எல்லாப் போராட்டங்களும், நியாயமான காரணத்தின் அடிப்படையில் நடக்க வேண்டும் என்பதே சரியானது. ஆனால், சில நேரங்களில், நியாயமும் உண்மையுமற்ற போராட்டங்களும் நம் நாட்டில் நடந்துள்ளன. அப்போராட்டங்கள் மிகப்பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளன. அவ்வாறு நடைபெற்ற போராட்டங்களுள் ஒன்றுதான், 1991ஆம் ஆண்டு, மே மாத இறுதியில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட போது, திமுகவிற்கு எதிராக இங்கு நடைபெற்ற போராட்டம்.

பொதுவாகவே, ஒரு தலைவர் படுகொலை செய்யப்பட்டால், மக்களிடம் ஒரு கோபத் தீ எழுவது இயற்கை. அதன் காரணமாக வன்முறைகள் வெடிப்பதுண்டு. இந்தியா விடுதலை பெற்ற காலத்திலிருந்தே இப்படிப்பட்ட போராட்டங்களையும், வன்முறைகளையும் நாடு சந்தித்துள்ளது. 1948 ஜனவரி 30 அன்று, காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்டபோது நாடு முழுவதும் கலவரங்கள் எழுந்தன. மும்பை போன்ற பகுதிகளில் இஸ்லாமியர்களின் வீடுகளும், கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டன. காந்தியாரைக் கொலை செய்தது ஓர் இஸ்லாமியராகத்தான் இருக்கக் கூடும் என்ற கருத்தில் அந்த வன்முறைகள் அங்கே எழுந்தன.

கொலை செய்தவர் இஸ்லாமியர் இல்லை என்ற உண்மை தெரிந்த பிறகு, யார் கொலை செய்தாரோ அவர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் மீது வன்முறைத் தாக்குதல்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் கண்கூடாகத் தெரிந்தன. தமிழ்நாட்டிலும் அப்படியொரு பதற்றநிலை ஏற்பட்டது. அத்தருணத்தில் அரசின் வேண்டுகோளை ஏற்று, பெரியாரும், அண்ணாவும் வானொலியில் பேசி மக்களை அமைதிப்படுத்தினர். பார்ப்பனர் சமூகத்தைச் சேர்ந்த கோட்சே என்பவர்தான் காந்தியாரைக் கொலை செய்தார் என்ற உண்மை வெளிவந்த பிறகும், யார் ஒருவரையும் தாக்குதல் முறையன்று எனப் பெரியார், சன்னாநல்லூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.

தந்தை பெரியாரின் சன்னாநல்லூர் உரை, வரலாற்றில் குறிக்கத்தக்க ஒன்றாகும். அவர் நினைத்திருந்தால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, பார்ப்பனர்களுக்கு எதிரான ஒரு கலவரத்தையே ஏற்படுத்தியிருக்க முடியும். பெரியார் அப்படிச் செய்யவில்லை என்பதோடு, தானாக ஏற்பட்டிருக்கக் கூடிய கலவரத்தையும் தடுக்க முயன்றார். அவர் அந்தக் கூட்டத்தில் பேசும் போது, ‘காந்தியாரைக் கொலை செய்த காரணத்தால், அந்தத் துப்பாக்கியை யாராவது துண்டு துண்டாக உடைத்து மகிழ்வார்களா? அது வெறும் கருவிதான் என்றுதானே கருதுவார்கள். அதே போல, கோட்சேயும் ஒரு கருவிதான். மதவெறி என்னும் ஒன்றினால், இயக்கப்பட்ட கருவிதான் கோட்சேயும்! ஆதலால், பலருடைய எண்ணங்களிலும் அழுத்தமாய்ப் பரவிக்கிடக்கிற மதவெறியைத்தான் நாம் அழிக்க வேண்டுமே அல்லாது, கோட்சே என்னும் தனிமனிதர் பிறந்த சமூகத்தின் மீது நம் கோபத்தைக் காட்டக் கூடாது’ என்று அறிவுறுத்தினார்.

இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திராகாந்தி, கொல்லப்பட்ட போதும், ஒரு பெரும் கலவரம் நாடெங்கும் எழுந்தது. இந்திராகாந்தியைக் கொன்றவர்கள் சீக்கியர்கள் என்பதால், நாட்டின் பல பகுதிகளிலும் சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள். அவர்களின் உடைமைகளுக்குச் சேதம் விளைவிக்கப்பட்டது. யாரோ இரண்டு சீக்கியர்கள் அந்தக் கொலையைச் செய்தார்கள் என்பதற்காக, நாட்டில் உள்ள சீக்கியர்களை எல்லாம் தாக்குவது எந்தவிதத்திலும் நியாயம் ஆகாது என்பதை அன்றைய வன்முறையாளர்கள் உணரவில்லை.

இவை எல்லாவற்றையும் தாண்டிய ஒரு விந்தை, 1987இல் எம்.ஜி.ஆர். இறந்தபோது நடைபெற்றது. எம்.ஜி.ஆரை யாரும் கொலை செய்யவில்லை. உடல்நலம் சீர்கெட்டதால் அவர் இறந்தார். ஆனால் அவர் இறந்த அன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள கடைகள் பல அடித்து நொறுக்கப்பட்டன. மூடியிருந்த கடைகள் பலவற்றையும்கூட, வன்முறையாளர்கள் உடைத்து உள்ளே இருந்த பொருள்களை அள்ளிக் கொண்டு ஓடினார்கள். அப்போது, அண்ணா சாலையில் வைக்கப்பட்டிருந்த கலைஞரின் சிலையை ஒருவர் கடப்பாறையால் உடைத்த காட்சி, அடுத்த நாள் எல்லா நாளேடுகளிலும் வெளிவந்தது.

இவையெல்லாம் நியாயமற்ற, தேவையற்ற போராட்டங்கள். யார் கொலை செய்தார்களோ அவர்கள் மட்டுமே தண்டனைக்குரியவர்கள். அவர்கள் பிறந்த இனமோ, மதமோ, சாதியோ, கட்சியோ அதற்குக் காரணம் ஆகமுடியாது. இந்தப் பார்வையைவிட்டு வெகுதூரம் விலகி, பின்புலக் காரணமோ, தொடர்போ இல்லாத ஒரு கட்சியினர் மீது தாக்குதல் நடைபெறுமானால், அது மிகுந்த கண்டனத்திற்குரியது. அப்படி நடைபெறும் ஒரு வன்முறைக் கலவரத்தைப் போராட்டம் என்று அழைப்பது கூட பொருத்தமில்லை. எனினும் ஓர் அடையாளத்திற்காக அது அப்படி இங்கே குறிக்கப்படுகிறது.

1991 மே மாதம் 21ஆம் தேதி இரவு, சென்னைக்கு அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூர் என்னும் ஓர் ஊரில், ஒரு தேர்தல் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். அந்தக் கொலைக்கும், தி.மு.கழகத்திற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்பதை எல்லோரும் அறிவர். ஆனாலும், தி.மு.கழக அலுவலகம், முரசொலி பத்திரிகை அலுவலகம், தி.மு.கழகத் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்களின் வீடுகள் என எல்லாமே கடும் தாக்குதலுக்கு உள்ளாயின. அந்த நியாயமற்ற போராட்டம் குறித்தே இங்கு நாம் பார்க்க இருக்கிறோம்.

