சுபவீ எழுதும் போராட்டங்கள் – இந்தி எதிர்ப்புப் போராட்டம் (தொடர்ச்சி)

1937 ஆகஸ்ட் மாதமே, தமிழ்நாட்டின் பிரதமர் ராஜாஜி, பள்ளிக்கூடங்களில் இந்தி இனிமேல் கட்டாயப் பாடமாக இடம்பெறும் என்று அறிவித்துவிட்ட போதிலும், 1938 ஏப்ரல் 25 ஆம் நாள் அன்றுதான் அது நடைமுறைக்கு வருவதாக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

ஆனால் 37 ஆம் ஆண்டே அதற்கு எதிர்ப்புகள் தோன்றிவிட்டன. அந்த எதிர்ப்பு முதலில், தமிழ் அறிஞர்களிடமிருந்தே புறப்பட்டது. அதன் பின்பே திராவிடர் கழகம் இந்தி எதிர்ப்பு மாநாடுகளை நடத்தியது. ஆதலால், தமிழ் அறிஞர்கள் தொடங்கிய ஒரு போராட்டத்தில் இடையில் வந்து பங்கேற்ற திராவிடர் கழகம், அப்போராட்டம் மற்றும் வெற்றிக்கான முழு உரிமையையும் எடுத்துக் கொள்கிறது என்று ஓர் குற்றச்சாற்றை இப்போது சிலர் வைக்கின்றனர். அந்தக் குற்றச்சாற்று உண்மையன்று. 1920களிலேயே, இந்தித் திணிப்பை முன்கூட்டியே உணர்ந்தும், அதனை எதிர்த்தும் குடியரசு இதழில் பெரியார் எழுதியுள்ளார் என்பதே உண்மை.

1926 ஆம் ஆண்டு குடியரசில் அவர் எழுதியுள்ள கட்டுரை ஒன்று வரலாற்றுச் சிறப்புடையது. அதில் அவர்,

“100க்கு 97 பேராகவுள்ள பார்ப்பனர் அல்லாதார் செலவில், 100க்கு 3 பேராக உள்ள பார்ப்பனர்கள் 100க்கு 100 பேரும் இந்தி படித்துள்ளனர். ஆரிய ஆதிக்கத்தை நிலைநாட்டி, வடமொழி, உயர்வுக்கு வகைதேடவே, ஒரு ஒடிந்துபோன குண்டூசி அளவு பயனும் இல்லாத இந்தி மொழியை இங்கு பிரச்சாரம் செய்து வருகிறார்கள். தமிழ் மொழி வளர்ச்சிக்காக இதில் 100இல் ஒரு பங்கு கவலையாவது இவர்கள் எடுத்துக் கொள்கிறார்களா? பார்ப்பனரல்லாதார்க்கு ஏற்படும் பல ஆபத்த்துகளில் இந்தியும் ஒன்றாக முடியும் போலிருக்கிறது”

என்று தெளிவாக எழுதியுள்ளார். அது மட்டுமின்றி, 1931 ஆம் ஆண்டு நன்னிலத்தில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில், இந்தி நுழைவைக் கண்டித்து ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆதலால், இந்தியால் வரக்கூடிய தீங்கைப் பெரியார் நெடுநாள்களுக்கு முன்பே உணர்ந்திருக்கிறார் என்பது தெரிகிறது. அதன் அடிப்படையில்தான், 1937 டிசம்பர் திருச்சியிலும். 1938 பிப்ரவரி காஞ்சியிலும் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாடுகளை நாம் பார்க்க வேண்டும். காஞ்சி மாநாட்டில் நிறைவுரையாற்றிய பெரியார், “இந்தியை எதிர்த்துப் போர் போர் போர்” என்று போர்முழக்கம் செய்தார்.

தமிழ்நாட்டில் பள்ளிகளில் இந்தியும் ஒரு கட்டாயப் பாடம் என்று ராஜாஜி அறிவித்த அதே நேரத்தில்தான், ஹரிபுராவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடு (1938 மார்ச்) காந்தியார் விரும்பிய வார்தா கல்வித் திட்டத்திற்குத் தன் ஏற்பிசைவை வழங்கியது. தாய்மொழிக் கல்விக்கு முதலிடம் தரும் வார்தா திட்டத்தை ஒட்டியதே ராஜாஜியின் கல்வித் திட்டம் என்றும் அன்று பேசப்பட்டது.

