இந்தியா விடுதலை பெறுவதற்கு அரை நூற்றாண்டு முன்பு தொடங்கி, இன்றுவரையில் நாட்டில் தீராமல் இருக்கின்ற சிக்கல் ஒன்று உண்டென்றால், அது மொழிச் சிக்கல்தான்!

இந்தியா என்பது பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட நாடு. அதனால் பல்வேறு மொழிகள், பல்வேறு பண்பாடுகள், பல்வேறு பழக்க வழக்கங்கள் இருப்பது இயல்புதான். அவரவர் அடையாளங்களோடு அனைவரையும் ஏற்றுக்கொண்டு, வேற்றுமையில் ஒற்றுமை காண முயல்வதே இந்தியப் பன்மைத்துவத்தின் சிறப்பு. அதனை மறுத்து, ஒரே நாடு, ஒரே மொழி என்னும் கோட்பாட்டை முன்வைக்கும்போதுதான் மொழிச் சிக்கல் தோன்றி, வளர்ந்து, இன்று தீர்க்க முடியாத நிலையில் பெரும் அச்சுறுத்தலாக நம்முன் நிற்கிறது!

இந்திய விடுதலைக்குப் பத்து ஆண்டுகள் முன்பே தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்கிவிட்டது. அப்போது அது கல்வி மொழிச் சிக்கலாக இருந்தது. இந்தியா விடுதலை பெற்று அரசமைப்புச் சட்டம் உருவாகிக் கொண்டிருந்த வேளையில், அதே மொழி சார்ந்து. ஆட்சி மொழிச் சிக்கல் ஏற்பட்டது. விடுதலை பெற்ற ஏழெட்டு ஆண்டுகளிலேயே மொழி அடிப்படையில் இன்னொரு சிக்கல் உருவானது. மொழிவாரி மாநிலம் வேண்டுமா, கூடாதா என்பதாக அது இருந்தது. இவ்வாறு மூன்றுவிதமான மொழிச்சிக்கல்களை நம்நாடு எதிர்கொண்டுள்ளது.

தமிழ்நாட்டில் இந்தியை ஒரு பாடத்திட்டமாக, ராஜாஜி பிரதமராக (1937 இல் முதலமைச்சரைப் பிரதமர் என்றே அழைத்தனர்) இருந்தபோது, 125 பள்ளிகளில் இனி இந்தியும் ஒரு பாடமாக இருக்கும் என்று அறிவித்தார். அப்போது வெளிப்பட்ட எதிர்ப்பு, பெரும் போராட்டமாக மாறி, சற்றேறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் நீடித்தது. அது குறித்தே இப்பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம். என்றாலும், அதற்கு முன் இந்த மொழிச் சிக்கலின் தன்மையை, அன்றிலிருந்து இன்றுவரை தமிழ்நாட்டில் இந்திக்கு இருந்துவரும் எதிர்ப்பிற்கான காரணத்தை நாம் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும்.

இந்தியா முழுமைக்கும் ஒரே மொழி பொது மொழியாக இருக்க வேண்டும் என்ற கருத்து 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே வெளிவந்துவிட்டது. அதனை முதலில் கூறியவர், ஆரிய சமாஜம் என்னும் அமைப்பினை 1875 ஆம் ஆண்டு நிறுவிய தயானந்த சரஸ்வதி. வேத தர்மத்தைக் காப்பாற்றுவதற்கான சீர்திருத்த இயக்கமாக ஆரிய சமாஜம் உருவாக்கப்பட்டது. “காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரை உள்ள இந்தியர்கள் அனைவரும், இந்தியை அறிந்துகொள்கிற, இந்தி மொழி பேசுகிற அந்த நாளைப் பார்ப்பதற்காகக் காத்திருக்கிறேன்” என்றார் தயானந்த சரஸ்வதி. அதற்குப் பின்னால் அதே கருத்தினைத் தேசியத் தலைவர்கள் பலர் வழிமொழிந்தனர்.