1989 முதல் தமிழ்நாட்டில் நடைபெற்று வந்த தி.மு.கழக ஆட்சி, 1991 ஜனவரி இறுதியில், மத்திய அரசினால் கலைக்கப்பட்டுவிட்டது. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்தார்கள் என ஒரு காரணத்தைச் சுமத்தி, ஆட்சி கலைக்கப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஆட்சி, இங்கே நடைமுறைக்கு வந்தது. தி.மு.கழக ஆட்சியைக் கலைத்த அன்றைய பிரதமர் சந்திரசேகர் ஆட்சியும், அடுத்து கவிழ்க்கப்பட்டது. எனவே, இந்திய நாடாளுமன்றம், தமிழ்நாடு சட்டமன்றம் என இரண்டிற்கும் 1991 மே 20, 23, 26 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ஆட்சியைக் கலைத்த ராஜீவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சியும், ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டனர். தி.மு.கழகம், தமிழ்நாடு ஜனதா தளம், பொதுவுடைமைக் கட்சிகள் ஆகியன இன்னொரு கூட்டணியை அமைத்தன.

தமிழ்நாட்டில், மே 26ஆம் தேதி, தேர்தல் நடைபெற இருந்தது. ஆனால், அதற்கு முன்பு மே 20ஆம் தேதி, உத்தரபிரதேசத்தில் நடந்த தேர்தலிலேயே ஒரு பெரும் கலவரமும், வன்முறையும் அரங்கேறின. அதற்கு அங்கு 30 உயிர்கள் பலியாயின. பீகாரில் தேர்தல் அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார். ஆந்திராவிலும் பல இடங்களில் கலவரங்களும், காவல்துறையின் துப்பாக்கிச் சூடுகளும் நடைபெற்றன. எனவே, தமிழகத் தேர்தல்களிலும் கலவரம் நிகழக் கூடுமோ என்னும் அச்சம் இருக்கவே செய்தது.

ஆனால், யார் ஒருவரும் எதிர்பாராத வகையில், மே மாதம் 21ஆம் தேதி, தேர்தல் பரப்புரைக்காகத் தமிழ்நாடு வந்திருந்த ராஜீவ்காந்தி, மனிதவெடிகுண்டு வெடித்து, அந்த இடத்திலேயே இறந்து போனார். அவரோடு சேர்ந்து, காவல்துறை அதிகாரிகள் 9 பேரும், பொதுமக்கள் 7 பேரும் இறந்து போயினர். ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட அரைமணிநேரத்திற்கு உள்ளாகவே செய்தி உலகெங்கும் பரவியது. நாட்டின் பல இடங்களில் கொந்தளிப்பான சூழல் நிலவியது. யார் கொலை செய்தவர்கள் என்னும் உண்மை வெளி வருவதற்கு முன்பே, விடுதலைப் புலிகள்தான் அதனைச் செய்திருப்பார்கள் என்னும் ஊகம் பரவியது. தமிழ்நாட்டில் இருந்த விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் பலர், கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகக் கூடும் என்னும் அச்சம் நிலவியது. ஆனால் தொடர்பே இல்லாமல், மறுநாள் தி.மு.கழகம் தாக்குதலுக்கு உள்ளாயிற்று.

ராஜீவ்காந்தியின் கொலை பற்றிய செய்தி அறிந்து, தி.மு.கழகத் தலைவர் கலைஞர் உடனடியாக ஓர் இரங்கல் செய்தியினை வெளியிட்டார். அந்தச் செய்தியில், “ஒரு நீண்ட எதிர்காலத்திற்கு உரியவரும், அரசியலில் தனக்கென ஓர் இடத்தைப் பெற்றிருந்தவருமான ராஜீவ்காந்திக்கு ஏற்பட்ட இந்தக் கொடுமையான முடிவு யாராலும் தாங்கிக் கொள்ள முடியாததாகும். ஒரு ஜனநாயக நாட்டில், இத்தகைய வன்முறை நடவடிக்கைகள் அந்த நாட்டிற்கே இழிவு சேர்ப்பதாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும், காங்கிரஸ் இயக்கத்தின் நண்பர்களுக்கும், தி.மு.கழகச் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், அது தேர்தல் நேரம் என்பதால் திட்டமிட்டே திமுகவின் மீது பழி சுமத்தப்பட்டது. இந்தக் கொலையின் பின்னணியில் விடுதலைப் புலிகளும், திமுகவும்தான் உள்ளனர் என்று காங்கிரஸ், அதிமுக கட்சித் தலைவர்கள் வெளிப்படையாகவே பேசினர். மே 21ஆம் தேதி இரவு, சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு அருகில் ஓர் ஊழியர் கூட்டத்தில் திமுகவின் இளைஞரணிச் செயலாளராக அன்று பொறுப்பு வகித்த மு.க.ஸ்டாலின், ‘இன்று இரவு நாடெங்கும் கலவரம் நடைபெற வாய்ப்புள்ளது. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்’ என்று சொன்னதாக, ஒரு பொய்யான குற்றச்சாட்டு கூறப்பட்டது. ஆனால், அன்று இரவு, அந்த இடத்தில் எந்தவொரு ஊழியர் கூட்டமும் நடைபெறவே இல்லை என்பது பின்னால் தெரிந்தது.