இரண்டிற்கும் ஓரிரு ஒற்றுரைகள் இருந்தபோதிலும், இரண்டும் வெவ்வேறானவை என்றே சொல்ல வேண்டும். 1931 இல் லண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் பேசும்போதே, காந்தியார் ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்தியுள்ள கல்வித் திட்டத்தைக் கடுமையாகச் சாடினார். இத்திட்டம் வீணானது என்பது மட்டுமின்றி, உறுதியாகத் தீங்கும் விளைவிக்கக் கூடியது (“not only wasteful but positively harmful“) என்றும் குறிப்பிட்டார்.

தொடர்ச்சியாகக் கல்விக் கொள்கை பற்றிய திட்டங்களைத் தன் ஹரிஜன் ஏட்டில் எழுதியும் வந்தார். குறிப்பாக, 1937 ஜூன் 31 ஆம் நாளிட்டு வெளிவந்த ஹரிஜன் இதழில், கல்வி பற்றிய தன் கருத்துகளை விரிவாகவே எழுதியுள்ளார். அதன் அடிப்படையில், மராத்தியத்தில் உள்ள வார்தா நகரில் 1937 அக்டோபர் 22, 23 ஆகிய நாள்களில், சிறந்த கல்வியாளர்களைக் கொண்டு ஒரு கலந்துரையாடலும், அதன் முடிவில், புதிய கல்வித் திட்டத்தை வகுக்க ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. டாக்டர் சாகிர் உசேன் தலைமையில் உருவாக்கப்பட்ட அக்குழுவில், வினோபா பாவே, காகா கலேல்கர், ஜெ.சி.குமரப்பா உள்ளிட்ட ஒன்பது பேர் உறுப்பினர்களாக இருந்தனர்.

அக்குழு தன் அறிக்கையை 1938 மார்ச் மாதம் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் முன்வைத்தது. காங்கிரஸ் அதனை ஏற்றுக் கொண்டது. அவ்வறிக்கை, குறிப்பாக மூன்று திட்டங்களைப் பரிந்துரை செய்தது. முதல் ஏழு ஆண்டுகளுக்கு அனைத்துக் குழந்தைகளுக்கும், இலவசமான, கட்டாயக் கல்வி வழங்கப்பட வேண்டும் என்பதும், தாய்மொழிவழிக் கல்வியாக அது இருக்க வேண்டும் என்பதும். குழந்தைகளின் வாழ்நிலையை ஒட்டிய கைத்தொழில் ஒன்று கண்டிப்பாகக் கற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்பதும் அந்தத் திட்டங்கள் ஆகும்.

                       ராஜாஜி

இதற்கும் ராஜாஜி கொண்டுவந்த இந்தித் திணிப்புக்கும் எந்தத் தொடர்புமில்லை. காந்தியாரின் பெயர் பயன்படுத்தப்படுமானால், அதற்கு எதிர்ப்பு இருக்காது என்ற எண்ணத்திலேயே அப்படிச் சொல்லப்பட்டது. எனினும் என்ன வேடிக்கை என்றால், ராஜாஜி மீண்டும் 1952 இல் தமிழக முதமைச்சராக வந்தபோது, வார்தா திட்டத்தில் சொல்லப்பட்டுள்ள, “குழந்தைகளின் வாழ்நிலை சார்ந்த கைத்தொழில்” என்பது நடைமுறைப்படுத்தப்பட்டது. அதுவே குலக்கல்வித் திட்டம் என்று அழைக்கப்பட்டது. அது குறித்துப் பின்பகுதியில் பார்க்க இருக்கின்றோம்.

எவ்வாறாயினும், காந்தியாரின் பெயர் சொல்லியும் இத்திட்டம் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 1938 ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட இந்தித் திணிப்புத் திட்டம், ஜூன் மாதமே பெரும் எதிர்ப்புகளைச் சந்தித்தது. ராஜாஜியின் வீட்டின் முன்பும் மற்றும் பொது இடங்களிலும் தொடர்ந்து மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. மறியலுக்குத் தலைமை ஏற்றுக் களம் புகும் தலைவரை அய்யா பெரியார் சர்வாதிகாரி என்று அழைத்தார். செ.தெ. நாயகம் முதல் சர்வாதிகாரியாக நியமிக்கப்பட்டார். அடுத்தடுத்த சர்வாதிகாரிகள் பெயர்களும் அறிவிக்கப்பட்டன. தமிழகம் எங்கும் ஒவ்வொரு நாளும் போராட்டம், மறியல், சிறை என்று ஆயிற்று.