வழக்கம்போல், இந்துத்துவச் சிந்தனையை அப்போதே விதைத்த பாலகங்காதர திலகர், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அக்கருத்தை வழிமொழிந்தார். 1905 டிசம்பர் மாதம் பனாரஸில் பேசும்போது, நாட்டில் ஓர் ஒற்றுமை வரவேண்டுமெனில், அனைவருக்குமான ஒரு பொதுமொழி வேண்டும். அது தேவநாகரி வரிவடிவில் எழுதப்படும் இந்தியாக இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

1905 இல், வங்கப் பிரிவினையையொட்டி, ஆங்கிலேயருக்கு எதிரான ஓர் எழுச்சி நாடெங்கும் ஏற்பட்டிருந்தது. அத்தருணத்தில் முன்வைக்கப்பட்ட ‘ஒரு நாடு ஒரு மொழி’ என்னும் சிந்தனை மக்களைப் பற்றிக்கொண்டது. ஆனாலும், விடுதலைப் போராட்ட எண்ணத்திற்கு முன்னால் , இது பின்னுக்குப் போய்விட்டது.

காந்தியாரின் இந்திய வருகைக்குப் பின்னும், அவர் விடுதலைப் போராட்டத்திற்குத் தலைமை ஏற்ற பின்னும் பல்வேறு மாற்றங்கள் நடைபெறத் தொடங்கின. அவற்றுள் ஒன்றாக இந்தப் பொதுமொழிச் சிக்கலும் இருந்தது. 1917 அக்டோபரில், தேசிய மொழியின் தேவை பற்றி எழுதிய காந்தியார், ஐந்து நிபந்தனைகளை விதித்தார். 1. அரசு அதிகாரிகள் கற்றுக்கொள்ளும் வகையில் அம்மொழி எளிமையாக இருக்க வேண்டும் 2. சமயம், அரசியல், பொருளாதாரம் ஆகிய தளங்களில் சேவையாற்ற உரிய ஊடகமாக அது இருக்க வேண்டும். 3 இந்தியாவின் பெரும்பான்மை மக்களால் பேசப்படும் மொழியாக அது இருக்க வேண்டும். 4. வெகு மக்களும் எளிதில் கற்றுக்கொள்ளக் கூடிய மொழியாக இருக்க வேண்டும். 5. தற்காலிகமான நோக்கங்களுக்காக இம்மொழித் தேர்வு அமையக்கூடாது. ஆகமொத்தம், சுற்றி வளைத்துக் காந்தியாரும் இந்தி மொழிக்கான பரிந்துரையாகவே இதனைக் கூறுவது தெளிவாகத் தெரிகின்றது.

ஆனால் 1920 க்குப்[ பிறகு, காந்தியார் தன் மொழிக்கொள்கையை மாற்றிக் கொண்டார். இந்துஸ்தானி மொழியை அனைவரும் ஏற்க வேண்டும் என்றார். 1923 டிசம்பர் 23 அன்று கான்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் அவர் இக்கருத்தை வெளியிட்டார். அதனால் அம்மாநாடு இன்றும் இந்திய வரலாற்றில், குறிப்பாக இந்திய மொழிச் சிக்கல் பற்றிய வரலாற்றில் மிக முதன்மையான இடத்தைப் பெறுகின்றது.

இந்தியிலிருந்து இந்துஸ்தானிக்குக் காந்தியாரும், காங்கிரசும் மாறியதற்கு ஒரு பெரும் காரணம் பின்புலத்தில் இருந்தது. இந்திய விடுதலைப் போராட்டத்தில், இந்துத்துவ மதவெறியை ஊட்டி, மக்களை ஒன்றுபடுத்த இயலும் என்று கருதிய திலகருக்கும், அவருக்குப்பின் தலைமை ஏற்ற காந்தியாருக்கும் இடையில் உள்ள பெரிய வேறுபாடு இங்குதான் உள்ளது. இந்து, முஸ்லீம் இருவரையும் ஒருங்கிணைத்தே விடுதலைப் போராட்டத்தை வளர்த்தெடுக்க முடியும் என்பது காந்தியாரின் அழுத்தமான நம்பிக்கையாக இருந்தது. அதன்பொருட்டே. இந்துஸ்தானி மொழியை அவர் முன்மொழிந்தார்.

