சுபவீ எழுதும் போராட்டங்கள் – கோயில் நுழைவுப் போராட்டங்கள்

--

தமிழ்நாட்டில் கோயில் வழிபாட்டு மரபு பிற்காலத்தில்தான் வந்தது. தொடக்கத்தில் தமிழர்கள் நடுகல் வழிபாட்டினையே மேற்கொண்டிருந்தனர். நெருப்பை வழிபடும் சமய முறையை ஆரியர்கள் கொண்டிருந்தனர். கிறித்துவர்கள் சிலுவையை வழிபட்டனர். பிற்காலத்தில் வந்த இஸ்லாமிய மதத்தினர் மேற்கு திசை நோக்கி வணங்கும் சமயத்தினர். இதனைத்தான் பாரதியாரும்,

“தீயினைக் கும்பிடும் பார்ப்பார்

நித்தம் திக்கை வணங்கிடும் துருக்கர்

கோவிற் சிலுவையின் முன்னே நின்று

கும்பிடும் இயேசு மதத்தார்”

என்று தன் பாட்டில் எழுதுவார். பல்லவர் ஆட்சியில், பக்திக்காலம் தொடங்கிய பின்பே கோயில்கள் உருவாயின.

கி.பி. 6, 7 ஆம் நூற்றாண்டுகளில், கோயில்கள் மிகப் பெரிய சமூக நிறுவனங்களாக வளரத் தொடங்கின. அளவற்ற விளைநிலங்கள் கோயில் சொத்தாயின. அதுவரையில், தீ வளர்த்து வேள்விகள் மட்டுமே செய்துகொண்டிருந்த பார்ப்பனர்கள் கோயிலில் ஆதிக்கம் செலுத்த முற்பட்டனர். சாதி ஏற்றத்தாழ்வுகள் அனைத்தும் கோயிலுக்குள்ளும் வந்துவிட்டன.

“நில உடைமையின் விளைபொருள்களில் ஒன்றான சாதி இறுக்கங்களும் தீண்டாமையும், 10 ஆம் நூற்றாண்டிலேயே மிகவும் வளர்ந்து விட்டதைச் சோழர் காலக் கல்வெட்டுகள் நமக்கு காட்டுகின்றன” என்று தன் நூலில் குறிப்பிடுகின்றார், பேராசிரியர் தொ. பரமசிவன். பல்லவர் காலத்தில் தொடங்கி, சோழர் காலத்தில் வளர்ந்து, நாயக்கர் காலத்தில் உச்சத்தைத் தொட்டன சாதி மற்றும் தீண்டாமை ஏற்றத்தாழ்வுகள்.

அதன் விளைவாக, கோயிலுக்குள் யார் போகலாம், போகக்கூடாது என்பதும், உள்ளே செல்லக்கூடியவர்களிலும், யார்யார் எந்தெந்த இடம் வரையில் செல்லலாம் என்ற வரையறைகளும் உருவாயின கருவறை வரையில் செல்லும் உரிமை எல்லோருக்கும் வேண்டும் என்ற கோரிக்கை மிகவும் பிற்காலத்தில் ஏற்பட்டது. ஆனால் கோயிலுக்குள்ளேயே போகக்கூடாது என்ற தடையைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மீற நடந்த முயற்சிகளை நாம் பார்க்கிறோம். அந்தப் போராட்டத்தின் குறியீடே பெரியபுராணம் காட்டும் திருநாளைப் போவார் என்னும் “நந்தன் கதை”.

நந்தனைப் போலக் கெஞ்சிக்கொண்டிருக்காமல், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஒரு பிரிவினர் போராடத் தொடங்கினர். அது 20 ஆம் நூற்றாண்டிலும் தொடர்ந்தது. அப்போராட்டங்கள் குறித்தே இங்கு நாம் பார்க்கப் போகிறோம்!

தாங்கள் ஏற்றுக்கொண்ட மதம் சார்ந்து, தாங்கள் நம்பும் கடவுளை வணங்குவதற்கு, உலகில் வேறு எந்த மதமும் தடை விதித்திருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் நம் நாட்டில் இந்துமதம் அந்தத் தடையை விதித்தது. அதற்கான போராட்டங்கள் இங்கு நடந்தன. போராட்டங்களில் உயிர்ப்பலிகளும் நிகழ்ந்தன. இந்தியாவில் பல உலக அதிசயங்கள் உண்டு என்பர். இதுவும் ஓர் உலக அதிசயம்தான்.

