நாம் இதுவரையில் கண்ட போராட்டங்களுக்கும், இப்போது காணவிருக்கும் போராட்டத்திற்கும் இடையில் இரண்டு பெரிய வேறுபாடுகள் உள்ளன. அவை அனைத்தும் தமிழகத்தில் மட்டும் நடைபெற்றவை. இதுவோ இந்திய அளவிலானது. ஆலைத் தொழிலாளர் போராட்டம், குருகுலப் போராட்டம், வைக்கம் போராட்டம் எல்லாம் அறவழியிலானது. இப்போராட்டம் முழுக்க முழுக்க ஆயுதமேந்தி நடந்தது.

இப்போராட்டம், 1942 ஆகஸ்ட் மாதம் தொடங்கியதால், இதனைச் சுருக்கமாக ஆகஸ்ட் போராட்டம் என்று அழைப்பர். விடுதலைப் போராட்டத்தின் இறுதிக் கட்டமாகவும், வெள்ளையனே வெளியேறு என்ற முழக்கத்தோடு நடந்த போராட்டமாகவும் இருந்தமையால், ‘வெள்ளையனே வெளியேறு போராட்டம் என்றும் அழைப்பதுண்டு.

இதற்கு முன்பும் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழகம் தன் பெரும்பங்கைச் செலுத்தியுள்ளது. பாஞ்சாலங்குறிச்சியும், சிவகங்கையும்,. வேலூரும் 18, 19 ஆம் நூற்றாண்டுகளிலேயே விடுதலைப் போராட்டங்களைச் சந்தித்துள்ளன. 1920க்குப் பிந்திய ஆண்டுகளிலும், 1930 ஆம் ஆண்டு, காந்தியார் வடபுலத்தில் தண்டி யாத்திரை தொடங்கிய வேளையில், இங்கே சர்தார் வேதரத்தினம் தலைமையில், திருச்சியிலிருந்து வேதாரண்யம் நோக்கி உப்பு சத்தியாகிரக யாத்திரை .நடைபெற்றது. ஆனால் அது அறவழிப் போராட்டம் என்பதோடு, இந்த அளவிற்குப் பெரிய வீச்சை அது ஏற்படுத்தவில்லை. மேலும் இந்தப் போராட்டமோ, இந்தியாவை மட்டுமின்றி, இங்கிலாந்து அரசையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

இரண்டாம் உலகப் போர் உச்ச கட்டத்தில் நடந்துகொண்டிருந்தபோது, இந்தியாவில் ஆகஸ்ட் போராட்டம் தொடங்கியது. இரண்டுக்குமிடையில் உள்ள தொடர்பை நாம் அறிந்து கொள்வது முதன்மையான தேவையாகும்.

1939 செப்டம்பர் மாதம் தொடங்கிய இரண்டாவது உலகப் போரில், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் அச்சு நாடுகள் என்னும் பெயரில் ஒரு பக்கமும், இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகள் நேச நாடுகள் என்னும் பெயரில் மறுபக்கமும் நின்று போரிட்டன. 1942க்குப் பிறகு, சோவியத் யூனியன் நேச நாடுகளுடன் இணைந்து கொண்டது.

போரிட்ட நாடுகளுடன் இணைந்து உலகின் வேறு பல நாடுகளும் அப்போரில் ஈடுபட்டன. ஈடுபடாத நாடுகளும் கூட பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகின. விலைவாசி உயர்வு, பொருள்களுக்குப் பற்றாக்குறை, மன உளைச்சல் என்று அனைத்து நாடுகளும் துன்பத்தில் ஆழ்ந்தன. இந்தியாவும் அதே நிலையில்தான் இருந்தது.