இந்துஸ்தானி என்பது, இந்தி-உருது ஆகிய இரு மொழிகளின் கலவை. அதில் சமஸ்கிருதத்தின் தாக்கமோ, அரபி மொழியின் தாக்கமோ மிகுதியாக இல்லை. எனவே இரு மதத்தைச் சேர்ந்தவர்களும் அதனை வரவேற்றனர். இனிமேல் காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகள் அனைத்தும் இந்துஸ்தானி மொழியிலேயே நடைபெறும் என்றும் கான்பூர் மாநாடு அறிவித்தது. அது நிலைகொள்ள இயலாது, ஆங்கிலமும் பயன்படுத்தப்படலாம் என்று அடுத்த சில ஆண்டுகளில் முடிவானது என்றாலும், கான்பூர் மாநாடுதான், நாடு முழுவதும் ஒரே மொழி என்னும் சிக்கலை வேரூன்றச் செய்தது என்பதில் இருகருத்தில்லை.

அந்தக் காலகட்டத்தில் அதற்குப் பெரிதாக எதிர்ப்பும் எழவில்லை. 14 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் 1937 இல் தமிழ்நாட்டில்தான் வெடித்தது. (இந்துஸ்தானி வெகு விரைவில் செல்வாக்கை இழந்துவிட்டது. மீண்டும் இந்தியே பொதுமொழி என்னும் இடத்திற்கு வந்தது) அதிலும் கூட ஒரு வேறுபாடு இருந்தது. பொதுமொழிச் சிக்கலாக அது எழவில்லை. பாடமொழிச் சிக்கலாகவே தமிழ்நாட்டில் உருக்கொண்டது.

1935 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தனர். அதன்படி, கூடுதல் உரிமைகளுடன், மாநில ஆட்சிகள் அமைய வாய்ப்பு வந்தது. அதனைப் பயன்படுத்திக் கொண்டு, காங்கிரஸ் கட்சி முதன்முறையாகத் தேர்தலில் போட்டியிட்டது. (அதற்கு முன்பு தேர்தலில் நின்றது சுயராஜ்ஜயக் கட்சிதான்). அத்தேர்தலில் ஆட்சியிலிருந்த நீதிக்கட்சி தோல்வியைத் தழுவ, காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்றது. 1937இல் நடைபெற்ற சென்னை மாகாணத் தேர்தலில் காங்கிரஸ் 159 இடங்களில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது. நீதிக்கட்சிக்கு 16 இடங்களும், முஸ்லீம் லீக் கட்சிக்கு 10 இடங்களும் மட்டுமே கிடைத்தன.

1937 ஜூலை 14 ஆம் நாள் காங்கிரஸ் சார்பில், ராஜாஜி சென்னை மாகாணத்தின் பிரதமராக(முதலமைச்சர்)ப் பொறுப்பேற்றார்.

பதவி ஏற்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, சென்னையில் உள்ள தக்ஷிண பாரத் இந்தி பிரச்சார சபாவில் பேசிய ராஜாஜி, “தென் இந்தியர்கள் வடஇந்தியர்களைச் சரியாகப் புரிந்து கொள்ளவும், இந்திய அரசியல், பொருளாதார நிலையைத் தமிழ்நாட்டில் மேம்படுத்தவும், பள்ளிகளில் இந்தியைக் கட்டாய பாடமாக்குவது சிறந்த வழி” என்று பேசினார். அப்படியானால், பதவிக்கு வருவதற்குச் சில நாள்கள் முன்பே, ராஜாஜிக்கு அந்த எண்ணம் வந்துவிட்டதோ என்று தோன்றும். இல்லை, ஓராண்டிற்கு முன்பே அந்த எண்ணம் அவருக்கு வந்துவிட்டது என்பதை, 1936 ஆம் ஆண்டு திருச்சி கல்லூரி ஒன்றில் பேசிய அவருடைய நெருங்கிய நண்பர் மருத்துவர் டி.எஸ்.எஸ். ராஜன் பேச்சிலிருந்து ஆய்வாளர்கள் எடுத்துக் காட்டுகின்றனர். ராஜாஜி ஆட்சிக்கு வந்தால், இந்தியைக் கட்டாயப் பாடமாக்க விருப்பம் கொண்டுள்ளார்” என்று அவர் தன் உரையில் குறிப்பிட்டுள்ளார்.

தன் நீண்டநாள் விருப்பத்தை ராஜாஜி, அமைச்சரவையைக் கூடக் கேட்காமல், பதவியேற்ற ஒரு மாத காலத்திற்குள், 1937 ஆகஸ்ட் 10 அன்று சென்னை, ராமகிருஷ்ணா பள்ளியில் உரையாற்றும்போது முதன்முதலில் அதிகார்பூரமாகத் தெரிவித்தார். அடுத்த கல்வி ஆண்டு முதல் தமிழகத்தின் பள்ளிகள் பலவற்றில் இந்தி கட்டாயப் பாடமாக அமையும் என்றார்.