கோயில் நுழைவுப் போராட்டங்களில் மூன்று முதன்மையான கூறுகள் உள்ளன. ஆன்மிகம், சமத்துவம், சட்டம் என்று மூன்று தளங்களில் இச்சிக்கல் குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

தமிழக வரலாற்றில் இத்தகைய போராட்டங்கள் எப்போது தொடங்கின என்று கேட்டால், சட்டென்று பலரும், 1939 ஆம் ஆண்டு மதுரையில் நடந்த கோயில் நுழைவுப் போராட்டம்தான், இவ்வரிசையில் தமிழகம் கண்ட முதல் போராட்டம் என்று கூறுவர். இப்படி ஒரு தவறான செய்தியை நம் பாடப்புத்தகங்கள் ஆண்டுகள் பலவாய்ச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. ஆனால் அதற்கு அரை நூற்றாண்டுக்கு முன்பே அப்போராட்டம் தொடங்கிவிட்டது என்பதே வரலாற்று உண்மை!

முதன்முதலாகக் கோயில் நுழைவுப் போராட்டத்தை நாடார் சமூக மக்களே 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் முன்னெடுத்தனர். பிறகு 1920 களின் பிற்பகுதியில் சுயமரியாதை இயக்கம், பல காலகட்டங்களில், பல ஊர்களில் நடத்தியது. மதுரையில் நடைபெற்ற போராட்டத்தை மூன்றாவது கட்டம் என்று கூறலாம்.

அன்றைக்கு நாடார் சமூக மக்கள் பல்வேறு கொடுமைகளைச் சந்தித்தனர். எக்காரணம் கொண்டும் அவர்களைக் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்க முடியாது என்று “உயர்சாதியினர்” கூறிவிட்டனர். போர்க்குணமிக்க அச்சமூகத்தினர் 1870 ஆம் ஆண்டு முதல் கோயில் நுழைவுப் போராட்டத்தை நடத்தினர். அதன்பின் 1872, 1890, 1897 ஆகிய ஆண்டுகளில் அதே போன்ற போராட்டங்கள் நடைபெற்றன.

அப்போராட்டங்கள் குறித்து, சிகாகோ பல்கலைக்கழகப் பேராசிரியரும், கோயிலில்கள் பற்றிய ஆய்வாளருமான ராபர்ட் ஹார்டுகிரேவ் எழுதியுள்ள “தமிழக நாடார்கள்” (The Nadars of Tamilnad) நிறையத் தகவல்களைத் தருகின்றது. தமிழிலும் பல நூல்கள் வெளிவந்துள்ளன. எஸ்.வி.ஆர். ஆ.சிவசுப்பிரமணியன். வாலாசா வல்லவன். லஜபதி ராய், பேராசிரியர் சந்திர பிரபா ஆகியோர் பல செய்திகளைத் தந்துள்ளனர். 1897 ஆம் ஆண்டு கமுதி கோயில் வழக்கு, பல நீதிமன்றங்களைக் கண்டது. அவற்றின் விவரங்கள் முழுவதையும் அறிய விரும்புவோர், இந்நூல்களைப் படித்தல் அவசியம்.

1870 இல், தென்கோடியில் உள்ள குமாரகோயில் ஆலயத்திற்குள் நாடார் சமூகத்தினர் நுழைய முயன்றதுதான் வரலாற்றின் முதல் நிகழ்வு என்று கூறலாம். அப்போராட்டத்திற்குத் தங்கன்விளை வெள்ளையன் நாடார் தலைமை தாங்கினார். பிறகு 1872இல் சிவகாசி அருகில் உள்ள திருத்தங்கல் என்னும் ஊரிலும், 1890 இல் அருப்புக்கோட்டை அருகில் உள்ள திருச்சுழியிலும் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இவ்விரு போராட்டங்களிலும் அடிதடிகளும், உயிர்ப்பலிகளும் நிகழ்ந்துள்ளன.