‘உண்மை தன் கால்களில் செருப்பு அணிவதற்குள், பொய் உலகையே சுற்றி வந்துவிடும்’ என்பார்கள். அன்று அதுதான் நடந்தது. அன்று நள்ளிரவில் இருந்தே, தி.மு.கழகத்தினரின் வீடுகளும், அலுவலகங்களும் தாக்கப்பட்டன. பல இடங்களில், பொருள்களுக்குத் தீ வைக்கப்பட்டது. எரிந்து சாம்பலாகிய கட்டிடங்கள் மற்றும் கார்களின் எண்ணிக்கை கணக்கற்றதாக இருந்தது. தி.மு.கழகத்தின் ஆதரவாளர் என்பதற்காகக் கவிஞர் வைரமுத்துவின் வீடும் தாக்கப்பட்டது. தி.மு.கழகத்தின் கொடிக் கம்பங்கள் பல இடங்களில் வெட்டிச் சாய்க்கப்பட்டன.

மிகக் கூடுதலான தாக்குதலுக்குள்ளான இடம், முரசொலி நாளேட்டின் அலுவலகம்தான். அந்த நள்ளிரவில் கலைஞர் வீட்டிற்குத் தொலைபேசிய முரசொலி ஊழியர் ஒருவர், ஒரு பெரும் கும்பல் கதவை உடைத்து உள்ளே வந்து, அலுவலகத்தையும், ஊழியர்களையும் தாக்குவதாகப் பதற்றமான குரலில் சொன்னார். அப்போது முரசொலியை நிர்வாகம் செய்து கொண்டிருந்த புகழ்(கலாநிதிமாறன்) உயிருக்கும் ஆபத்து நேரக்கூடும் என்றும் தெரிவித்தார். உடனடியாகக் கலைஞர் காவல்துறை உயரதிகாரிகள் பலரையும், தொலைபேசியில் தொடர்பு கொண்டார். தலைவரின் அறிவுரைப்படி, ஆயிரம்விளக்கு உசேன், பூச்சி முருகன் முதலானவர்கள் காவல்துறையினரையும் அழைத்துக் கொண்டு, முரசொலி அலுவலகம் சென்றனர்.

ஆனால் அதற்குள்ளாகவே, அங்கு எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. கட்டிடத்தின் பல பகுதிகள் எரிந்து கொண்டிருந்தன. முரசொலி ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறை, கொளுத்தப்பட்டு பழைய முரசொலி ஏடுகள் அனைத்தும், சாம்பலாகக் கிடந்தன. அச்சு இயந்திரங்கள் பல இனிப் பயன்படுத்த இயலாத அளவு, தாக்கப்பட்டிருந்தன. கலாநிதிமாறன் மட்டும் எப்படியோ அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்று உயிர் பிழைத்திருந்தார். ராஜீவ்காந்தி கொலையோடு, எந்தவிதத்திலும் தொடர்பற்றிருந்த தி.மு.கழகம் இத்தனை பெரிய, நியாயமற்ற தாக்குதலை எதிர்கொண்டது.