எனினும், 1942 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இந்தியாவிற்குப் புதிய நெருக்கடி ஒன்று வந்தது. அப்போது போரில் அச்சு நாடுகளின் கை ஓங்கியிருந்தது. 1942 மார்ச் 8 ஆம் நாள், ஜப்பான் பர்மாவைக் கைப்பற்றி விட்டது. அடுத்து இந்தியாவிற்குள் ஜப்பானியப் படைகள் நுழைந்து விடும் என்ற எதிர்பார்ப்பு எங்கும் எழுந்தது. அது பிரிட்டனுக்கு விழுந்த பெரும் அடியாகவும் இருந்தது.

இரண்டாம் உலகப் போர் தொடங்கிய நேரத்தில், இந்தியாவின் வைசிராயாக இருந்த லின் லித்தோ பிரபு, உலகப் போரில் இந்தியா பிரிட்டனின் பின்னால் அணிவகுத்து நிற்கிறது என்று, யாரையும் கேட்காமல் அறிவித்து விட்டார். 1941 வரையில் இந்தியாவில் இருந்த கட்சிகள், காங்கிரஸ் உட்பட எந்த முடிவும் எடுக்காமல் இருந்தனர் என்பதே உண்மை. ஆனால் இப்போது காட்சிகள் விரைந்து மாறிக்கொண்டிருக்கும் சூழலில், இந்தியாவைத் தன்பக்கம் உறுதியாக வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் பிரிட்டனுக்கு ஏற்பட்டது.

ஸ்டாப்போர்ட் கிரிப்ஸ்

அதன் பொருட்டு, பிரித்தானிய தொழில்துறை அமைச்சர் ஸ்டாப்போர்ட் கிரிப்ஸ் தலைமையில் ஒரு குழுவை பிரித்தானிய அரசு 1942 மார்ச் 13 ஆம் தேதி இந்தியாவிற்கு அனுப்பி வைத்தது. அக்குழு இந்தியா வந்து பல்வேறு கட்சியினரையும் சந்தித்தது. போரில் நேச நாடுகளுக்கு ஆதரவாக இந்தியா இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. ஆனால் அம்முயற்சி வெற்றி பெறவில்லை.

கிரிப்ஸ் குழு, அரசின் சார்பில், சில உரிமைகளை வழங்க முன்வருவதாகச் சொல்லியது. உலகப்போர் முடிந்தவுடன், இந்தியாவிற்கு முழுமையான தன்னாட்சி அதிகாரத்தைத் தருவதாகவும், இந்திய யூனியனில் சேர விரும்பாத பகுதிகள் தனித்து இருந்து கொள்ளலாம் என்றும், பாதுகாப்புத் துறை (இராணுவம்) மட்டும் பிரிட்டனிடம் இருக்கும் என்றும் உறுதிமொழிகள் தரப்பட்டன. இந்த உறுதிமொழிகளை ஏற்றுக்கொண்டு, உலகப்போரில் பிரிட்டனுக்கு இந்தியா துணை நிற்க வேண்டும் என்று கோரப்பட்டது.

கிரிப்ஸ் குழுவின் உறுதிமொழிகள், இந்தியாவில் இருந்த பெரிய கட்சிகள் எதற்கும் உடன்பாடானதாக இல்லை. இந்தியாவின் பிரிவினைக்கே இது வழிவகுக்கும் என்று காங்கிரஸ் கட்சி கருதியது. இவை மேலோட்டமான உறுதிமொழிகளாக உள்ளன. பாகிஸ்தான் பற்றி எதுவும் இல்லை என்பதால் இதனை ஏற்க முடியாது என்ற முடிவுக்கு வந்தது முஸ்லீம் லீக். ஒட்டுமொத்தமாகவே இதனைப் புறக்கணிக்க வேண்டும் என்றது இந்து மகா சபை. திராவிட நாடு கோரிக்கை பற்றி எதுவுமில்லை என்ற எண்ணம் திராவிடர் கழகத்திற்கு இருந்தது. பட்டியலின மக்களுக்கான உரிமைகள் எதுவும் இதில் கிடைக்காது என்று அம்பேத்கர் கருதினார். ஆக மொத்தம், கிரிப்ஸ் குழுவின் உறுதிமொழிகள் யாருடைய ஆதரவையும் பெறவில்லை. சோவியத் யூனியன் போரில் ஈடுபட்ட பிறகு, பொதுவுடைமைக் கட்சி மட்டும் நேச நாடுகளை ஆதரித்த போதும், வந்த நோக்கம் நிறைவேறாமல் அக்குழு பிரிட்டன் திரும்பியது.