1897 மே மாதம் 14 ஆம் தேதி நடைபெற்ற கமுதி கோயில் நுழைவுப் போராட்டம்தான் மிகவும் பேசப்பட்ட ஒன்று. அதற்கான காரணம், அவ்வழக்கு, லண்டன் வரையில் சென்றதுதான். தாரை, தப்பட்டையுடன் கோயிலின் உள் நுழைந்த நாடார் மக்கள், உள்ளிருந்த சாமி சிலை ஒன்றுக்குத் தேங்காய் உடைத்து, அர்ச்சனை செய்துள்ளனர். அது மிகப் பெரும் குற்றமாகக் கருதப்பட்டு, அவர்கள் மீது, அக்கோயிலின் அறங்காவலராக இருந்த ராமநாதபுரம் ஜமீன்தார் பாஸ்கர சேதுபதியின் பெயரில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நாடார்கள் செய்தது தவறு என்று நீதிமன்றம் சொல்லிவிட்டது. அதனை எதிர்த்து அவர்கள் சென்னை உயர்நீதிமன்றம் சென்றனர். அங்கும் வெற்றி பெற முடியவில்லை. இருப்பினும், மனம் தளராமல் லண்டன் பிரிவி கவுன்சிலுக்கும் சென்றனர். ஆங்கிலேயர்கள் ஆதரவாகவே தீர்ப்பு அளிப்பார்கள் என்று நாடார் சமூகத்தினர் கருதினர். ஆனால், 1908 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட அத்தீர்ப்பும், கோயில் நுழைவுக்கு எதிராகவே இருந்தது.

இவ்வாறு நீதிமன்றங்கள் தீர்ப்பளித்ததால், சட்டமே அப்படித்தான் இருக்கிறதா என்ற எண்ணம் இயல்பாக எழும். ஆனால் “இந்து என்று சொல்லப்படுகின்றவர் ஒவ்வொருவருக்கும், அவர் தீண்டத்தக்கவராகவோ, தகாதவராகவோ இருப்பினும் அல்லது எந்தச் சாதியிலும் சேர்ந்தவராகவோ, சேராதவராகவோ இருப்பினும், தம்மைப் போல் கடவுள் வழிபாட்டிற்கு வரும் பிறருக்கு உபத்திரவம் ஏதும் ஏற்படாத முறையில் பொதுக்கோயில்களில் பிரவேசிப்பதற்கும், அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் கடவுள் விக்கிரகங்களை வணங்குவதற்க்கும் உரிமை உண்டு என்பதில் சந்தேகமில்லை” என்று கூறும் மறைந்த மூத்த வழக்கறிஞர் நாகர்கோயில் பி.சிதம்பரம் பிள்ளை, அது எப்படி மாறிப்போனது என்பதையும் தன் நூலில் (‘Right of Temple Entry) விளக்குகின்றார். உயர்நீதிமன்றத்தின் முதல் நீதிபதியான முத்துசாமி அய்யர் போன்றவர்கள், நீண்டகால மரபு மற்றும் பழக்க வழக்கங்கள் ஆகியனவற்றையும் தீர்ப்பு எழுதும்போது கணக்கில் கொள்ள வேண்டும் என்று எழுதி வைத்துள்ளதால், அது இந்த வழக்குகளில் ஆதாரமாகக் காட்டப்பட்டது என்கின்றார்.

லண்டன் தீர்ப்புக்குப் பிறகு, ஏறத்தாழ 20 ஆண்டுகள் கோயில் நுழைவுப் போராட்டங்கள் நடந்ததாகத் தெரியவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் சுயமரியாதை இயக்கம் தோன்றிய பின், மீண்டுமிந்தப் போராட்டங்கள் எழுந்தன.

சுயமரியாதை இயக்கத்தின் சார்பில், 1926 டிசம்பர் மாதம் மதுரையில் நடைபெற்ற பார்ப்பனர் அல்லாதார் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 3 ஆவது தீர்மானம் இப்படிச் சொல்கிறது:-

“இந்துக் கோயில்களில், இந்து என்று சொல்லப்படும் எல்லா வகுப்பாருக்கும், பிரவேசத்திலும், பூஜையிலும், தொழுகையிலும் சம உரிமை உண்டென்று இம்மாநாடு தீர்மானிக்கிறது”

இந்தத் தீர்மானமே, தமிழக வரலாற்றில் இன்னொரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது. கோயில் நுழைவுப் போராட்டங்கள் மீண்டும் புத்துயிர் பெற்றன. முன்பு நடந்த போராட்டத்திற்கும் இதற்கும் ஒரு வேறுபாடு இருந்தது. நந்தன் பற்றிய புராணமும், நாடார் சமூகம் நடத்திய போராட்டமும், தங்கள் உரிமைகளை நிறைவேற்றிக் கொள்ள நடந்தவை. ஆனால் 1927 முதல் சுயமரியாதை இயக்கம் நடத்திய போராட்டங்களோ, ஓர் இயக்கம் சமூக சமத்துவத்திற்காகவும், பொது மனித உரிமைகளுக்காகவும் நடத்தியவை.

