்னும் காவல்துறை அதிகாரி, சாத்தூரப்ப நாயக்கரின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியால் சுட, அவர் சிதறிப் பிணமாகக் கீழே விழுந்தார். தடுக்கப்போன ரவீந்திரன் என்னும் இளைஞன் உட்பட அவ்வூர் மக்கள் பலரைக் காவல்துறை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது. சாலை முழுவதும் பிணங்கள் சிதறிக் கிடந்தன. அடுத்தநாள் அவ்வூரில் ஆங்கிலப் புத்தாண்டு(1981), பிண வாடையுடன் விடிந்தது. எங்கு நோக்கினும் அழுகை, அலறல், ஒப்பாரி. திரைப்படங்களில் விவசாயியாக நடித்த எம்.ஜி.ஆர். ஆட்சியில் விவசாயிகள் இப்படிச் சுட்டுக் கொல்லப்பட்டனர். பிறகு ஒரு சூழலில், அந்தக் காவல்துறை அதிகாரி, மக்களால் அடித்தே கொல்லப்பட்டார்.

அதற்குப் பிறகு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் 1980, 84 தேர்தல்களிலும் போட்டியிட்டது. சில இடங்களில் தங்களுக்கு ஆதரவாக இருந்த பொதுவுடைமைக் கட்சி வேட்பாளர் அழகர்சாமி போன்றவர்களை ஆதரித்தது. அவ்வாறு அழகர்சாமியை ஆதரித்து, ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு வந்த ஓர் இரவில்தான் 1984ஆம் ஆண்டு, நாராயணசாமி நாயுடு மாரடைப்பால் இறந்து போனார்.

அவருக்குப் பின்னும், விவசாயிகள் சங்கம் தொடர்ந்து செயல்பட்டு வந்தது. அதன் விளைவாக, எம்.ஜி.ஆர். ஆட்சியின் பிற்காலத்தில் சிறு,குறு விவசாயிகளுக்கு இலவச மின்சாரமும் அளிக்கப்பட்டது. அது விவசாயிகள் சங்கப் போராட்டத்திற்கு கிடைத்த ஒரு வெற்றியே என்றாலும் அனைவருக்குமான இலவச மின்சாரத்தை சங்கம் கோரியது. அந்தக் கோரிக்கை எம்.ஜி.ஆர். காலத்தில் ஏற்கப்படவில்லை. 1989ஆம் ஆண்டு, மீண்டும் ஆட்சிக்கு வந்த தலைவர் கலைஞர், அந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு, அனைவருக்குமான இலவச மின்சாரத்தை வழங்கினார். விவசாயிகள் வாழ்வில் கிடைத்த பெரும் வெளிச்சம் என்று அதனைக் கூறலாம். கலைஞரின் ஆட்சிக் காலத்தில், விவசாயிகளுக்குக் கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க பலன் என்றும் அதனைக் கூறலாம்.

எனினும், விவசாயிகளின் போராட்டத்திற்கு மறுபடியும் ஒரு தேவை ஏற்பட்டது. 1991இல், ஜெயலலிதா முதலமைச்சரான பிறகு, அவருடைய அரசு, இலவச மின்சாரத் திட்டத்தை ரத்து செய்துவிட்டது. அதனை எதிர்த்துத் தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் போராடினர். அவர்களுக்கு ஆதரவாகத் தமிழகம் எங்கும் தி.மு.கழகம் போராட்டத்தில் இறங்கியது. போராட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான டிராக்டர்களைக் காவல்துறை கையகப்படுத்தியது. கோவில்பட்டி பகுதியில் துப்பாக்கிச்சூடும் நடைபெற்றது. அந்த இடத்திலேயே 2 பேர் பலியாயினர்.

இந்தச் சிக்கல் இந்திய நாடாளுமன்றம் வரையில் எதிரொலித்தது. தி.மு.க.வின் சார்பில் வைகோ அங்கு உரையாற்றினார். நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. அவ்வழக்கில் நீதிபதி கே.எஸ்.பக்தவச்சலம், துப்பாக்கிச் சூட்டில் இறந்துபோன, இருதய ஜோசப் ரெட்டியார் உடலை மறுபடியும் தோண்டி எடுத்து, பிணக்கூறாய்வு(பிரேதப் பரிசோதனை) செய்ய உத்தரவிட்டார். வேறு வழியின்றி நீதிபதி சுப்பிரமணியன் தலைமையில் விசாரணை நடத்த 07.04.1993இல் தமிழக அரசும் ஆணையிட்டது.