திமுக மட்டுமின்றி, அதன் தோழமைக் கட்சியினரும் பாதிப்புகளுக்கு உள்ளாகியிருந்தனர். மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஏடான தீக்கதிர் அலுவலகமும் தாக்கப்பட்டது. அந்த அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த மேலாளர் இராமராஜ், கத்தியால் குத்தப்பட்டார். அப்போது திமுக கூட்டணியில் இருந்த திருநாவுக்கரசருக்கும் பாதிப்பு ஏற்பட்டது. அறந்தாங்கி அருகில் ஜவுளி ஆலை ஒன்றின் விருந்தினர் விடுதியில் அவர் தங்கியிருந்த போது, ஒரு கும்பல் உள்ளே நுழைந்து, அந்த கட்டிடத்திற்குத் தீ வைத்தது. ஜெயலலிதா போட்டியிட்ட இரண்டு தொகுதிகளில் ஒன்றான காங்கேயத்தில் தி.மு.கழகத் தொண்டர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். தமிழ்நாட்டில் பல இடங்களில் பொதுச் சொத்துகளுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டது.

பிற மாநிலங்களிலும், சில வன்முறைகள் அரங்கேறின. ஆந்திராவில் என்.டி.இராமாராவிற்குச் சொந்தமான திரையரங்கம் ஒன்று கொளுத்தப்பட்டது. டில்லியில் பாஸ்வான் வீடும் தாக்குதலுக்கு உள்ளாயிற்று. இவ்வாறு எந்தக் காரணமும், தொடர்பும் இல்லாமல் நாடெங்கும் வன்முறைகள் நிகழ்த்தப்பட்டன. ஆனால், யார் மீதெல்லாம் சந்தேக நிழல்கள் படிந்திருந்தனவோ அவர்களிடம், எந்த விசாரணையும் நடைபெறவில்லை.

சுப்பிரமணியன் சுவாமி
சுப்பிரமணியன் சுவாமி

ராஜீவ் கொலை செய்யப்பட்ட இரவு, அடுத்த சில நிமிடங்களில், சுப்பிரமணியன்சாமியைத் தான் சாதாரணமாகத் தொடர்பு கொண்டதாகவும், தொலைபேசியைக் கையில் எடுத்த அவர், “என்ன, ராஜீவ்காந்தி செத்துட்டார் அதானே சொல்ல வாரேள்” என்று கூறியதாகவும் திருச்சி வேலுசாமி ஒரு நூல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். செய்தியே வெளிவராத நிலையில், எங்கோ இருந்த சாமி, அதை மிகச் சாதாரணமாகச் சொன்னது தனக்கு அதிர்ச்சியாக இருந்தது என்கிறார் வேலுசாமி. பிறகு அமைக்கப்பட்ட ஜெயின் ஆணையமும் தன் அறிக்கையில், சுப்பிரமணியன்சாமி, சந்திராசாமி ஆகியோர் மீது சில ஐயங்களை எழுப்பியுள்ளது. 1995ஆம் ஆண்டு, அவர்கள் இருவரும் மேற்கொண்ட இலண்டன் பயணத்திற்கும், ராஜீவ் காந்தி கொலை தொடர்பான ஆவணங்கள் சில மறைக்கப்பட்டதற்கும் தொடர்பு இருக்கலாம் என்னும் சந்தேகத்தை ஜெயின் அறிக்கை வெளியிட்டிருந்தது.

ராஜீவ் கொலை பற்றி ஆராய, மத்திய அரசின் சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்று காவல்துறை அதிகாரி கார்த்திகேயன் தலைமையில் அமைக்கப்பட்டது. நீதிபதி ஜே.எஸ்.வர்மா தலைமையில் ஒரு விசாரணை ஆணையமும், நீதிபதி ஜெயின் தலைமையில் இன்னொரு விசாரணை ஆணையமும் உருவாக்கப்பட்டன. எந்த ஆணையமும் திமுகவின் மீது குற்றம் சாட்டவில்லை. ஆனால் அனைத்துவிதமான பாதிப்புகளையும் தி.மு.கழகம் எதிர்கொண்டது.