தீர்மானம் நிறைவேற்றப்பட்டபின், முதல் கோயில் நுழைவுப் போராட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்றது. 1927 பிப்ரவரி 7 ஆம் நாள், திராவிடன் ஆசிரியர் ஜே.எஸ்.கண்ணப்பர், ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த மக்களுடன் கோயிலுக்குள் நுழைய முயல்கின்றார். அவர்களை நுழைய விடாமல், கோயில் கதவு சாத்தப்படுகிறது. பெரிய தள்ளுமுள்ளுக்குப் பிறகு அவர்கள் உள்நுழைகின்றனர். மீண்டும் பரபரப்பு.

இது தொடர்பாக வழக்கு தொடரப்படுகின்றது. அது ஓராண்டு நடைபெற்று, 1928 ஏப்ரல் இறுதியில் தீர்ப்பு வருகின்றது. கண்ணப்பரையும், பிறரையும் கோயிலுக்குள் வரவிடாமல் தடுத்த ராமநாத சாஸ்திரி, குப்புசாமி குருக்கள் இருவரும் 341 ஆவது பிரிவின்படி குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டு, ஆளுக்கு ரூ 100 அபராதம் விதிக்கப்படுகிறது. அந்த 200 ரூபாய் கண்ணப்பருக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பாகிறது.

இந்தத் தீர்ப்பு கோயில் கதவை மட்டும் திறந்துவிடவில்லை. சமூக சமத்துவத்திற்குத் தடையாக இருந்த சாதி, மதக் கதவுகளையும் திறந்துவிட்டது. ஆனாலும் அடுத்தடுத்து நடந்த வழக்குகள் எல்லாவற்றிலும் இத்தீர்ப்பு முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. வெவ்வேறு மாதிரியான தீர்ப்புகள் வழங்கப்பட்டன. 1929 ஆம் ஆண்டு ஈரோடு ஈஸ்வரன் கோயில் நுழைவுப் போராட்டத்தில் ஈடுபட்ட குத்தூசி குருசாமி, பூவாளூர் பொன்னம்பலனார் ஆகியோர் கீழமை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். மீண்டும் 1935 மார்ச் மாதம் வழங்கப்பட்ட திருச்செந்தூர் கோயில் நுழைவுத் தீர்ப்பு. கோயில் நுழைவுக்குச் சாதகமாக இருந்தது. அவ்வழக்கு, கமுதி வழக்கினைப் போல லண்டன் வரை சென்று வந்தது.

இடையில், மயிலாடுதுறை, திருச்சி மலைக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள கோயில்களில் இத்தகைய போராட்டங்கள் நடந்தன. திருச்சியில் போராட்டக்காரர்கள், ரவுடிகளால் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டனர். ஏறத்தாழப் பத்து ஆண்டுகள் சுயமரியாதை இயக்கத் தொண்டர்கள் நடத்திய போராட்டங்களுக்குப் பிறகே, 1939 ஆம் ஆண்டு மதுரையில், இன்று பெரிதாகப் பேசப்படுகின்ற அப்போராட்டம் நடைபெற்றது. அது குறித்துப் பல செய்திகள், பல விமர்சனங்கள் இன்றுவரையில் உள்ளன.

1937-39 ஆம் ஆண்டுகளில், தமிழ்நாட்டின் பிரதமராக (முதலமைச்சர்) ராஜாஜி இருந்தார். அவருக்கு 1939 ஆம் ஆண்டு சில கடுமையான அரசியல் நெருக்கடிகள் ஏற்பட்டன. நாடு முழுவதும் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒருபுறமும்,. பூனா ஒப்பந்தத்தில் காங்கிரஸ் நடந்துகொண்ட முறையினால் தாழ்த்தப்பட்ட மக்களிடம் உருவான கோபம் ,மறுபுறமுமாக அவர் ஆட்சியை நெருக்கின. ஒரு பகுதியினரையாவது சமாதானம் செய்ய வேண்டிய சூழல் இருந்தது. அப்போது ஆளுநராக இருந்த எர்ஸ்கின் பிரபு, ராஜாஜியை அழைத்து, நாட்டில் காணப்படும் அமைதியற்ற நிலையை எடுத்துக்காட்டிப் பேசினார்.