அதன்பிறகு, விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகளை வழங்க இருப்பதாக 110ஆவது விதியின் கீழ் ஜெயலலிதா சட்டமன்றத்தில் உறுதியளித்தார். அப்போது சட்டமன்றத்தில் சாகுபடிப் பரப்பளவைக் கூட்டுதல், விவசாயத்தில் புதிய உத்திகளைக் கையாளுதல், விதைகள் உரங்கள் ஆகியன உரிய நேரத்தில் கிடைக்க ஏற்பாடு செய்தல், தேவையான பயிர்க் கடன் அளித்தல், பாசன வசதி அளித்தல், மானிய விலையில் இயந்திரங்களை வழங்குதல் என்று பல்வேறு நடவடிக்கைகளைத் தனது அரசு எடுக்கும் என்று உறுதி அளித்தார். அவை வெறும் உறுதிமொழிகளாகவே நின்றன.

2011ஆம் ஆண்டு, கோவைப் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையின் போது, வையம்பாளையத்தில் உள்ள நாராயணசாமி நினைவிடத்தில் மணிமண்டபம் கட்டப்படும் என்றும், இறந்து போன 40 விவசாயிகளின் குடும்பங்களுக்கு 2 கோடி ரூபாய் அளவில் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

அரை நூற்றாண்டுக்கும் மேலாக நடைபெற்று வரும் விவசாயிகள் சங்கப் போராட்டத்தில் பங்கேற்ற முக்கியமானவர்களின் பெயர்களைக் கூட நம்மால் முழுமையாகப் பட்டியலிட இயலவில்லை. இன்று உழவர் உழைப்பாளர் கட்சியை நடத்தி வரும் செல்லமுத்து அன்று இளைஞராகவும், சங்கத்திற்கான சிறந்த பேச்சாளராகவும் இருந்திருக்கிறார். கோவை சுப்பிரமணியம் போன்றவர்கள் மாட்டு வண்டிப் போராட்டத்தை நினைவு கூர்கின்றனர்.

கிருஷ்ணசாமி கவுண்டர், முத்துசாமி கவுண்டர், மதுராந்தகம் முத்துமல்லா ரெட்டியார், வி.கே.இராமசாமி, மயிலானந்தம், ஆதிமூலம், வீரய்யன், சொ. .அழகிரிசாமி, விருதுநகர் பெருமாள் சாமி, யூ.ஜி.நாராயணசாமி, தென்மாவட்டங்களைச் சேர்ந்த சுப்பிரமணிய நாடார், பால்பாண்டியன், திருத்தணி சின்னி கிருஷ்ணய்யா ஆகியோர் போராட்டங்களில் பங்கு பெற்றுச் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர் என்பதை அறிய முடிகிறது. இச்சங்கத்தினால் உருவாக்கப்பட்ட யூ.ஜி.நாராயணசாமி போன்றவர்களே பிற்காலத்தில் பட்டாசுத் தொழிலாளர்களுக்காகச் சங்கங்களை உருவாக்கிப் போராடியுள்ளனர்.

இன்றும் விவசாயிகளின் போராட்டங்கள் ஓய்ந்துவிடவில்லை என்பதை நாம் அறிவோம். சென்ற ஆண்டுகூட இந்தியாவின் தலைநகரம் டெல்லியில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் நடத்திய விதவிதமான போராட்டங்களை நாம் கண்டோம். நேரு காலம் தொடங்கி, மோடி காலம் வரையிலும் இந்திய விவசாயிகள் போராட்டக் களத்திலேயே உள்ளனர். இப்போது மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் 3 விவசாயச் சட்டங்களை எதிர்த்து, நாடு முழுவதும், குறிப்பாக பஞ்சாப் போன்ற மாநிலங்களில் விவசாயிகள் கடும் போராட்டம் நடத்தி வருவதை நாம் பார்க்கிறோம்.

விவசாயம் என்பதே ஒரு போராட்டமாக இருக்கும் வரையில் விவசாயிகளின் போராட்டமும் இருந்து கொண்டுதானே இருக்க முடியும்!

களங்கள் தொடரும்…

– சுப.வீரபாண்டியன்

Disclaimer: எங்கள் செய்தி இணையதளத்தில் வரும் தொடர்கள் யாவும் பத்திரிகை டாட் காமிற்கே பிரத்தியேக, தனிப் பிரசுர உரிமை வழங்கப்பட்டுள்ளது . எனவே, பத்திரிகை டாட் காமின் முன் அனுமதியின்றி இதனை முழுவதுமாகவோ இல்லை இதில் வரும் சில பகுதிகளையோ உங்கள் பயன்பாட்டிற்கு உபயோகிக்க அனுமதியில்லை.