பட்டுக்கோட்டை அழகிரிசாமி

புதுவகைப் போராட்ட முறையாக, 1938 ஆகஸ்ட் 1 ஆம் தேதி, பட்டுக்கோட்டை அழகிரிசாமி தலைமையில் திருச்சியிலிருந்து சென்னை நோக்கி ஒரு ‘தமிழர் படை’புறப்பட்டது. 42 நாள்கள், நடந்து சென்னைக்கு வந்த அப்பேரணி, வரும் வழியில் எல்லாம் கூட்டங்களை நடத்திக் கொண்டே வந்தது. 87 ஊர்களில் கூட்டங்கள் நடத்தப்பட்டதாகச் செய்திகள் கூறுகின்றன. மூவலூர் ராமாமிர்தத்தம்மையார், நகரதூதன் ஆசிரியர் மணவை திருமலைசாமி ஆகியோர் அப்படையில் இடம்பெற்றிருந்தனர்.
அப்பேரணி, வெகு மக்களை ஈர்த்துள்ளது. வெளியில் இருந்த பலரைக் கட்சிக்குள் கொண்டுவந்துள்ளது. குறிப்பாக, தலைவர் கலைஞர் அந்தக் காலகட்டத்திலேதான் பொதுவாழ்வுக்கு வந்துள்ளார். அப்போது அவருக்கு வயது வெறும் பதினான்குதான். பள்ளி நண்பர்களை அழைத்துக்கொண்டு, திருவாரூர்த் தெருக்களில் ஊர்வலம் நடத்தியுள்ளார். பிறகு ‘மாணவநேசன்’ என்று ஒரு கையெழுத்து ஏடு நடத்தியுள்ளார். அதன் பரிணாம வளர்ச்சிதான் இன்றும் வெளிவந்துகொண்டிருக்கும் முரசொலி ஏடு. அதுவரையில் காங்கிரஸ் கட்சியில் இருந்த என்.வி.நடராசன், இந்தித் திணிப்பை ஏற்க முடியாமல், திமுக விற்கு வந்துள்ளார்.

அழகிரி தலைமையில் புறப்பட்ட தமிழர் படை, வழியில் பல எதிர்ப்புகளையும், தடைகளையும் சந்தித்தது. எனினும் தடைகள் தகர்த்து, 11.09.1938 அன்று சென்னை வந்தடைந்தது.அப்படையைச் சென்னை கடற்கரையில் நடைபெற்ற ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் வரவேற்று ஆர்ப்பரித்துள்ளது.

அந்தக் கடற்கரைக் கூட்டத்தில்தான், தந்தை பெரியார், தமிழ்க்கடல் மறைமலையடிகளார், நாவலர் சோமசுந்தர பாரதியார் என்று முப்பெரும் தலைவர்கள் ஒன்றுகூடிப் பேசியுள்ளனர். அந்தக் கூட்டத்தில்தான், முதன்முதலாகத் “தமிழ்நாடு தமிழருக்கே” என்ற முழக்கம் எழுப்பப்பட்டது.

இதற்கிடையில் இந்திய அளவிலும் ஒரு மாற்றம் நடந்தது. முஸ்லீம் மக்களிடையே பிரிவினை எண்ணம் எழத்தொடங்கியிருந்தது. அதன்பொருட்டு, காந்தியார், சுபாஷ் சந்திரபோஸ், ஜின்னா மூவரும் சந்தித்துப் பேசினர். அப்போது ஜின்னா, பிரிந்து போகாமல் இருக்க, 14 நிபந்தனைகளை முன்வைத்தார். அவற்றுள் ஒன்று, இந்தியைப் பொதுமொழியாகத் திணிக்கக்கூடாது என்பதாகும். காங்கிரஸ் அந்தக் கோரிக்கைகளை ஏற்கவில்லை.

இந்தித் திணிப்பின் அடிப்படையில், காங்கிரஸ், முஸ்லீம் லீக் இடையே ஒரு விரிசல் ஏற்பட்டது. அதுவே, தமிழகத்தில், திமுக, முஸ்லீம் லீக் கட்சிகள் நெருங்கி வருவதற்கும் காரணமானது.