காங்கிரஸ் கட்சிக்குள் இரு குழுக்கள் உருவாயின. ராஜாஜி போன்றவர்கள் பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்தனர். அபுல் கலாம் ஆசாத் போன்றவர்கள் அதனை எதிர்த்தனர். 1942 ஜூலையில், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தே ராஜாஜி விலகி விட்டார்.

காங்கிரஸ் கட்சியும் 1930 வரையில், இந்தியாவிற்கு முழு விடுதலை வேண்டும் என்று கேட்கவில்லை. சில கூடுதல் அதிகாரங்களும், தன்னாட்சி உரிமையும் மட்டுமே கேட்டது. 1930க்குப் பிறகே, விடுதலைக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

கிரிப்ஸ் குழு முயற்சி தோல்வியடைந்த பிறகு, 1942 ஆகஸ்ட் 7, 8 ஆகிய தேதிகளில் பம்பாயில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டங்கள் கூடின. இந்திய வரலாற்றில் மிக முதன்மையானதொரு மாநாடு என்று அதனைக் கூற வேண்டும். அம்மாநாட்டில், அழுத்தம் திருத்தமான ஒரு தீர்மானத்தைக் காங்கிரஸ் நிறைவேற்றியது.

“இந்தியாவின் விடுதலை என்பது மறுக்கப்பட முடியாத ஓர் உரிமை. இந்த உரிமையை நிலைநாட்டிக் கொள்வதற்கான அகிம்சை வழிப் போராட்டத்தைத் தொடங்க இம்மாநாடு அனுமதிக்கிறது. இப்போராட்டத்திற்காக இந்நாடு இதுவரை சேர்த்து வைத்துள்ள அனைத்துச் சக்திகளையும் பயன்படுத்த வேண்டும். எனவே இப்போராட்டத்திற்குத் தலைமை ஏற்று நாட்டை வழிநடத்திச் செல்ல இத்தீர்மானம் காந்தியாரைக் கேட்டுக் கொள்கிறது”

இவ்வளவு உறுதியாகத் தீர்மானம் இயற்றப்பட்டது. அது மட்டுமின்றி, அன்று காந்தியார் ஆற்றிய உரை நாட்டு மக்களிடையே ஒரு பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. காந்தியார் அன்று இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக உரையாற்றினார். அவர் தன் உரையில்,

“உடனடியாக எனக்கு விடுதலை வேண்டும். முடிந்தால் விடிவதற்கு முன்பே, காங்கிரஸ் விடுதலைப் போராட்டத்தில் வெற்றி பெற வேண்டும் அல்லது இந்த முயற்சியில் தன்னை அழித்துக் கொள்ள வேண்டும். குறுகிய வடிவிலான மந்திரம் ஒன்றை உங்களுக்கு நான் தருகிறேன். செய் அல்லது செத்து மடி என்பதே அந்த மந்திரம்”

என்று குறிப்பிட்டார். அந்த உரை நாடு முழுவதும் அன்றே பரவிவிட்டது. அடுத்த நாள் காலை, காந்தியார் கைது செய்யப்பட்டார். அது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதாக ஆகிவிட்டது.

அடுத்தநாள் முதல் இந்தியாவெங்கும் போராட்ட நெருப்பு எரியத் தொடங்கிற்று. போராட்டம் என்றால் அதுவரையில் இந்தியா பார்த்திராத ஒரு போராட்டம். தமிழகத்திலும் அந்தப் போராட்டம் விரைந்து பரவிற்று. குறிப்பாக, தென் மாவட்டங்களிலும், கோவையிலும் போராட்டங்கள் பெரிதாக வெடித்தன.