அந்த அறிவிப்பு, நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. அடுத்த நாளே அதற்கான எதிர்வினைகள் தொடங்கிவிட்டன.

ஆனந்தவிகடன் இதழ் ராஜாஜியின் கருத்தை வரவேற்று எழுதியது. அன்றையக் காங்கிரஸ் தலைவர்களில் முக்கியமானவரான சத்தியமூர்த்தி அய்யர், அறிவிப்பை வரவேற்றத்துடன், சமஸ்கிருதத்தையும் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்றார். ஆனால் 11.08.1937 ஆம் நாள் மெயில் ஆங்கில நாளேடு அதனைக் கண்டித்து எழுதியது. பிரதமர் அவசரப்படுகிறார் என்று சுட்டிக்காட்டியது. அமைச்சரவையில் கலந்து பேசி, நிதானமாக முடிவுக்கு வருமாறு கேட்டுக்கொண்டது.

ஆகஸ்ட் 22 ஆம் நாள் திருச்சிக்கு அருகில் துறையூரில் நடைபெற்ற சுயமரியாதை மாவட்ட மாநாடு, முதல் எதிர்ப்புக் குரலைப் பதிவு செய்தது. அம்மாநாட்டிற்குத் தலைமை தாங்கிய அண்ணாதுரை என்னும் இளைஞர் இந்தித் திணிப்பைக் கண்டித்துத் தன் உரையில் பேசினார். ஆம், நமக்கு கிடைக்கும் அண்ணாவின் முதல் உரை அதுதான்.

அதன்பிறகு, தஞ்சைக்கு அருகில் உள்ள கரந்தை மற்றும் திருவையாறு நகரங்களில் எதிர்ப்புப் பேரணிகள் ஆகஸ்ட் இறுதியில் நடைபெற்றன.

போராட்டத்தில் பெரியார் ஈடுபட்ட பின், அது மக்கள் போராட்டமாக மாறியது. கூட்டம், பேரணி, மாநாடு, மறியல், கைது என்று அப்போராட்டம் 1940 தொடக்கம் வரையில் நீண்டது. ஒவ்வொரு நாளும் என்ன நடந்தது என்று விரிவாக, மா. இளஞ்செழியன். தன் நூலில் எழுதியுள்ளார். அப்போராட்டம் குறித்து வேறு பல நூல்களும் வெளிவந்துள்ளன.

 

‘திராவிட இயக்க வரலாற்றில் 1930களில் நிகழ்ந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் முக்கிய மைல் கற்கள். இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள், திராவிட இயக்கத்தை மாணவர்கள், இளைஞர்கள், வட்டார ஜீவிகள் (குறிப்பாக எழுத்தாளர்கள், ஆசிரியர்கள்) மத்தியில் வெகுஜனப்படுத்தியது” என்று எழுதுகிறார் பேராசிரியர் முத்துமோகன்.

அந்தப் போராட்டத்தின் முழு நிகழ்வுகளையும் அடுத்த வாரம் பார்ப்போம்!

(களங்கள் தொடரும்)

அன்புடன்
சுப.வீரபாண்டியன்

பயன்பட்ட நூல்கள்
==================

1. இளஞ்செழியன், மா. – “தமிழன் தொடுத்த முதல் போர்” – சுயமரியாதை பிரச்சார நிறுவனம், சென்னை-8

2. முத்துமோகன், ந. – “தமிழ் அடையாள அரசியலின்
இயங்கியல்” – நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை-98

3, Ramasamy, A. Dr. – “Struggle for Freedom of Languages in
India” – Puthuvasantham Pathippagam, Madurai-20

Disclaimer: எங்கள் செய்தி இணையதளத்தில் வரும் தொடர்கள் யாவும் பத்திரிகை டாட் காமிற்கே பிரத்தியேக, தனிப் பிரசுர உரிமை வழங்கப்பட்டுள்ளது . எனவே, பத்திரிகை டாட் காமின் முன் அனுமதியின்றி இதனை முழுவதுமாகவோ இல்லை இதில் வரும் சில பகுதிகளையோ உங்கள் பயன்பாட்டிற்கு உபயோகிக்க அனுமதியில்லை.