P. Kakkan

எல்லாவற்றையும் கணக்கில் கொண்ட பிரதமர் ராஜாஜி, யார் வேண்டுமானாலும் கோயிலில் பிரவேசம் செய்யலாம் என்றில்லாமல், கோயிலுக்குள் தாழ்த்தப்பட்டோர் உள்நுழைந்துவிட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதில்லை என்று ஓர் ஆணை பிறப்பித்தார். அதனை அடிப்படையாகக் கொண்டு. ராஜாஜியின் சீடரான மதுரை வைத்தியநாத அய்யர், 1939 ஜூலை 8 ஆம் தேதி, மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கக்கன் உள்ளிட்ட சிலரை அழைத்துக்கொண்டு போனார்.

அப்போது நீதிக்கட்சியைச் சேர்ந்த ஆர்.எஸ். நாயுடு, கோயிலின் நிர்வாக அதிகாரியாக இருந்தார். அவரதற்குப் பெருந்துணையாகச் செயல்பட்டார். அந்தக் கோயில் நுழைவுப் போராட்டம் நடந்தவுடன், ஆறுபாதி நடேச அய்யர் தலைமையில் மிகப் பலரும் கூடி, மீனாட்சி கோயிலை விட்டு வெளியேறிவிட்டாள் என்றும், நடேச அய்யர் வீட்டில் குடியேறிவிட்டாள் என்றும் பரப்புரை செய்தனர். கோயில் பட்டர்கள் அனைவரும், இனி மகா ஸம்ப்ரோக்ஷணம் செய்தால் மட்டுமே கோயிலுக்குள் நுழைவோம் என்று கூறி வெளியேறி விட்டனர்.

சாந்து பட்டர் என்று அழைக்கப்பட்ட சாமிநாத பட்டர் மட்டுமே தொடர்ந்து அர்ச்சனை செய்ய ஒப்புக்கொண்டு உள்ளே வந்தார். “அவாளும் பக்தா தானே, அம்பாளை சேவிக்க வரவாளை ஏன் நாம தடுக்கணும்?” என்று கேட்டார். அவரை அந்தப் பார்ப்பன சமூகம் ‘சாதிப் பிரஷ்டம்’ செய்துவிட்டது. அந்த மாத இறுதியில் மதுரை வந்த ராஜாஜி, ‘உங்களுக்கு என்ன வேண்டும்?’ என்று கேட்டபோதும், “எனக்கு அம்பாள் அருள் போதும், வேறு ஒன்னும் வேணாம்” என்று கூறிய மகத்தான மனிதர் அந்த சாந்து பட்டர். அவருடைய சாவில் கூட அவரின் சாதியினர் கலந்துகொள்ளவில்லை. ஆனால் வைத்த்தியநாதரின் பெயர் அறியப்பட்ட அளவிற்கு இன்றுவரை அவர் பெயர் அறியப்படவில்லை.

வைத்தியநாத அய்யர் உண்மையான சமத்துவத்தின் நம்பிக்கை கொண்ட கொள்கையாளர் என்று கூறிவிட முடியாது. கோயில்நுழைவுப் போராட்டத்தைப் பலமுறை எதிர்த்தவர் அவர். திருவிக தன் வாழ்க்கைக் குறிப்பில் அவர் குறித்து ஒரு செய்தியைக் கூறியுள்ளார்.