திருநெல்வேலி மாவட்டத்தின் தென்கிழக்குப் பகுதியைப் பனைமரக்காடு என்று கூறுவர். அந்தப் பகுதியில்தான் முதலில் கலவரம் தொடங்கியது. குலசேகரப்பட்டினம், சாத்தான்குளம், உடன்குடி, ஆறுமுகநேரி போன்ற ஊர்களில் எங்கு பார்த்தாலும் கலவரமாக இருந்தது. பனைமரக்காடு, கலவரக்காடாக மாறியது. செட்டியாபத்து, கொட்டங்காடு ஆகிய ஊர்களில் இருந்த கள்ளுக்கடைகளுக்குத் தீ வைக்கப்பட்டது.

கிறித்துவர்கள் மிகுதியாக வாழும் மெய்ஞ்ஞானபுரம் ஊரில் பல கட்டிடங்களுக்குத் தீ வைக்கப்பட்டது. அங்கு வந்த காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்திக் கூட்டத்தைக் கலைத்தனர். அப்போது தாங்களும் துப்பாக்கிகளை வைத்துக் கொள்ளவேண்டும் என்ற எண்ணம் போராட்டக்காரர்களுக்கு வந்தது. ஆனால் துப்பாக்கிகளுக்கு எங்கே போவது?

குலசேகரப்பட்டினத்திலிருந்த உப்பளங்களைக் காப்பாற்ற உப்புத்துறை என்று ஒன்றிருந்தது. அதில் வில்ப்ரெட் லோன் என்று ஓர் ஆங்கிலோ இந்தியர் இருந்தார். அவர் பொறுப்பில் சில துப்பாக்கிகள் இருந்தன. அவற்றைத் தாங்கள் கையகப்படுத்தி விடலாம் என்று கருதிய ஒரு போராட்டக் குழுவினர் ஒரு திட்டம் வகுத்தனர்.

செப்டம்பர் 19 அன்று, அருகில் உள்ள காவல்நிலையத்திற்குச் சென்றுவிட்டு இரவு 7 மணிக்கு, வில்ப்ரெட் லோன் தன் இருப்பிடத்திற்குத் திரும்பினார். அப்போது அவரைச் சட்டென்று சூழ்ந்துகொண்டு பத்துப் பேர் சரமாரியாக வெட்டிச் சாய்த்தனர். அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் அவர் இறந்து போனார்.

ஆயுதமேந்திய போராட்டங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடந்தே தீரும். ஆனாலும், அந்த அதிகாரிக்கு அதே இடத்தில் ஒரு நினைவுச் சின்னம் வைக்கப்பட்டது. அந்தச் சிலுவையையும் இப்போது யாரோ தகர்த்து விட்டனர் என்று பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் கூறுகின்றார். (தேச பக்தியோ, மதவெறியோ?!?)

சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் போராட்டம் மிகக் கடுமையாக நடந்துள்ளது. திருவாடானைச் சிறை உடைக்கப்பட்டது.. பல ஊர்களில் தந்திக் கம்பிகள் அறுக்கப்பட்டன. தண்டவாளங்கள் பெயர்க்கப்பட்டன. அஞ்சலகங்ளுக்குத் தீ வைக்கப்பட்டது. இப்படிக் கலவரம் நடந்த ஊர்கள் எண்ணிலடங்காதவை.

இதனையொட்டித் தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர். பம்பாயிலிருந்து சென்னைக்கு வந்த காமராஜரைக் கைது செய்ய அரக்கோணம் தொடர்வண்டி நிலையத்தில் காவலர்கள் காத்திருந்துள்ளனர். ஆனால் அவர் அங்கிருந்து எப்படியோ வெளியேறி, பல ஊர்களுக்கும் சென்று போராட்டத்தை ஊக்கப்படுத்தியுள்ளார். இறுதியில் அவருடைய சொந்த ஊரான விருதுநகரை நெருங்கும்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை அருகில் உள்ள சூலூர் என்னும் ஊரில் ஒரு விமானத்தளம் உள்ளது. அங்குதான் பெரிய கலவரம் நடந்துள்ளது. அங்கிருந்த 20 லாரிகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. அந்த இடத்திலேயே பலர் உயிரிழந்துள்ளனர்.