செப்டம்பர் 11 ஆம் நாள் கடற்கரைக் கூட்டத்திற்குப் பிறகு, தமிழகம் ஒரு பெரும் எழுச்சியைக் கண்டது. பெரியாரும் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை செல்வதென்று முடிவாயிற்று. அதற்கிடையில், 1938 நவம்பர் 13 அன்று, சென்னை, ஒற்றைவாடைத் திரையரங்கில், தமிழ்நாடு பெண்கள் மாநாடு ஒன்று நடைபெற்றது. அது வரலாற்றுப் புகழ் பெற்ற மாநாடு. அந்த மாநாட்டில், பெரியார் ஆற்றிய உரையும் மிகக் குறிப்பிடத்தக்கது. சிறை செல்லும் ஆண்களைப் பாராட்டி வழியனுப்பும் பெண்களாக இருந்தால் மட்டும் போதுமானதில்லை. நீங்களும் சிறை செல்லும் பெண்களாக மாறவேண்டும் என்றார் பெரியார். அதனை ஏற்று, அடுத்தடுத்து நடந்த மறியல் போராட்டங்களில் கலந்துகொண்டு, 32 குழந்தைகளோடு, 73 பெண்கள் சிறை புகுந்தனர். பெண்களின் வருகைக்குப் பின் அந்தப் போராட்டம் மேலும் ஒரு புத்துணர்ச்சி பெற்றது.

அந்த மாநாட்டிற்கு இன்னொரு பெருமையும் உண்டு. அதில்தான், அய்யாவிற்குப் பெரியார் என்ற பட்டம் வழங்கப்பட்டது. இன்றும் அப்பெயரே நின்று நிலைத்துள்ளது. ஊடகங்களில், மேடைகளில் சிலர் இன்றும் ஈவேரா என்று சொல்லிச் சொல்லிப் பார்க்கின்றனர். ஆனால் பெரியார் என்னும் பெருமைக்குரிய சொல்லையே மக்கள் மொழியில் இன்றும் பார்க்க முடிகிறது.

போராட்டம் ஓர் எல்லையை அடைந்தும், பயன் ஏதும் ஏற்படாததால், 26.11.1938 அன்று, பெரியாரே மறியலில் கலந்துகொண்டு சிறை செல்கின்றார். நீதிமன்றத்தில் அவர் வழக்கம்போல் வாதாடவில்லை. பார்ப்பனர் ஒருவர் நீதிபதியாய் அமர்ந்திருக்கும் இம்மன்றத்தில் தனக்கு நீதி கிடைக்காது என்று நீதிபதியின் முன்பாகவே சொல்லிவிடுகிறார். நீங்களும், மந்திரிகளும் திருப்தி அடைகின்ற வகையில், எவ்வளவு அதிகபட்சத் தண்டனை கொடுக்க முடியுமோ, அதனைக் கொடுக்குமாறு வணக்கத்துடன் கேட்டுக்கொள்கிறேன் என்றார் பெரியார். நீதிமன்றம் விதித்த அபராதத் தொகையையும் கட்ட அவர் மறுத்துவிட்டதால், அதற்கும் சேர்த்து, நீதிபதி மாதவ ராவ் மூன்று ஆண்டுக் கடுங்காவல் தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கின்றார்.

முதலில் சென்னையிலும், பிறகு பெல்லாரியிலும். அதன்பின் கோவையிலும் பெரியார் சிறைகளில் அடைக்கப்பட்டார். பெல்லாரிச் சிறையில்தான் பெரியார் கல்லுடைத்தார். தமிழுக்காகச் சிறை சென்று கல்லுடைத்த பெரியாரைத்தான் இன்றைய “தமிழ்த் தேசியவாதிகள்” எனப்படுவோர் தமிழுக்குத் தீங்கு செய்தவர் என்கின்றனர். இன்னொரு நகை முரண் என்னவெனில், அன்று இந்தியை ஆதரித்து நாடெங்கும் பரப்புரை ஆற்றிய ம.பொ,சி அவர்களைத் தமிழ்க் காவலர் என்று போற்றுகின்றனர்.