“திருப்பூரில் வாசுதேவ அய்யர் தலைமையில், தமிழ்நாடு காங்கிரஸ் இயக்கம் 1922 இல் கூடியபோது, நாடார் முதலியோர் கோயில் நுழைவைப் பற்றி இராமசாமி நாயக்கரால் ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அவர் பெரும் புயலைக் கிளப்பினார். அத்தீர்மானம் என்னால் ஆதரிக்கப்பட்டது. அதை எதிர்த்தவர் மதுரை வைத்தியநாத அய்யரும், கிருஷ்ண அய்யங்காருமாவார்”

என்று திருவிக எழுதுகின்றார். அதே மாதிரி, 1938 இல், கோயில் நுழைவை ஆதரித்துச் சட்டமன்றத்தில் எம்.சி.ராஜா ஒரு தீர்மானம் கொண்டுவந்தபோது, அதனைக் கடுமையாக ராஜாஜி எதிர்த்தார். இருப்பினும், 1939 இல் நடைபெற்ற மதுரை கோயில் நுழைவுப் போராட்டத்தை நாம் பாராட்டுகின்றோம். ஆனால் அதுதான் முதல் கோயில் நுழைவுப் போராட்டம் என்னும் வரலாற்றுத் திரிபை எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை உள்ளது.

அதேநேரம், வைதீகர்கள் நடுவில் ராஜாஜிக்கும், வைத்தியநாத அய்யருக்கும் பெரும் எதிர்ப்புகள் எழவே செய்தன. வர்ணாசிரம ஸ்வராஜ்ய சங்கத் தலைவரான ஆறுபாதி நடேச அய்யர் தூண்டுதலில் கோயில் நுழைவு எதிர்ப்புப் பாட்டுப் புஸ்தகங்கள் இரண்டு வெளிவந்த செய்தியைப் பேராசிரியர் தொ.பரமசிவன் குறிப்பிடுகின்றார். தர்மாம்பாள், பாகிரதியம்மாள் ஆகியோர் அந்தப் புத்தகங்களை எழுதியுள்ளனர்.

“என்தாயைப் பறையர் கையில் ஒப்புவித்துப்

பவிஷுடன் மார்தட்டுகிறார் பிரதமந்திரி”

என்பன போன்ற வரிகள் அப்புத்தகங்களிலே இடம்பெற்றுள்ளன.

வேறு எந்த நாட்டிலும், வேறு எந்த மதத்திலும் இல்லாத வகையில், தங்கள் கோயிலுக்குள் தாங்கள் செல்வதற்கு இங்குதான் இப்படிப்பட்ட தடைகளும், அதனை எதிர்த்த போராட்டங்களும் நடைபெற்றுள்ளன என்று கூறலாம்.

இப்போது அந்தத் தடைகள் பெரிதும் மங்கிவிட்டன என்றாலும், இன்றும் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆக முடியாத நிலைதான் உள்ளது என்பதை நாம் அறிவோம். அதற்கான சட்டப் போராட்டங்கள், கலைஞர் முதல்வராக இருக்கும்போது 1970இல் தொடங்கின, இன்றும் அப்போராட்டம் முழு வெற்றியடையவில்லை.

(களங்கள் தொடரும்)

அன்புடன்
சுப.வீரபாண்டியன்

பயன்பட்ட நூல்கள்
==================

1. சிதம்பரம் ((பிள்ளை), பி. – ஆலயப் பிரவேச உரிமை – திராவிடர் கழக வெளியீடு, சென்னை-7

2. வாலாசா வல்லவன் – “கோயில் நுழைவுப் போராட்டங்களில் திராவிடர் இயக்கங்களின் பங்களிப்பு” – அருள்பாரதி பதிப்பகம், ஆவடி, சென்னை-54

3. லஜபதி ராய், வழக்கறிஞர் – “நாடார் வரலாறு கருப்பா, காவியா?” – ராம்ஜி நாட்டார் வழக்காற்றியல் பதிப்பகம், மதுரை

4. வீரமணி, கி. – “கோயில் நுழைவுப் போராட்டம்” – திராவிடர் கழக வெளியீடு, சென்னை-7

5. பரமசிவன், தொ., பேராசிரியர் – “தெய்வங்களும் சமூக மரபுகளும்” – நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை-98

Disclaimer: எங்கள் செய்தி இணையதளத்தில் வரும் தொடர்கள் யாவும் பத்திரிகை டாட் காமிற்கே பிரத்தியேக, தனிப் பிரசுர உரிமை வழங்கப்பட்டுள்ளது . எனவே, பத்திரிகை டாட் காமின் முன் அனுமதியின்றி இதனை முழுவதுமாகவோ இல்லை இதில் வரும் சில பகுதிகளையோ உங்கள் பயன்பாட்டிற்கு உபயோகிக்க அனுமதியில்லை.