அரசாங்கத்தின் புள்ளி விவரப்படி, சென்னை மாகாணத்தில் மட்டும் 26 முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. அதில் 39 பேர் மாண்டுள்ளனர். 86 பேர் படுகாயமடைந்துள்ளனர். மூன்று காவல் நிலையங்கள் முழுமையாகத் தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன. 17 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. 6000 பேருக்கு மேல் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரசாங்கமே இவ்வளவு சொல்கிறதென்றால், உண்மையில் நடந்தது இதனை விடக் கூடுதலாகத்தான் இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். மக்களின் போராட்டமும், வெடித்த வன்முறைகளும் வெளிப்படையாகச் சொல்லப்பட்டன. ஆனால் அரசு நடத்திய பயங்கரவாதம் வெளியில் சொல்லப்படவில்லை. பல ஊர்களில், ஆண்களும், பெண்களும் நிர்வாணமாக நிறுத்தி வைக்கப்பட்டு, கடுமையான சாட்டையடிகளுக்கும், செருப்படிகளுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர். . இன்னும் சொல்ல முடியாத பல சித்திரவதைகள் நடத்தப்பட்டுள்ளன.

சிறை சென்றவர்கள் வீடு திரும்பச் சில ஆண்டுகள் ஆகியுள்ளன. வில்ப்ரெட் லோன் கொலைவழக்கில், ராஜகோபாலன், காசிராஜன் ஆகியோருக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அது நிறைவேற்றப்படுவதற்குள், இந்தியா விடுதலை பெற்றுவிட்டதால், அவர்களுக்குப் பொதுமன்னிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு வெளியேறியதற்குப் பல காரணங்கள் இருந்தன. அதில் ஆகஸ்ட் புரட்சியும் ஒரு சிறு காரணம் என்பதை மறுக்க முடியாது.

அந்த அளவில் அப்போராட்டம் ஒரு வெற்றிப் போராட்டம் என்பது உண்மை என்றாலும், காந்தியார் போற்றிப் பாதுகாத்துவந்த அகிம்சை, அப்போராட்டத்தில் தோற்றுவிட்டது என்பதும் உண்மைதான்.

(களங்கள் தொடரும்)
அன்புடன்
சுப.வீரபாண்டியன்

பயன்பட்ட நூல்கள்
==================

1. ராஜதுரை, எஸ்.வி. – “பெரியார்: ஆகஸ்ட் 15” – விடியல் பதிப்பகம் , கோவை-15

2. சிவஞானம், ம.பொ. – “விடுதலைப் போரில் தமிழகம்” பூங்கொடிப் பதிப்பகம், சென்னை-4

3. சிவசுப்பிரமணியன், ஆ. – “ஆகஸ்ட் போராட்டம்” – காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில்

4. சு. துரைசாமி – “1942 ஆகஸ்ட் புரட்சி” – விடியல் பதிப்பகம், கோவை-15

5. ஸ்டாலின் குணசேகரன் (தொ.ஆ) – “விடுதலை வேள்வியில் தமிழகம்”

6. சு.போ. அகத்தியலிங்கம் – “விடுதலைத் தழும்புகள்” – தமிழ்ப் புத்தகாலயம், சென்னை-17

Disclaimer: எங்கள் செய்தி இணையதளத்தில் வரும் தொடர்கள் யாவும் பத்திரிகை டாட் காமிற்கே பிரத்தியேக, தனிப் பிரசுர உரிமை வழங்கப்பட்டுள்ளது . எனவே, பத்திரிகை டாட் காமின் முன் அனுமதியின்றி இதனை முழுவதுமாகவோ இல்லை இதில் வரும் சில பகுதிகளையோ உங்கள் பயன்பாட்டிற்கு உபயோகிக்க அனுமதியில்லை.