என் வாழ்க்கைப் போராட்டம் என்னும் நூலில் ம.பொ.சி யே இதனைக் குறிப்பிட்டுள்ளார். “வடசென்னையைப் பொறுத்தமட்டில், நான்தான் பிரச்சாரப் பீரங்கியாதலால், இந்தி எதிர்ப்புக்கு எதிர்ப்புக் காட்டி, நடந்த பிரச்சாரத்தில் பெரும்பங்கு கொண்டேன்” என்று எழுதுகின்றார். இந்தி எதிர்ப்பை எதிர்த்தவர், தமிழ்க் காவலர் ஆகிவிட்டார் பாருங்கள்!

இந்தி எதிர்ப்பு வீரர் நடராசன்

சிறை சென்ற நடராசன் என்னும் பட்டியலினத்தைச் சேர்ந்த தோழர் 1939 ஜனவரி 15 அன்று சிறையிலேயே மாண்டார். தமிழக வரலாற்றில் மொழிக்காக உயிர்கொடுத்த முதல் மாவீரர் அவர்தான். அவரைத் தொடர்ந்து 12/03.1939 அன்று தாளமுத்து (நாடார்) சிறையில் உயிர் துறந்தார். வெளியில் பெரிய எழுச்சி ஏற்பட்டது.

நிலைமை மோசமாவதைக் கண்ட ராஜாஜி அரசு, காரணம் எதனையும் சொல்லாமல், 1939 மே மாதம், பெரியாரைச் சிறையிலிருந்து விடுதலை செய்துவிட்டது. அவர் விடுதலையை நாடே கொண்டாடியது. ஆனால் பெரியார் மட்டும் மகிழ்சசி அடையவில்லை. “போன காரியம் முடியாமல் விடுதலை ஆகி என்ன பயன்?” என்று கேட்டார்.

அதன்பிறகும் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடர்ந்தது. அந்த நேரத்தில், காங்கிரஸ் கட்சி அகில இந்திய அளவில் எடுத்த முடிவின்படி, 1939 அக்டோபர் மாதம், ராஜாஜியின் அமைச்சரவையும் பதவி விலகி விட்டது. அதன் பின்னர் 1940 பிப்ரவரி 21 ஆம் நாள் ஆங்கிலேய அரசு, இந்தி கட்டாயப் பாடம் என்னும் ஆணையை விலக்கிக்கொண்டது.

தமிழகத்தின் முதல் இந்தி எதிர்ப்புப் போர் வெற்றியோடு நிறைவடைந்தது. ஆனால் அடுத்தடுத்தும் இந்தி திணிக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. போராட்டங்களும் தொடர்ந்து கொண்டே இருந்தன. இன்றைய நிலையும் அதுதான். திணிப்பும் ஓயவில்லை, எதிர்ப்பும் ஓயவில்லை.

(களங்கள் தொடரும்)
அன்புடன்
சுப.வீரபாண்டியன்

பயன்பட்ட நூல்கள்
==================

1. வீரமணி, கி – “திராவிடர் கழக வரலாறு” -திராவிடர் கழக வெளியீடு, சென்னை-7

2. இளஞ்செழியன், மா. – “தமிழன் தொடுத்த முதல் போர்” – சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், சென்னை-7

3. கருணானந்தம், கவிஞர் – “தந்தை பெரியார் முழுமுதல் வாழ்க்கை வரலாறு” – வேலா வெளியீட்டகம், கோவை-42

4, சிவஞானம், ம.பொ. – “எனது போராட்டம்” – பூங்கொடி பதிப்பகம், சென்னை-4

5. வீரமணி, கி. – “நீதிமன்றங்களில் தந்தை பெரியார்” – திராவிடர் கழக வெளியீடு, சென்னை-7

6. “குடி அரசு களஞ்சியம் – தொகுதி 26” (1939 ஜனவரி – மே) – பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், சென்னை-7

Disclaimer: எங்கள் செய்தி இணையதளத்தில் வரும் தொடர்கள் யாவும் பத்திரிகை டாட் காமிற்கே பிரத்தியேக, தனிப் பிரசுர உரிமை வழங்கப்பட்டுள்ளது . எனவே, பத்திரிகை டாட் காமின் முன் அனுமதியின்றி இதனை முழுவதுமாகவோ இல்லை இதில் வரும் சில பகுதிகளையோ உங்கள் பயன்பாட்டிற்கு உபயோகிக்க அனுமதியில்லை.