முன்னாள் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலும் தள்ளிப் போய்விட்டது. இரண்டாவது, மூன்றாவது கட்ட வாக்குப்பதிவினை ஜூன் 12, 15 ஆகிய தேதிகளுக்குத் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் ஒத்திவைத்தார். ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டதால் உருவான அனுதாப அலை, காங்கிரஸ்-அதிமுக கூட்டணிக்குப் பெரும் ஆதரவாக அமைந்தது. உயிர்களையும், உடைமைகளையும் இழந்த தி.மு.கழகம், தேர்தலில் வெற்றி வாய்ப்பையும் இழந்தது. 232 இடங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில்,(இரண்டு இடங்களில் தேர்தல் நடைபெறவில்லை) கலைஞர் மட்டுமே துறைமுகம் தொகுதியில் வெற்றி பெற்றார். தி.மு.கழகம் தேர்தல்களில் பங்கேற்ற தொடக்க காலத்திலிருந்து அப்படியொரு படுதோல்வியைச் சந்தித்ததில்லை என்றே கூறலாம்.

இத்தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாத திமுக தொண்டர்கள் மூவர் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டார்கள். சென்னையைச் சேர்ந்த செல்வராஜ் என்னும் கட்சித் தொண்டர், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, ‘எனது தலைவனின் பொதுவாழ்வுக்கு இந்தத் தேர்தல் முடிவு, சாவுமணி அடித்துவிட்டது. இதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை’ என்று எழுதிவைத்துவிட்டு உயிர் துறந்தார்.

அது குறித்து, உடனடியாக ‘யாரும் உயிரை மாய்த்துக் கொள்ளாதீர்கள்’ என்ற வேண்டுகோளுடன், கலைஞர் விடுத்த அறிக்கையில், “சாவு ஒன்றுதான் என் பொதுவாழ்வுக்கு முடிவுகட்ட முடியுமே தவிர, வேறு எதுவும் என் பொதுவாழ்வை முடித்துவிடாது என்பதை என் உடன் பிறப்புகள் உணர்ந்து கொண்டு, தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடாது” என்று குறிப்பிட்டிருந்தார்.

நாட்டில் நடைபெற்ற போராட்டங்களில், இப்படி நியாயமற்ற போராட்டங்களும் அடங்கும்!

(களங்கள் தொடரும்….)

அன்புடன்
சுப.வீரபாண்டியன்
பயன்பட்ட நூல்கள்
==================

1. கருணாநிதி, மு, கலைஞர் – “நெஞ்சுக்கு நீதி – 4ஆம் பாகம்” – திருமகள் நிலையம், சென்னை – 17.

2. முத்துக்குமார், ஆர் – “தமிழக அரசியல் வரலாறு – பாகம் 2” – கிழக்கு பதிப்பகம், சென்னை – 14.

3. வேலுசாமி, திருச்சி – “ராஜீவ் படுகொலை – தூக்குக் கயிற்றில் நிஜம்” – பேட்ரிஷியா பதிப்பகம், சென்னை – 61.

4. அருணன் – “காலந்தோறும் பிராமணியம் – பாகம் 8” – வசந்தம் வெளியீட்டகம், மதுரை – 1.

5. செல்வம், முரசொலி – “முரசொலி சில நினைவுகள்” – முரசொலி ஏட்டில் வெளிவந்த கட்டுரைத் தொடர்.

Disclaimer: எங்கள் செய்தி இணையதளத்தில் வரும் தொடர்கள் யாவும் பத்திரிகை டாட் காமிற்கே பிரத்தியேக, தனிப் பிரசுர உரிமை வழங்கப்பட்டுள்ளது . எனவே, பத்திரிகை டாட் காமின் முன் அனுமதியின்றி இதனை முழுவதுமாகவோ இல்லை இதில் வரும் சில பகுதிகளையோ உங்கள் பயன்பாட்டிற்கு உபயோகிக்க அனுமதியில்லை.